Published:Updated:

ஒரு ஏக்கர், 120 நாள்கள், ரூ. 2,48,760 குதூகல வருமானம் கொடுக்கும் குறும்புடலை!

அறுவடை செய்த புடலையுடன் ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடை செய்த புடலையுடன் ராமசாமி

மகசூல்

குறைந்த வேலையாட்கள், குறைந்த பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றால் தான் பந்தல் காய்கறிகளை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள். அந்த வகையில் இயற்கை முறையில் குட்டை ரகப் புடலையைப் பந்தலில் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமசாமி.

விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கங்கர் செவல்பட்டி. கிராமத்தின் கடைசியில் உள்ளது ராமசாமியின் புடலைத் தோட்டம். பந்தலில் தொங்கிக்கொண்டிருந்த புடலங் காய்களைப் பறித்துக்கொண்டு இருந்தார் ராமசாமி. பறித்து முடித்த பிறகு நம்மிடம் பேசத் தொடங்கினார். “எங்க தாத்தா காலத்துல மானாவாரியா பருத்தி, மிளகாய், சோளம், மக்காச்சோளம் சாகுபடி செய்தாங்க. அப்பா போலீஸ்ல சேர்ந்ததுனால அதுக்குப் பிறகு, விவசாயம் செய்யல. நிலத்த குத்தகைக்கு விட்டுட்டோம். 10-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அப்பவே நல்ல மார்க் எடுத்தேன். மூணு பாடத்துல நூத்துக்கு நூறு. தொடர்ந்து படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, குடும்ப சூழ்நிலையால என்னைப் படிக்க வைக்கல.

புடலைத் தோட்டம்
புடலைத் தோட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சின்ன வயசுல இருந்தே விவசாயம் பிடிக்கும்கிறதுனால, வேற வழியில்லாம விவசாயத்துக்கு வந்தேன். விவசாயத்தைக் கத்துக்கிறதுக்கே ரெண்டு வருஷமாச்சு. அடியுரமா குப்பை உரத்தை மட்டும் போட்டு மானாவாரியில சோளம், மக்காச்சோளத்தை விதைச்சோம். நல்ல மகசூல் கிடைக்கணும்னா, ‘ரசாயன உரம் போட்டாத்தான் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்’னு கிராமத்துல மத்த விவசாயிகள் சொன்னாங்க. மகசூல் கூடக் கிடைச்சாத்தான் நாலு காசு கையில தங்கும்னு இஷ்டத்துக்கு உரத்தைத் தூவினேன். அதுக்குப் பிறகு, தோட்டத்து வெள்ளாமைக்கு மாறி, கொய்யா, மிளகாய், தக்காளி, கத்திரிச் சாகுபடி செஞ்சேன். அதுவும் ரசாயன உரத்துலதான். ஆரம்பத்துல காயா காய்ச்சுத் தள்ளுச்சு. அடுத்தடுத்த நடவுகள்ல காய்ப்பு குறைஞ்சுடுச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பூச்சி, நோய்த்தாக்குதலும் அதிகமாயிடுச்சு. எதுக்குமே கட்டுப்படலை. வேலையாளு கூலிக்குக்கூடப் பறிப்பு கட்டல (கிடைக்க வில்லை). மகசூலு எடுக்க மூட்டை மூட்டையா ரசாயன உரம் வாங்கித் தூவி, மண்ணு சிமென்ட் தரைபோல மாறினதுதான் மிச்சம். அப்ப என்னோட நண்பர் ஒருவர், ‘ரசாயன உரம் பயன்படுத்தினா மண்ணு மலடாகிப் போகும்னு உனக்குத் தெரியாதா ராமசாமி. இஷ்டத்துக்கும் உரத்தைத் தூவி இப்போ அய்யோ... அம்மான்னா எப்படி? தொழு உரத்துக்கும் அடுப்புச் சாம்பலுக்கும் மிஞ்சுன உரம் உண்டா? ரசாயன உரத்தைக் கைவிடு. நம்ம பாரம்பர்ய முறையில விவசாயம் செய். முதல்ல குறைஞ்ச பரப்பளவு நிலத்துல செய். நம்பிக்கை வந்தோன்னே (வந்தவுடன்) ஏக்கர் கணக்குல செய்’னு சொல்லி வழிகாட்டிப் பசுமை விகடனையும் எனக்கு அறிமுகப் படுத்தினார்.

