Published:Updated:

3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம்! - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு!

அறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்

தொழில்நுட்பம்

மீன் வளர்ப்பு உத்தரவாத வருமானம் தரக்கூடிய உபதொழிலாகத் திகழ்கிறது. காரணம், சந்தை வாய்ப்பு மிகவும் எளிது. வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேடிச் சென்று வாங்குவதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் விலைக்குறைவு ஏற்படுவதில்லை. எப்போதும் நிலையான விலை கிடைக்கிறது. குறிப்பிட்ட நாள்களுக்குள் அறுவடை செய்து விற்பனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
மீன் வளர்ப்புத் தொட்டி
மீன் வளர்ப்புத் தொட்டி

உற்பத்தி செய்வதிலும்கூட, சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பிரச்னைகள் இல்லை. மீன் வளர்ப்புத் தொழிலில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், ஆர்வம் உள்ள அனைவராலும் கால் பதிக்க முடியாத சூழல் உள்ளது. காரணம் இன்றைய கால மாற்றத்தில் இதற்கான குளம் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிக தண்ணீர் வசதியும் தேவைப் படுகிறது. இந்நிலையில்தான் நாம் நினைத்த இடத்தில் மீன் வளர்க்க கைகொடுக்கிறது ஒரு தொழில்நுட்பம். பயோ பிளாக் தொழில்நுட்ப முறையில் தொட்டியில் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம். தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ மனோகர், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்தித்தோம். இதுவரை நாம் பார்த்திராத விநோத தொட்டிகள்... இரும்பு வலை மற்றும் தார்பாலின் சீட்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொட்டியில் சுறுசுறுப்பாக மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. தொட்டிக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காற்றில் தண்ணீர் சுழன்றுகொண்டிருந்தது. தொட்டிகள்மீது நேரடியாகச் சூரிய ஒளி படாத வகையில் நிழல் வலையில் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. நின்ற நிலையில் தொட்டிக்குள் வலையை விட்டு மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த ராஜ மனோகர், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘எனக்குத் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிதான் பூர்வீகம். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க அப்பா அரசு ஊழியர். அதோட விவசாயத் தையும் கவனிச்சிக்கிட்டார். நான் பல வருஷமா தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்துல தான் இருக்கேன். எம்.பி.ஏ படிச்சிட்டு, சவுதி அரேபியா, குவைத்ல பெட்ரோலிய நிறுவனங்கள்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அங்கதான் இந்தப் பயோ பிளாக் முறையில தொட்டிகள்ல மீன் வளர்க்குறதைப் பார்த்தேன். அங்க மீன்கள் வளர்க்குறதுக்கான குளம், தண்ணீர் வசதியெல்லாம் கிடையாது. மிகவும் குறைவான பரப்புல, குறைவான நல்ல தண்ணீரை வெச்சி இந்த முறையிலதான் அங்க மீன் வளர்க்குறாங்க.

அறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்
அறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யோரம் என்ற பேராசிரியர்தான் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிச்சு அறிமுகம் செஞ்சிருக்கார். தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட இன்னும் பல நாடுகள்ல பயோ பிளாக் முறையில தொட்டியில மீன் வளக்குறாங்க. இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் வட மாநிலங்கள்ல, சில வருஷமா இந்த முறையில மீன், இறால் எல்லாம் வளர்க்குறாங்க. கேரளாவுலயும் இப்ப இது அதிகரிச்சிக்கிட்டு இருக்கு. நான் ரெண்டு வருஷமா, பயோ பிளாக் முறையில தொட்டியில மீன் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

1,000 லிட்டர் தண்ணீர், 40 கிலோ மீன்

இந்த முறையில 1,000 லிட்டர் தண்ணீரில் 35-40 கிலோ மீன்கள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இதுவே குளத்துல வழக்கமான முறையில் மீன் வளர்த்தா 1,000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ மீன்கள்தான் உற்பத்தி செய்ய முடியும். காரணம், குளங்கள்ல அதிக எண்ணிக்கையில மீன்கள் வளர்த்தோம்னா, தேவையான அளவு ஆக்சிஜன் அங்க கிடைக்காது. அதுமட்டுமல்லாம, மீன்களுக்குக் கொடுக்கும் தீவனங்களோட கழிவுகளும், மீன்களோட எச்சமும் தண்ணியிலக் கலந்து நச்சுத்தன்மையுள்ள அமோனியாவாகவும், நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாகவும் மாறும். அதனால குளத்துல குறைவான எண்ணிக்கையிலதான் மீன்கள் வளர்க்க முடியும்.

