Published:Updated:

வறட்சியிலும் அள்ளித்தரும் ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா!

சீத்தாப்பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
சீத்தாப்பழம்

1 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 3,00,000

அறிமுகம்

திக பாடில்லாத, அதேசமயம் ஆண்டுக்கு ஒருமுறை கணிசமான வருமானத்தைக் கொடுப்பதில் பழமரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. மா, பலா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சையென வருமானம் தரும் பழ மரங்கள் வரிசையில் சீத்தாப்பழத்துக்கும் இடம் உண்டு. காடுகளில் மட்டுமே விளையக்கூடிய சீத்தாப்பழத்தை விவசாய நிலங்களிலும் சாகுபடி செய்வதற்கு வசதியாகப் புதிய ரகத்தை வெளியிட்டுள்ளது பெங்களூரில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (Indian Institute of Horticultural Research-IIHR). இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பழப்பயிர்கள் துறையின் முதன்மை விஞ்ஞானி, முனைவர் தா.சக்திவேல், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரகத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும் ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ‘மரப்பயிர்கள் சிறப்பிதழு’க்காகப் பெங்களூருக்கு அடுத்த ஹெசரகட்டாவில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்த சக்திவேலைச் சந்தித்துப் பேசினோம்.

முனைவர் சக்திவேல்
முனைவர் சக்திவேல்

“இந்தியாவில் உள்ள தலைசிறந்த தோட்டக்கலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையங்களுள் இது முக்கியமானது. 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தத் தோட்டக்கலைப் பண்ணையில் மலர்கள், காய்கறிகள், பழங்கள், பழமரப்பயிர்கள் ஆகியவை குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. 150 வேளாண் விஞ்ஞானிகள், முந்நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள் என்று பரந்துபட்ட அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தியத் தோட்டக்கலைப் பயிர்களுக்கான தாயாக இருக்கிறது இந்நிலையம். வர்த்தக ரீதியாகக் கொய்யா, சப்போட்டோ, பப்பாளி, மா, பலா போன்ற பழமரப்பயிர்களில் நிறைய ரகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவத்தன்மை வாய்ந்த, நல்ல இனிப்புச் சுவையுள்ள அதேசமயம் சாப்பிடுவதற்கு ஏற்ற சீத்தாப்பழத்தில் நீண்ட நாள்களாகவே புதிய ரகம் கொண்டு வரப்படாமல் இருந்தது. அந்த வகையில் புதிய ரகத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பெங்களூரு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்து, இதற்கான ஆராய்ச்சியை 1980-ம் ஆண்டு தொடங்கி 2000-ம் ஆண்டு புதிய ரகம் வெளியிடப்பட்டது. அதற்கடுத்து மேம்படுத்தப்பட்ட முழுமையான ரகம் 2008-ல் வெளியிடப்பட்டது. அதுதான் ‘அர்கா சகான்’ (Arka Sahan) என்கிற ஒட்டு ரகம்” என்று அறிமுகம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெங்களூரில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
பெங்களூரில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்

“சீத்தாப் பழத்தில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ‘அசிட்டோ ஜெனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. சீத்தாப்பழத்தைச் சாப்பிடும்போது இனிப்புச் சுவையோடு ஒருவித கசப்புத் தன்மையை நாம் உணர முடியும். அதுதான் ‘அசிட்டோ ஜெனின்.’ சீத்தாப்பழங்களை விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களிலும் இந்த ஆராய்ச்சி இப்போது தொடங்கப்பட்டுள்ளது. சீத்தாப்பழங்களிலேயே முள் சீத்தாப்பழத்தில் இந்த வேதிப்பொருள் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், முள் சீத்தாவில் அதிக மகசூல் கிடைப்பதில்லை என்பதால், நல்ல மகசூல் கொடுக்கும், அதேசமயம் ‘அசிட்டோ ஜெனினை’க் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருக்கக்கூடிய சீத்தாப்பழத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ‘அர்கா சகான்’ சீத்தாப்பழத்தின் எடை 400-500 கிராம் இருக்கும். வழக்கமான சீத்தாப் பழங்களின் எடை 200 கிராம்தான் இருக்கும்” என்றவர், சீத்தாப்பழத்தைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வறட்சியிலும் அள்ளித்தரும்  ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா!