அறுவடை செய்த புடலையுடன் ராமசாமி
அறுவடை செய்த புடலையுடன் ராமசாமி

பசுமை விகடன் காட்டிய பந்தல் விவசாயம்

அதுல போட்டுருந்த மகசூல் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்பிக்கை வந்துச்சு. உழவுலே இருந்து சந்தையில விக்கிறது வரைக்கும் முழுசாப் போட்டிருந்தது. காணாக்குறைக்கு அந்த விவசாயியோட போன் நம்பரும் இருந்ததுனால ஏதும் சந்தேகம்னா போனைப் போட்டுப் பேசிக்கிறதுக்கும் வசதியா இருந்துச்சு. ‘பசுமை ஒலி’ங்கிற பகுதியில இருக்க நம்பருக்குப் போனைப் போட்டா இடுபொருள்களைப் பத்தி தெளிவா சொல்லிச்சு. அந்த ஒரு புத்தகத்தைப் படிச்சப்பவே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதுலேந்து விடாம, தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். கேத்தனூர் பழனிச்சாமி, ஈச்சநத்தம் செல்வராஜ், விருதுநகர் ராதாகிருஷ்ணன்னு பந்தல் சாகுபடி செய்ற விவசாயிகளோட சாகுபடி கட்டுரைகளைப் படிச்சேன். எங்க ஊரு ராதாகிருஷ்ணனின் புடலைத் தோட்டத்தை நேர்ல போயி பார்த்தேன்.

புடலை அறுவடையில்
புடலை அறுவடையில்

‘நாமளும் பந்தல் சாகுபடி செய்யலாம்’னு தோணுச்சு. சிவகாசியில 2014-ம் வருஷம் நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அங்க சோளபட்டியைச் சேர்ந்த அமுல்ராஜுங்கிற இளைஞர் பிரமாதமாப் பேசினார். கலவைக்கரைசல், மண்புழு உரக் கஷாயம், மூலிகைக் கரைசல்னு பலவகை கரைசலைப் பத்திப் பேசினாரு. ஒரு நாள் தோட்டத்துக்கும் அழைச்சுட்டு வந்தேன். அவரும் பந்தல் சாகுபடியை ஊக்குவிச்சார். இப்போ 7 வருஷமா இயற்கை முறையில பந்தல் காய்கறிகளைச் சாகுபடி செய்றேன்.

இது மொத்தம் 10 ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர் பந்தலில் வீரிய ஒட்டு ரகப் புடலை பறிப்புல இருக்கு. தனியா ஒரு ஏக்கர்ல புடலை விதை ஊன்றிருக்கேன். 2 ஏக்கர்ல தக்காளி, 2 ஏக்கர்ல கொய்யா, 2 ஏக்கர்ல முருங்கைச் சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தி வெச்சுருக்கேன். மீதி ரெண்டு ஏக்கர் நிலம் சும்மாக்கிடக்கு” என்றார்.

‘‘இந்தத் தடவை இதுவரைக்கும் 20 பறிப்புகள் பறிச்சுருக்கேன். மொத்தம் 14,480 கிலோ கிடைச்சுருக்கு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

20 அறுவடை, 14,480 கிலோ!

இறுதியாக ஒரு ஏக்கர் புடல் விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசியவர், “ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் காய் பறிக்கிறேன். பந்தல்ல அங்கங்க காய்கள் தென்படுறதால வேகமா பறிச்சிடலாம். போன வெள்ளாமையில 21,032 கிலோ பறிச்சேன். 9 ரூபாய்ல இருந்து 20 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. விற்பனையில 2,52,384 ரூபாய் வருமானமாக் கிடைச்சுது. இதுல உழவுல இருந்து அறுவடை வரைக்கும் 37,500 ரூபாய் செலவு. அதுபோக ரூ.2,14,884 லாபமாக் கிடைச்சுது. இந்தத் தடவை இதுவரைக்கும் 20 பறிப்புகள் பறிச்சுருக்கேன். மொத்தம் 14,480 கிலோ கிடைச்சுருக்கு.