மீன் பிடித்தல்
மீன் பிடித்தல்

பயோ பிளாக் முறையில, நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிர்களை நாம உருவாக்குறதுனால, அது மீன்களோட எச்சங்களையும் தீவனக்கழிவுகளையும் உணவாக உட்கொண்டு பியோபிளாக் என்ற துகள்களை வெளியிடுது. இந்தத் துகள்கள் மீன்களுக்கு மிகவும் சத்தான உணவாகிடுது. இந்தத் துகள்கள்ல 49 சதவிகிதம் புரோட்டீன், 11 சதவிகிதம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 சதவிகிதம் கொழுப்புச் சத்தும் அடங்கி யிருக்கு. மீன்களுக்குத் தேவையான அமிலங்களும் நுண்ணூட்டச் சத்துகளும்கூட இதுல அடங்கியிருக்கு. இந்தத் துகள்கள் தண்ணீர்ல 24 மணிநேரமும் மிதந்து மீன்களுக்கு உணவாகப் பயன்படுது. இதனால தீவனச் செலவும் குறையுது. தொட்டிக்குள் எல்லா நேரமும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க, மோட்டார் மூலமா 24 மணிநேரமும் காற்று செலுத்துறோம்’’ என்றவர் இதன் தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொட்டிக்கு 900 குஞ்சுகள்

‘‘இந்தத் தொட்டியோட சுற்றளவு 4 மீட்டர், உயரம் 1.5 மீட்டர். இதன் கொள்ளளவு 15,000 லிட்டர். ஆனா, இதுல 13,000 லிட்டர் தண்ணீர் நிரப்பியிருக்கோம். ஒரு தொட்டிக்கு 800-1,200 மீன் குஞ்சுகள் விடலாம். ஏரி வெளவால், திலேபியா, ரூப் சந்த், சாதாரணக் கெண்டை மீன்கள் (ரோகு, கட்லா, மிர்கால்) ஆகிய மீன் குஞ்சுகள் விடலாம். ஒரு தொட்டியில் ஒரே ரகக் குஞ்சுகளைத்தான் விட வேண்டும். 5 கிராம் எடை கொண்ட 900 குஞ்சுகளை நாங்க விட்டுருக்கோம்.

3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம்! - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு!

தீவனம்

முதல் 6 வாரங்களுக்குத் தினமும் மீன் குஞ்சுகளின் மொத்த எடையில் 15 சதவிகிதம் தீவனம் கொடுக்கணும். இதை 5 முறை பிரிச்சு கொடுக்கணும். பிறகு, 3-4 சதவிகிதமும், 4-ம் மாதத்திலிருந்து 6-ம் மாதம்வரை ஒரு சதவிகிதமும் தீவனம் கொடுக்கணும். தீவனம் கடைகள்ல கிடைக்கும். அதில் கடலைப்பிண்ணாக்கு 30 சதவிகிதம், அரிசி தவிடு 36 சதவிகிதம், மரவள்ளிக் கிழங்கு மாவு 14 சதவிகிதம், கருவாட்டுத்தூள் 19 சதவிகிதம், தாது உப்புகள் 1 சதவிகிதமும் கலந்திருக்கும்.

திலேபியா
திலேபியா

பரிசோதனை

பரிசோதனை உபகரணங்கள் மூலம் அவ்வப்போது தண்ணீரை ஆய்வு செய்து, அமில-காரத்தன்மை உள்ளிட்ட வைகளின் அளவைப் பார்க்கணும். கார அமிலத்தன்மையை முறையா பராமரிக்கணும். பரிசோதனை செய்றது கஷ்டமான வேலை இல்லை. சுலபமா தெரிஞ்சுக்கலாம்.

