நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

3.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 7 லட்சம்! - பெரிய வருமானம் தரும் பெயரில்லா முருங்கை!

அறுவடை செய்த முருங்கைக் காய்களுடன் அரவிந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடை செய்த முருங்கைக் காய்களுடன் அரவிந்தன்

மகசூல்

‘முருங்கையைப் போட்டவன், வெறுங்கையா நின்னதில்ல’ எனச் சொலவடை சொல்வார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் அதிக மகசூல் மற்றும் மழைக்காலத்திலும் மங்காத பச்சைநிறம் உடைய இரண்டு முருங்கை ரகங்களின் மகரந்தங்களை இணைத்துப் புது ரக முருங்கையை உருவாக்கி இருக்கிறார். அந்த முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூலும் எடுத்து வருகிறர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அரவிந்தன்.
3.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 7 லட்சம்! - பெரிய வருமானம் தரும் பெயரில்லா முருங்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி நகரில் இருக்கிறது அரவிந்தனின் முருங்கைத் தோட்டம். மரங்களிலிருந்து பறித்த காய்களைச் சேகரித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். “பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். அப்பா காலத்துல நெல், வாழை, முருங்கைதான் முக்கிய விவசாயம். 12-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். கேரளாவிலும் சென்னையிலும் பாத்திரக் கடைங்கள்ல பத்து வருஷம் வேலை பார்த்தேன். தொடர்ந்து அப்பாவுக்கு உதவியா விவசாயத்தைப் பார்த்துட்டு வந்தேன். ஆரம்பத்துல ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சோம். நாலஞ்சு வருஷம் மகசூல் கிடைச்சாலும், பிறகு மகசூல் குறைய ஆரம்பிச்சுது. பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தெளிச்சாலும் கட்டுப்படலை.

செலவுக்கேத்த மகசூலும் இல்லை. ஒரு கட்டத்தில விவசாயத்து மேலயே வெறுப்பு வந்துடுச்சு. அந்த நேரத்துலதான் நண்பர் ஒருவர் இயற்கை விவசாயத்தைப் பத்திச் சொன்னார். அதோட, பசுமை விகடனையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து படிச்சதுல இயற்கை விவசாயத்தைப் பத்திப் பல விஷயம் தெரிஞ்சுகிட்டேன். பலதானியம் விதைச்சு, நிலத்த வளப்படுத்தி முதல்ல ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில ‘யாழ்ப்பாணம்’ ரக முருங்கையைச் சாகுபடி செஞ்சேன். கீரைகள் பச்சை நிறத்திலும், பூக்கள் அதிகம் உதிராமலும், காய்கள் திரட்சியாகவும் இருந்துச்சு. மகசூலும் ஓரளவுக்கு இருந்ததால அடுத்த வருஷம் முழுமையா இயற்கை முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். தொடர்ந்து 12 வருஷமா நஞ்சில்லா விவசாயம்தான் செய்றேன்.

யாழ்ப்பாணம் ரகம் இருக்கும்போதே, குருஷ், சாகவச்சேரி ரகங்களையும் சாகுபடி செஞ்சேன். இதுல, ’குருஷ்’ ரகத்துல காய்ப்பு அதிகம். ‘சாகவச்சேரி’ ரகத்தோட காய்கள் மழைக்காலத்திலயும் நிறம் மாறாது. அதே அடர்பச்சை நிறத்துல இருக்கும். மழைநேரத்தில சாகவச்சேரி ரகக் காய்களுக்குச் சந்தையில நல்ல விலை கிடைச்சது. அந்த நேரத்துல எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. இந்த ரெண்டு ரகப் பூக்களோட, மகரந்தங்களையும் ஒன்னாச் சேர்த்து, புதுசா ஒரு முருக்கை ரகத்தை உருவாக்கலாம்னு தோணுச்சு. ‘சாகவச்சேரி’ ரக முருங்கை மரத்தில இருந்து பூக்களைப் பறிச்சு, வெள்ளைத்துணி விரிச்சு வெயில்ல காய வெச்சேன். அதுல ஒட்டியிருந்த மகரந்தங்களைச் சேகரிச்சு, ‘குருஷ்’ முருங்கை மரத்துல இருந்த பூக்கள்ல ஒட்ட வெச்சேன்.