“இப்போது வர்த்தக ரீதியாகப் பாலா நகர் என்ற ரகம்தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஹைதராபாத் நிஜாம் காலத்தில் இந்த ரகம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத்தின் ஒரு பகுதிதான் இந்தப் பாலா நகர். அந்தப் பகுதியில் உருவாக்கப்பட்டதால், அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இதன் எடை 200-250 கிராம் இருக்கும். இதில் ஒரு பழத்துக்கு 60 விதைகளுக்கு மேல் இருக்கும். அதேபோன்று சதைப்பகுதி சற்றே குறைந்து காணப்படும். நீண்ட நாள் இருப்பு வைக்க முடியாது என்ற சில குறைபாடுகளும் இருந்துவந்தன.

முனைவர் செந்தில்குமார்
முனைவர் செந்தில்குமார்

இதற்கு மாற்றாக அதிக எடையுள்ளதாகவும், நீண்ட நாள் தாங்கக்கூடியதாகவும் (ஒரு வாரம்), வறட்சியான சூழலில் வளரக்கூடியதாகவும், குறைந்த பராமரிப்புடையதாகவும் இருக்கிறது ‘அர்கா சகான்.’ பெங்களூரு, இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வெளியிடப்படும் அனைத்து ரகங்களின் பெயர்களுக்கும் முன்னால் ‘அர்கா’ என்ற வார்த்தை இருக்கும். இந்தப் பெயர் இருந்தால் அது எங்கள் நிலையத்தின் கண்டுபிடிப்பு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ‘அர்கா’ என்பது எங்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் அருகிலேயே ஓடுகிற ‘அர்காவதி’ ஆற்றைக் குறிக்கும். ‘சகான்’ என்பது இந்தி வார்த்தை, அது ‘பொறுமை’யைக் குறிக்கும்.

சீத்தாப்பழச் செடிகள்
சீத்தாப்பழச் செடிகள்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடிப் பகுதி கொய்யாச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது. அங்கு எங்கள் நிலையத்தின் வெளியீடான ‘அர்கா கிரண்’ என்ற சிவப்புக் கொய்யா ரகம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோன்று காய்கறிகள், மலர்கள், பழ வகைகள் அனைத்து ரகங்களுக்கும் முன் ‘அர்கா’ என்ற வார்த்தை இருக்கும். அந்தவகையில் அர்கா சகான் (Arka Sahan) விவசாயிகளால் விரும்பிச் சாகுபடி செய்யப்படும் ரகமாக உருவாக்கியுள்ளோம். இந்தச் சீத்தாப்பழச் சாகுபடிக்குப் பராமரிப்பு பெரிய அளவில் தேவைப்படாது. தற்போது இந்தச் சீத்தாப்பழங்கள் பெங்களூரு சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அர்கா சகான் சாகுபடியில் மகரந்தச் சேர்க்கை நாம்தான் செய்ய வேண்டும்” என்றவர் அர்கா சகான் சாகுபடி செய்யப்பட்டு வரும் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

முள் சீத்தா, பாலா நகர் சீத்தா,  சிவப்பு சீத்தா
முள் சீத்தா, பாலா நகர் சீத்தா, சிவப்பு சீத்தா

“மொத்தமுள்ள நிலத்தில் 15 ஏக்கர் நிலத்தைச் சீத்தாப்பழ ஆராய்ச்சிக்காக ஒதுக்கியிருக்கிறோம். முள் சீத்தா, பாலா நகர், சிவப்பு சீத்தா, ராய்துர்க், அருப்புக்கோட்டை-1, மம்மோத், பர்படாஸ், அர்கா நீலச்சல் விக்ரம், என்.எம்.கே - 1, தைவான், வாஷிங்டன் என 12 வகையான சீத்தாப்பழ ரகங்கள் உள்ளன. இதோடு சில சீத்தாப்பழ ரகங்களின் தாய் மரங்களும் உள்ளன. இதில் சிவப்பு நிறத்தில் உள்ள சிவப்புச் சீத்தா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய சீத்தாப்பழ ரகம். இங்கு எந்த ரகம் வேண்டுமோ அதை ஒட்டுக்கட்டி உருவாக்கிக்கொள்வோம். ஆண்டுதோறும் 50,000 சீத்தாப்பழக் கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். மகரந்தச் சேர்க்கை நடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கிறோம்” என்றவர் சமூக அறிவியல் பயிற்சித் துறையின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார்.

வறட்சியிலும் அள்ளித்தரும்  ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா!