ஏரி வெளவால்
ஏரி வெளவால்

மகசூல்

குஞ்சு விட்டதிலிருந்து 4-ம் மாசத் திலிருந்து அறுவடை செய்யலாம். 350-400 கிராம் எடையுள்ள மீன்களை மட்டும் பிடிச்சு விற்பனை செய்யலாம். 6-ம் மாதம் 500 கிராமுக்கு மேல் எடையுள்ள மீன்களை அறுவடை செய்யலாம். நாங்க 4 முதல் 6 மாதங்கள்ல 420 கிலோவுக்கு அதிகமான மீன்கள் மகசூல் எடுக்குறோம். ஒரு கிலோ 120-150 ரூபாய் விலை போகுது. குறைந்தபட்சம் 100 ரூபாய்னே கணக்கு வெச்சுகிட்டாலும் 42,000 ரூபாய் வருமானம் எடுக்குறோம். மீன் குஞ்சுகள், நுண்ணுயிரி கரைசல், தீவனம், ஆக்சிஜன் மோட்டாருக்கான மின்சாரக் கட்டணம், மீன் அறுவடைனு 22,260 ரூபாய் செலவாகிடும். அதுபோக 19,740 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தொட்டி யிலிருந்து வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் எடுக்குறது மூலமா 39,480 ரூபாய் லாபம் பார்க்கலாம். எங்ககிட்ட 8 தொட்டிகள் இருக்கு. அது மூலமா வருஷத்துக்கு 3,15,840 ரூபாய் லாபம் எடுக்குறோம். ஒரு தொட்டிக்கு 400 சதுர அடி வீதம் 8 தொட்டிக்கு அதிகபட்சம் 3,200 சதுரஅடி பரப்புலதான் இதைச் செய்றோம்’’ என்றவர் நிறைவாக,

‘‘இதுவே வழக்கமான முறையில குளத்துல வளர்த்தா, ஒரு ஏக்கர் பரப்பு இருந்தா கூட இந்தளவுக்கு வருமானம் எடுக்குறதெல்லாம் சாத்தியமே இல்லை. இந்த பயோ பிளாக் முறையில தொட்டியில மீன் வளர்த்து நல்ல லாபம் பார்க்கலாம். ஆனா, அதுக்கு கடுமையான உழைப்பும், தொடர் கண்காணிப்பும் ரொம்ப அவசியம்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, ராஜ மனோகர், செல்போன்: 73057 61622

தொட்டி தயாரிப்பு

3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம்! - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு!

சுற்றளவு 4 மீட்டர், உயரம் 1.5 மீட்டர் அளவில் தொட்டியைத் தயார் செய்து 13,000 லிட்டர் தண்ணீர் நிரப்ப வேண்டும். இதில் 100 மி.லி குளோரின் போட வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து 8-10 கிலோ கல் உப்பு (அயோடின் நீக்கப்பட்டது) போட வேண்டும். தண்ணீரின் அமில-காரத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். இது 6.5 பி.ஹெச்-க்கு குறைவாக இருந்தால், 500 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை, தனியாக ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, தொட்டிக்குள் பரவலாக ஆங்காங்கே ஊற்ற வேண்டும். 8 பி.ஹெச்-க்கு மேல் அமில காரத்தன்மை இருந்தால், 330 கிராம் சமையல் சோடாவைத் தனியாக ஒரு வாளியில் 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தொட்டிக்குள் ஆங்காங்கே பரவலாக ஊற்ற வேண்டும்.