மூட்டைப் பிடிக்கும் பணியில்
மூட்டைப் பிடிக்கும் பணியில்

ஒரு கிலோ குறைஞ்சபட்சம் 11 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 20 ரூபாய் வரைக்கும் விற்பனையாயிருக்கு. குறைந்தபட்சம் 12 ரூபாய். அந்த வகையில 1,73,760 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு. இன்னும் 15 பறிப்பு வரைக்கும் பறிக்கலாம். அதுமூலமா 7,500 கிலோ வரைக்கும் எதிர்பாக்குறேன். சராசரியா கிலோ 10 ரூபாய்னு வெச்சு கிட்டாலும் 75,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். ஆக மொத்தம் 2,48,760 ரூபாய் வரவு. இதுல இதுவரைக்கும் செலவான தொகை 28,500 ரூபாய். இன்னும் 7,000 ரூபாய் வரைக்கும் செலவாகும். மொத்தம் 35,500 ரூபாய் செலவு கணக்குல போயிடும். அதைக் கழிச்சுட்டா மொத்தத்துல 120 நாள்ல 2,13,260 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

குறிப்பு: இதில், கல்தூண், கம்பி கட்டி பந்தல் அமைக்கும் செலவு ரூ.1,80,000 மற்றும் சொட்டு நீர் அமைக்க ரூ.20,000 (மானியம் நீங்கலாக) என மொத்தம் ரூ.2,00,000. இது நிலையான செலவுகள் என்பதால், அதைச் செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை.
குறிப்பு: இதில், கல்தூண், கம்பி கட்டி பந்தல் அமைக்கும் செலவு ரூ.1,80,000 மற்றும் சொட்டு நீர் அமைக்க ரூ.20,000 (மானியம் நீங்கலாக) என மொத்தம் ரூ.2,00,000. இது நிலையான செலவுகள் என்பதால், அதைச் செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை.

‘‘பறிக்கிற காய்களைச் சிவகாசி காய்கறிச் சந்தையிலதான் விற்பனை செய்யுறேன். இயற்கை முறையில விளையவச்ச புடலைங்கிறதுனால தனி விலையெல்லாம் கிடையாது. ஆனா, மத்த புடலையைவிடப் பார்க்குறதுக்குப் பளபளப்பா, தரமா இருக்குறதுனால சந்தையில நல்ல தேவை இருக்கு. ‘நஞ்சில்லா காய்கறிகளை விற்பனை செய்கிறோம்’ங்கிற ஆத்ம திருப்தியே போதுங்க” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ராமசாமி, செல்போன்: 97869 20592

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கரில் பந்தல் புடலைச் சாகுபடி செய்வது குறித்து ராமசாமி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

பந்தல் காய்கறிகளுக்கு எனத் தனிப்பட்டம் கிடையாது. எந்தப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். முதலில் பந்தலை அமைக்க வேண்டும். வேலி ஓரமாக 10 அடி இடைவெளியிலும், உட்புறமாக 20 அடிக்கு ஒன்று என்ற கணக்கில் 170 கல்தூண்கள் அமைக்க வேண்டும். 6 நாள்கள் இடைவெளியில் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, கம்பிப்பந்தல் அமைக்க வேண்டும். பந்தல் காய்கறிச் சாகுபடிக்குச் சொட்டு நீர்ப்பாசனமே ஏற்றது. கம்பிப் பந்தலுக்குப் பின், சொட்டு நீர்க் குழாய் அமைக்க வேண்டும். பந்தல் முறை என்பதால், நிலம் முழுவதும் அடியுரமாக மக்கிய தொழுவுரம் போட வேண்டிய அவசியமில்லை.

ஒரு ஏக்கர், 120 நாள்கள், ரூ. 2,48,760 குதூகல வருமானம் கொடுக்கும் குறும்புடலை!