சீத்தாப்பழத்தின் விற்பனை மற்றும் வருமானம்குறித்துப் பேசத் தொடங்கினார் செந்தில்குமார். “இந்தப் பழத்தின் அளவும், தோற்றமும் காண்போரை வாங்கத் தூண்டும். இதோடு மருத்துவத்தன்மையும் கொண்டிருப்பதால் அனைவருக்கும் ஏற்றது. இதன் அருமை கருதிதான் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபருக்கு இந்தப் பழத்தைப் பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டு வந்தார். இந்தியாவில் 80 சதவிகிதம் சீத்தாப்பழம் உணவாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே இதைப் பரிசுப்பொருளாகவும் வழங்கலாம். மகசூல் காலங்களில் மாம்பழங்களை இனிப்புப் பெட்டிகள் போன்று, பெட்டிகள் மூலமாகப் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் பரவலாகி வருகிறது. அதேபோன்று சீத்தாப்பழங்களையும் வழங்கலாம். இதன் நீண்டநாள் தாங்கும் திறனால் ஏற்றுமதி செய்வதற்கும் உகந்தது.

வறட்சியான சூழலில் வளரக்கூடியதாகவும், குறைந்த பராமரிப்புடையதாகவும் இருக்கிறது. அண்மையில் சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபருக்கு இந்தப் பழத்தைக் கொடுத்தார்.

சீத்தாப்பழத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், ஷாம்புகளில் பொடுகு மற்றும் பேன்களை நீக்க (ஆன்டி டேண்ட்ரூப்) பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்து அரைத்து, தலைக்குப் பூசிக் குளிக்கும் பழக்கம் இருந்தது. அதுதான் இன்று ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், ஹைதராபாத் பகுதிகளில் சீத்தாப்பழ விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஒரு லிட்டர் எண்ணெய் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே சீத்தாப்பழ எண்ணெய்க்கான சந்தை விவரங்களைத் தெரிந்து ஈடுபட்டால் எண்ணெயிலும் நல்ல வருமானம் பார்க்கலாம். சீத்தாப்பழ இலைகளை வயல்களுக்கு நல்ல இடுபொருளாகவும் பழத்தின் தோல்களைக் கால்நடைக்கு உணவாகவும் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அர்கா சகான் சீத்தாப்பழ ரகத்தைத் தென் மற்றும் வடமாநில விவசாயிகள் பலர் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களை நேரடியாகச் சந்தித்து நாங்கள் பெற்ற தரவுகளின்படி ஒரு கிலோ அர்கா சகான் சீத்தாப்பழத்தின் பண்ணை விலை சராசரியாக 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மெகபூப், அர்கா சகான் சீத்தாப்பழத்தைச் சாகுபடி செய்து நேரடியாக விற்பனை செய்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஹோஜா என்பவர் சீத்தாப்பழத்திலிருந்து பழக்கூழை எடுத்து மில்க் ஷேக், ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருகிறார். இதோடு நேரடியாகவும் சீத்தாப்பழங்களை விற்பனை செய்துவருகிறார். பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டீல் என்ற விவசாயியும் சாகுபடி செய்து வருகிறார்.

ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 3-4 டன் சீத்தாப்பழம் மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மற்ற பழ வகைகளைப் போன்றே இந்த ரகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் குழுவாக வந்தால் இதன் சாகுபடி விவரங்களை எங்கள் நிலையத்திலேயே சொல்லிக் கொடுப்போம்” என்றார்.

‘‘அதிக எடையுள்ளதாகவும், நீண்ட நாள் தாங்கக்கூடியதாகவும் (ஒரு வாரம்), வறட்சியான சூழலில் வளரக்கூடியதாகவும், குறைந்த பராமரிப்புடையதாகவும் இருக்கிறது ‘அர்கா சகான்’ ரகம்.’’

நிறைவாகப் பேசிய சக்திவேல், “இந்தச் சீத்தாப்பழ வகையை நர்சரி மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்களும் எங்களைத் தொடர்பு கொண்டால், குறைந்த தொகையில் அதற்கான உரிமத்தை அளிக்கிறோம். சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ஒரு சீத்தாப்பழக் கன்றின் விலை 50 ரூபாய் விலையில் வழங்குகிறோம். இங்கேயே முன்பதிவு அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம். குச்சியின் மூலம் ஒட்டுக்கட்டி உருவாக்கத் தெரிந்தவர்களுக்குக் குச்சிகளையும் வழங்குகிறோம். சாகுபடி குறித்தான ஆலோசனைகளையும் வழங்குவோம். முதலில் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் எனச் சாகுபடி செய்து, இதன் சாகுபடி விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, பிறகு அதிக அளவில் சாகுபடி செய்ய இறங்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு நீண்ட நாள் தாங்கும் திறன், குறைந்த பராமரிப்பு, அதிக எடை, லாபகரமான விலை என்று பல அம்சங்கள் கொண்ட இந்த ரகத்தை, விவசாயிகள் சாகுபடி செய்து வாழ்க்கையில் மேன்மேலும் உயர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார் சக்திவேல்.