அறுவடை செய்த முருங்கைக் காய்களுடன் அரவிந்தன்
அறுவடை செய்த முருங்கைக் காய்களுடன் அரவிந்தன்

அந்தப் பூவுல இருந்து காய்ச்ச காய்கள், திரட்சியா இருந்துச்சு. அந்தக் காய்களோட விதைகளை முளைக்க வெச்சேன். அதோட காய்ப்புத்திறன் அதிகமாக இருந்துச்சு. இந்த முருங்கைக் காய்களோட தோல் கொஞ்சம் கடினமா இருக்கு. அதனால 3 நாள்வரைக்கும் கூட இருப்பு வைக்கலாம். வாடல்தன்மையும் குறைவு, சதைப்பற்றும் அதிகமாக இருக்கும். நுனிப்பகுதி வளையாத நீட்டுப்போக்கான காய்கள். இதுக்கு தண்ணியும் அதிகம் தேவைப்படாது. இதுதான் நான் உருவாக்குன புது ரகத்தோட சிறப்பு. இந்த ரகத்துக்கு நான் பெயர் எதுவும் வைக்கலை. இந்தப் பெயரில்லா ரகம்தான் விவசாயிகள் மத்தியில எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. இந்த மூன்றரை ஏக்கர் செம்மண் நிலத்தில இந்த ரகத்தைச் சாகுபடி பண்ணி மகசூல் எடுத்துட்டு வர்றேன்” என்றவர், நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

காய் பறிப்பில்...
காய் பறிப்பில்...

“ஒரு ஏக்கர்ல 100 மரங்கள் இருக்கு. வருஷத்துல 8 மாசங்கள்தான் காய் பறிக்க முடியும். அதிலும், தை, மாசி, வைகாசி, ஆனினு 4 மாசங்கள் நல்ல விலை கிடைக்கும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 200 கிலோ வரைக்கும் காய் கிடைக்குது. அந்த வகையில, 100 மரங்கள் மூலம் 20,000 கிலோ வரை காய் கிடைக்குது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 7 ரூபாயில இருந்து சீசன் காலங்கள்ல அதிகபட்சமா 80 ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைந்தபட்சம் 10 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே வருஷத்துக்கு 2,00,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது. இதுல தொழுவுரம், களை, இடுபொருள் தயாரிப்பு, பறிப்புக்கூலினு 30,000 ரூபாய் வரை செலவாகும். மீதமுள்ள 1,70,000 ரூபாய் லாபம்தான். இந்தக் கணக்கில மூன்றரை ஏக்கர்ல, 70,000 கிலோ காய் விற்பனைமூலம் வருஷத்துக்கு 7,00,000 ரூபாய் வருமானமும், அதில் செலவு 1,05,000 ரூபாய் போக மீதி, லாபமாக் கிடைக்கும். இதுல, மகசூலையும், விலையையும் ஒருபடி குறைவாத்தான் சொல்லிருக்கேன். சாத்தான்குளம், திசையன்விளை சந்தை தவிர நெல்லை, நாகர்கோவிலுக்கும் காய்களை அனுப்புறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, அரவிந்தன், செல்போன்: 99412 04063

இப்படித்தான் சாகுபடி!