விதை ஊன்றும் பகுதியில் மட்டும் குழி எடுத்து உரம் போட்டால் போதும். இதனால், தொழுவுரம் சிக்கனமாகும். வரிசைக்கு வரிசை 8 அடி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் குழி எடுத்து அரைக்கிலோ மக்கிய தொழு உரம் போட வேண்டும். விதைப்புக்கு முன்பு ஒரு பாத்திரத்தில் 250 மி.லி தண்ணீர், 100 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து, அதில் புடலை விதைகளை 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வரை உலர வைத்து, ஒரு இன்ச் ஆழத்தில் ஊன்ற வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்வதால் வேர்த்தாக்குதல், பூஞ்சண நோய்களைத் தடுக்கலாம்.

5 முதல் 7 நாள்களுக்குள் முளைப்பு தெரியும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் விட்டு வர வேண்டும். 10-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இப்படி 10 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 25 மற்றும் 45-ம் நாளென இரண்டு முறை களை எடுத்தால் போதும். 20 முதல் 25-ம் நாளில் கொடி வீசத் தொடங்கும்.

அந்த நேரத்தில், ஒவ்வொரு செடிக்கும் சணல் கட்டி கொடியைச் சுற்றிவிட வேண்டும். கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுத் தாக்குதல் ஏற்படும். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு கண்ணில் தென்பட்டால்கூட, 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி கலவைக் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 முதல் 35-ம் நாளில் கொடி வளர்ந்து பந்தல்மேல் சென்று படரத் தொடங்கும்.

40 முதல் 45-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். பூப்பூப்பதற்கு முன் 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி தேமோர்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 55-ம் நாள் முதல் காய் பறிக்கலாம். 70-ம் நாளுக்கு மேல் இருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். 120-ம் நாள்வரை தொடர்ந்து பறிக்கலாம்.

முயல் தாக்குதலைக் கட்டுப்படுத்த முட்டைக் கரைசல்

ந்தப் பகுதியில் முயல்களின் தொல்லை அதிகம். புடலைக் கொடி வீசத் தொடங்கும்போது, கொடியின் தண்டுப் பகுதியை முயல்கள் கடித்துச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, 20-ம் நாளிலிருந்து கொடியைப் பந்தலில் ஏற்றிவிடும் வரை, 2 அழுகிய முட்டையை உடைத்து 10 லிட்டரில் தண்ணீரில் கலக்கி வாரம் ஒருமுறை கொடியைச் சுற்றிக் கைத்தெளிப்பானால் தெளித்தால் போதும். முட்டையின் நாற்றத்துக்குத் தோட்டத்துப் பக்கம் முயல் எட்டிகூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம். இல்லாவிட்டால், புடலை விதை முளைத்தவுடன் பந்தலைச் சுற்றிலும் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்குப் பச்சைநிற துணியைக் கட்டியும் முயல் நுழைவதைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு ஏக்கர், 120 நாள்கள், ரூ. 2,48,760 குதூகல வருமானம் கொடுக்கும் குறும்புடலை!

நிலையான பந்தலுக்குக் கல்தூண்

கல் தூண்கள் ஊன்றாமல் சவுக்குக் கம்புகளை ஊன்றியும் பந்தல் அமைக்கலாம். ஆனால், கம்புப் பந்தல் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள்தான் தாக்குப் பிடிக்கும். இரும்பு பைப்புகளை ஊன்றிப் பந்தல் போட்டால், 6 முதல் 8 ஆண்டுகள்வரை தாக்குப்பிடிக்கும். ஆனால், கல்தூண் பந்தல் போட்டால் 30 ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

கலவைக் கரைசல்

50 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி, அதனுடன் 3 கிலோ அடுப்புச்சாம்பல், 3 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 5 சோற்றுக்கற்றாழைக் கொத்துகள், 500 கிராம் மிளகாய்ப் பொடி, 500 கிராம் மஞ்சள் பொடி, 50 கிராம் வசம்புப்பொடி, 50 கிராம் பெருங்காயப்பொடி ஆகியவற்றைக் கலந்து வேப்பங்குச்சியால் நன்கு கலக்கி ஒருநாள் முழுவதும் வைத்திருந்தால் கலவைக்கரைசல் தயார்.