தொடர்புக்கு: முனைவர் தா.சக்திவேல், பழப்பயிர்கள் துறை, இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஹெசரகட்டா, பெங்களூரு-560089 செல்போன்: 94488 13662 தொலைபேசி: 080 28466420/23 இணையதளம்: www.iihr.res.in மின்னஞ்சல்: sakthivel.t@icar.gov.in முனைவர் செந்தில்குமார் செல்போன்: 96637 96473

மகரந்தச் சேர்க்கை செய்வது எப்படி?

“10 அர்கா சகான் ரகச் சீத்தா மரங்களுக்கு ஒரு பாலா நகர் ரக மரம் இருக்கும் வகையில் நடவு செய்திருக்க வேண்டும். நாங்கள் கன்றுகளை விற்கும்போதே இதைச் சொல்லித்தான் விற்போம். அர்கா சகான் மரத்தில் பூக்கும் ஒரே பூவில் மகரந்தமும் (ஆண்), சூலகமும் (பெண்) இருக்கும். சூலகம் ஒருநாள் முன்னாடியே மகரந்தச் சேர்க்கைக்கு வந்துவிடும். மறுநாள் பாலா நகர் மரத்திலிருக்கும் மகரந்தத்தை (ஆண்) உதிர்த்து, அதை ஒரு கப்பில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.

வறட்சியிலும் அள்ளித்தரும்  ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா!

ஒரு பிரஷ் மூலமாக இந்த மகரந்தத்தை எடுத்து அர்கா சகான் மரத்தில் உள்ள சூலகத்தில் தடவிவிட வேண்டும். இந்த மகரந்தச் சேர்க்கையைக் காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்துவிட வேண்டும். மகரந்தச் சேர்க்கை செய்த 120 நாள்களில் சீத்தாப்பழம் அறுவடைக்கு வந்துவிடும். மகரந்தச் சேர்க்கை செய்யாமல்விட்டால், பழத்தின் தோற்றம் சரியாக வராது. காய்கள் சூம்பிப் போய்விடும். அதனால், மகரந்தச் சேர்க்கையைப் பூப்பூக்கும் நேரத்தில் செய்தே ஆக வேண்டும். ஒருநாளில் மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரத்திலும் பூ எடுக்கும் நேரம் வேறுபடும். ஒருநாள், இரண்டு நாள் இடைவெளியில் இந்தச் செயற்கை மகரந்தச் சேர்க்கையைச் செய்யலாம். இது ரொம்ப எளிமையானதுதான். ஓர் ஆள், ஒரு நாளில் 400 மகரந்தச் சேர்க்கையைச் செய்யலாம். மற்ற சீத்தாப்பழ மரங்களில் இதுபோன்று கிடையாது. ‘அர்கா சகான்’ ரகத்தில் மட்டுமே இம்முறை உள்ளது. பெங்களூரு சூழ்நிலைக்கு ஏப்ரல் மாதத்தில் மகரந்தச் சேர்க்கை செய்கிறோம். ஜூலையில் அறுவடை செய்கிறோம். இந்தக் கால அளவு இடத்துக்கு ஏற்ப மாறுபடும்” என்கிறார் சக்திவேல்.

சாகுபடி செய்வது எப்படி?

ரு ஏக்கரில் அர்கா சகான் சீத்தாப்பழ ரகத்தைச் சாகுபடி செய்வது குறித்து முனைவர் சக்திவேல் சொல்லிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

அனைத்து வகையான மண்ணிலும் இது வளரும். ஜூன் முதல் நவம்பர் வரையான மழைக்காலங்களில் 15க்கு 15 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முன் 2-க்கு 2 அடி சுற்றளவில் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும். 10 அர்கா சகான் சீத்தாப்பழக் கன்றுகளுக்கு ஒரு பாலா நகர்க் கன்று என்ற வகையில் நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 160-180 கன்றுகள் பிடிக்கும். நன்றாக வேர் பிடிக்கும்வரை மூன்று நாள்களுக்கு ஒருமுறை 30 லிட்டர் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். கன்று வேர் பிடித்தபிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்து வந்தால் போதுமானது. சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

ஆண்டுக்கு ஒருமுறை 25 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைச் செடிகளுக்குக் கொடுத்து வர வேண்டும். மரமாக வளர்ந்த பிறகு ஒரு மரத்துக்கு 50 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைக் (உயிர் உரங்களும், எருவும் கலந்த கலவை) கொடுத்து வர வேண்டும். மூன்றாம் ஆண்டில் பூக்கள் எடுத்து மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஐந்தாவது ஆண்டிலிருந்து நல்ல மகசூல் கொடுக்கத் தொடங்கும். பெங்களூரு சீதோஷ்ண நிலைக்கு ஏப்ரல் மாதத்தில் மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டும். அறுவடை முடிந்த மரங்களில் பனிக்காலங்களில் இலைகள் உதிரும். அப்போது கவாத்துச் செய்ய வேண்டும்.