ஆரம்பக்கட்ட செலவுகள்

ரும்புக் கம்பிகள் மற்றும் தார்பாலின் சீட்டுகள் கொண்டு ஒரு தொட்டி அமைக்க, 35,000 ரூபாய்ச் செலவாகும். இது 5 முதல் 8 ஆண்டுகள் வரை உழைக்கும். இதற்கு நிழல்வலை அமைக்க 1,200 ரூபாய், ஆக்சிஜன் செலுத்துவதற்கான 90 வாட்ஸ் மோட்டார், குழாய்கள், தண்ணீரில் உள்ள அமில காரத்தன்மை, அமோனியா ஆகியவற்றின் அளவை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் வாங்க 14,000 ரூபாய்ச் செலவாகும்.

படிப்படியாக வளர்க்கலாம்

யோ பிளாக் முறையில் தொட்டியில் மீன் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள், முதலில் இரண்டு தொட்டிகள் மட்டும் வைத்து, இதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, படிப்படியாக, 4 தொட்டிகள், 6 தொட்டிகள் என விரிவுபடுத்தலாம்.

நுண்ணுயிரிகளுக்கான கலவை தயாரிப்பு

குளத்தில் பாசிபடிந்த தண்ணீர் 400 மி.லி, குளத்து மண் 500 கிராம், நாட்டுச்சர்க்கரை 500 கிராம், தயிர் 100 மி.லி, கோதுமை மாவு 1 கிலோ, வைட்டமின் சி மாத்திரை 4. இவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். அடுத்த 48 மணிநேரத்தில் நுண்ணுயிரிகள் உருவாகிவிடும். ஒரு துளையின் வழியாக அவ்வப்போது காற்று செலுத்த வேண்டும். அடுத்த 5 நாள்கள் கழித்து, தொட்டியில் ஊற்ற வேண்டும். இது ஒரு தொட்டிக்கான அளவு. அடுத்த 7 நாள்களில் நுண்ணுயிரிகள் தண்ணீரில் பரவலாகக் கலந்துவிடும். பிறகு, தண்ணீரைப் பரிசோதிக்க வேண்டும். அமில-காரத்தன்மை 7-8 பி.ஹெச் இருக்க வேண்டும். அமோனியா 0.5 பி.பி.எம் இருக்க வேண்டும். அமோனியாவின் அளவு அதிகமாக இருந்தால் காலை 9-10 மணிக்குள் 200 கிராம் நாட்டுச் சர்க்கரை போட வேண்டும்.

மாடியிலும் வளர்க்கலாம்

ந்த முறையில் மீன் வளர்க்க, குறைந்த அளவு தண்ணீர் பயன்படுத்துவதால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. வீட்டின் தோட்ட பகுதிகளிலும் மாடியிலும் மீன்கள் வளர்க்க முடியும். அதன் மூலம் பெண்கள் வீட்டிலிருந்து வருமானம் ஈட்ட முடியும். ஓர் அறுவடைக் காலத்துக்குத் தண்ணீர் மாற்றத் தேவையில்லை. அல்லது குறைந்தளவு தண்ணீர் மாற்றினால் போதுமானது. அறுவடைக்காலம் முடிந்ததும், தொட்டியில் உள்ள தண்ணீரை வயல்களுக்கோ, வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரம் செடி கொடிகளுக்கோ பாய்ச்சலாம். இது சத்துகள் நிறைந்த தண்ணீராகும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

வங்கிக் கடன் கிடைக்கும்

“மீன் வளர்ப்புல ஆர்வம் உள்ளவங்க, எங்களோட பயோ பிளாக் மீன் வளர்ப்பை நேரடியாக இங்க வந்து பார்க்கலாம். ஆலோசனைகளும் பெறலாம். நம் நாட்டில் பல்வேறு மாநிலங்கள்ல உள்ள பயோ பிளாக் மீன் வளர்ப்பு விவசாயிகள் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஓர் அமைப்பையும் நடத்துறோம். விவசாயிகள் அந்தந்த மாவட்டங்கள்ல உள்ள தமிழக மீன்வளத்துறை அலுவலகத்துலயும் இது தொடர்பாக ஆலோசனை பெறலாம். இதற்கு வங்கிக் கடனும் கிடைக்கும்” என்கிறார் ராஜ மனோகர்.