ரு ஏக்கர் நிலத்தில் முருங்கைச் சாகுபடி குறித்து அரவிந்தன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் ஏற்றது. தனிப்பட்டம் எதுவுமில்லை என்றாலும் ஐப்பசி, கார்த்திகை போன்ற அதிக மழை பெய்யும் மாதங்களில் நடவு செய்யக் கூடாது. தேர்வு செய்த நிலத்தில், ஒரு வாரம் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை மற்றும் குச்சிக்குக் குச்சி 20 அடி இடைவெளியில், ஒரு அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். இந்தக் கணக்கில் ஒரு ஏக்கரில் 100 குழிகள்வரை எடுக்கலாம். குழிகளை 4 நாள்கள் ஆறவிட்டு, குச்சிகளை அரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

குழிக்குள் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு போட்டால் வேர்ப்பகுதியைப் பூச்சிகள் தாக்காமல் தடுக்கலாம். குச்சியை நட்டுவிட்டு மண் அணைத்து அன்றே தண்ணீர் விட வேண்டும். நடவு செய்யப்படும் குச்சிகள், கை மணிக்கட்டு தடிமன் சுற்றளவில், இரண்டரை அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதிக காய்ப்பு, காய்கள் திரட்சியின் அடிப்படையில் தாய் மரத்தைத் தேர்வு செய்து குச்சிகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நடவுக்கு முன்பு குச்சியின் ஒரு முனையை ஜீவாமிர்தத்தில் முக்கி எடுத்து நடலாம்.

குச்சிகளில் முளைத்த இலைகளில் இலைப்புழுக்களின் தாக்குதல் இருக்கும். இதைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் 150 மி.லி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். ஒருவாரம் இடைவெளியில் மூன்று முறை இப்படித் தெளிக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டு நீர் மூலம் கொடுக்கலாம்.

3-ம் மாதத்தில் தூர்ப்பகுதியில் 10 கிலோ மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும். தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒரு முறை இப்படி வைக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் பூப்பூக்கத் தொடங்கும். 120 முதல் 130-ம் நாளில் காய் பறிக்கலாம். முருங்கையைப் பொறுத்தவரையில், பூப்பூக்கும் நேரம், மழைக்காலம், மேகமூட்டம் ஆகிய காலத்தில் நூற்புழுக்களின் தாக்குதல் இருக்கும்.

இவை, இலை, பூ, காம்புகளைச் சாப்பிடும். இவற்றைத் தவிர்க்கப் பூப்பூப்பதற்கு முன்பாகவே 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். இரண்டாம் வருடத்திலிருந்துதான் காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டிற்கு 8 மாதங்கள்வரை காய்கள் பறிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காய்ப்பு இருக்காது. 3 மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்துச் செய்து வந்தால் தொடர்ந்து காய்ப்பு இருக்கும்.

விவசாயிகளின் பெயரிலேயே முருங்கை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம், அழகிவிளை, சாகவச்சேரி, குருஷ், டேனியல் ஆகிய முருங்கை ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இதில் குருஷ் மற்றும் டேனியல் ஆகிய இரண்டு ரகங்களைக் கண்டறிந்து சாகுபடி செய்து, பரவலாக்கிய விவசாயியின் பெயரையே ரகத்திற்கும் பெயராகச் சூட்டி இருக்கிறார்கள்.

அதிக மகசூலுக்குக் கவாத்து அவசியம்!

னவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்தால் நல்லது. ஆண்டிற்கு ஒருமுறை கவாத்துச் செய்வது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது கவாத்துச் செய்ய வேண்டும். இதனால், காய்ப்புத் தன்மை அதிகரிப்பதுடன், காய்களின் தரமும் குறையாமல் இருக்கும். மரங்களின் பராமரிப்பையும் காய்கள் பறிப்பையும் எளிதாக்கும் விதமாக அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்வதைத் தடுக்கலாம். கவாத்துச் செய்யும்போது மரத்தின் நான்கு புறக்கிளைகளையும் வெட்டிவிட வேண்டும். தூர்ப்பகுதியில் வெட்டும்போது தூர்ப்பகுதி இரண்டாகப் பிளவுபட்டுவிடாமல் வெட்ட வேண்டும். அவ்வாறு பிளவுபட்டால், பிளவுப்பகுதியில் பூச்சித்தாக்குதல் ஏற்படும். எனவே, கவாத்துச் செய்வதில் அதிக கவனம் தேவை.