பெங்களூரு சீதோஷ்ண நிலைக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்துவிட வேண்டும். ஏப்ரல் மாதத்தில் பூ எடுக்கும் (தமிழ்நாட்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்கள் பூ எடுக்கும்). பூ எடுத்ததிலிருந்து காய் உருவாகும் வரை தண்ணீர் கொடுப்பது நல்லது. சீத்தாப்பழத்தில் பெருமளவில் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படி இருந்தால், சீத்தாப்பழ எண்ணெயை லிட்டருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளித்தால் கட்டுப்படும். பழ ஈ தாக்குதல் இருந்தால், இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள நீம் சோப்பு 7 கிராமை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 2 இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தலாம்.

ஒரு கிலோ 120 ரூபாய்!

ர்நாடக மாநிலம், பிஜாப்பூரைச் சேர்ந்த சீத்தாப்பழச் சாகுபடி விவசாயி மெகபூப்புவிடம் பேசினோம். “பல வருஷமா சீத்தாப்பழச் சாகுபடிதான் செஞ்சிட்டு வர்றேன். இந்த ரகத்தைப் பத்திக் கேள்விப்பட்டு 2010-ம் வருஷம் நடவு போட்டேன். இப்போ 6 ஏக்கர்ல அர்கா சகான் சீத்தாப்பழ ரகத்தைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். ஜூன் மாசத்துல நடவு போடுவேன். 15 அடிக்கு 14 அடி இடைவெளியில நடவு போட்டிருக்கேன். ஏக்கருக்கு 180 முதல் 230 மரங்கள் இருக்கிற மாதிரி நடவு செஞ்சிருக்கேன். வருஷத்துக்கு ரெண்டரை டன்னிலிருந்து மூன்றரை டன் மகசூல் எடுக்கிறேன்.

வறட்சியிலும் அள்ளித்தரும்  ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா!

ஒரு பழம் 400-500 கிராம் எடைக்குப் பரிந்துரைக்கிறாங்க விஞ்ஞானிங்க. ஆனா, சில நேரங்கள்ல மகரந்தச் சேர்க்கை சரிவர நடக்கலைனா காயோட எடை குறைஞ்சிடும். எடை குறைஞ்சா விலையும் குறைஞ்சிடும். அதனால, இதுல மட்டும் கவனமா செயல்படணும். ஒரு கிலோ 70 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 200 ரூபாய்க்கு வித்திருக்கேன். சராசரியா பார்த்தா ஒரு கிலோ 120 ரூபாய்க்குப் போகுது. நான் கோலாப்பூர், ஸ்ரீநகர், புனேன்னு பல இடங்கள்ல வித்திருக்கேன். இந்த ரகத்துல மகரந்தச் சேர்க்கை செய்றதுதான் கஷ்டம். ஆனா, கஷ்டத்தைப் பார்த்தா லாபம் பார்க்க முடியாது” என்றார் உற்சாகத்துடன்.

சீத்தாவும் ராமாயணமும்!

ந்தியாவில் 48,000 ஹெக்டேர் பரப்பளவில் சீத்தாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சீத்தாப்பழச் சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் இருக்கிறது. அடுத்து குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்கள் இருக்கின்றன. இந்திய அளவில் சீத்தாப்பழ உற்பத்தியில் தமிழ்நாடு பத்தாவது இடத்தில் இருக்கிறது.

பொதுவாகக் காடுகளில் சீத்தாப்பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. சீத்தாப்பழத்தின் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் தென்னமெரிக்க நாடுகள் என்றாலும், இந்தியாவுக்கு வந்து 500 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. காடுகளில் வனத்துறையால் பரப்பப்பட்டது எனவும், பழங்குடிகள் தங்களின் உணவுத்தேவைக்காக இதைப் பரப்பினர் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் பழத்துக்கு ராமாயணத்தில் உள்ள பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்தான ஆராய்ச்சிகளும், ராமாயணக் காலத்தில் சீத்தாப்பழம் இருந்ததா என்பதற்கான ஆராய்ச்சிகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.