நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி!

தக்காளியுடன் சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தக்காளியுடன் சுப்பிரமணியன்

மகசூல்

விவசாயிகளை வாழவும்வைக்கும், வீழவும்வைக்கும் பயிர்களில் வெங்காயமும் தக்காளியும் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் முக்கிய விளைபொருள்கள். பல நேரங்களில் இவை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கின்றன. அந்த வகையில் கொடித் தக்காளி மூலமாக ஏக்கருக்கு 39 டன் மகசூல் எடுத்து அசத்தியிருக்கிறார், திருநெல்வேலி மாவட்டம், மானூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியன்.

ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி!

கொடி முழுவதும் இலைகளா, பழங்களா... என வியக்கும் அளவுக்குச் செக்கச் செவேலெனப் பழங்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அறுவடைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலிதான். பி.ஏ. பொருளாதாரம் படிச்சு முடிச்சுட்டு ஏஜென்ஸி நடத்திட்டு இருந்தேன். நல்லாப் போய்க்கிட்டிருந்த தொழில் திடீர்னு நஷ்டம் ஆகிடுச்சு. வேற ஏதாவது தொழில் செய்யலாம்னு நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலத்தை வாங்கி விவசாயம் செய்யலாம். இனி வருங்காலம் விவசாயிகளுக்கான காலம். அதிலும் இயற்கை விவசாயத்துக்கு பொற்காலம்’னு சொன்னாங்க.

தக்காளியுடன் சுப்பிரமணியன்
தக்காளியுடன் சுப்பிரமணியன்

எனக்கும் அது சரினு பட்டுச்சு. விவசாயம் தொடர்பான தேடலில்தான் பசுமை விகடன் அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதில் இடம்பெற்ற கட்டுரைகளைப் படிச்சுட்டு, விவசாயிகளுக்கு போன் பண்ணி சந்தேகங்களைக் கேட்பேன். சில தோட்டங்களுக்கு நேரடியாகவும் போவேன். அந்த நேரத்துல திருநெல்வேலியில ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சியைப் பசுமை விகடன் நடத்திச்சு. அதுல கலந்துகிட்டேன். மூணு நாளும் நம்மாழ்வார் ஐயா, பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தார். ‘விவசாயம்கிறது வியாபாரமில்லை. அது ஒரு வாழ்வியல் முறை’னு ஐயா சொன்ன கருத்து, என் மனசுல ஆணி அடிச்சதுபோலப் பதிஞ்சிடுச்சு. விதைப்பு முதல் அறுவடை வரை ஐயா சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டதும், இயற்கை விவசாயத்துல ஜெயிச்சிட்டதுபோல எனக்குள்ள நம்பிக்கை வந்துச்சு. தொடர்ந்து என்னோட குத்தகை நிலத்தில 75 சென்ட்ல கத்திரி, வெண்டை, தக்காளினு சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சது. பிறகு, பாரம்பர்ய நெல் ரகங்களையும் சாகுபடி செய்தேன்.

நம்மாழ்வார் ஐயா மூலம் ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சியைப் பசுமை விகடன் நடத்திச்சு. அதுல கலந்துகிட்டேன். இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தினதுனால தக்காளியில அழுகல், வெடிப்பு ஒண்ணுமில்லை.

போன வருஷம், மானூர்ல கொடிபோலப் படரும் தக்காளியை இயற்கை முறையில் சாகுபடி செய்யற இயற்கை விவசாயி பாஸ்கரைச் சந்திச்சேன். கொத்துக் கொத்தா காய்கள் திரட்சியாக இருந்துச்சு. ‘ரேபிட் குரோ’னு அந்த ரகத்தின் பேரைச் சொன்னாரு. `இந்தப் பழத்தை 20 நாள் வரைக்கும் இருப்புவைக்கலாம். நல்ல மகசூல் கிடைக்குது. இதிலிருந்து விதையெடுத்து விதைக்கவும் செய்யலாம்’னு சொன்னார். தொடர்ந்து என்னோட குத்தகை நிலத்துல சோதனை முயற்சியா ஒரு ஏக்கர்ல தக்காளிச் சாகுபடி செஞ்சேன். கிட்டத்தட்ட அறுவடை முடியும் நிலையில இருக்கு” என்றவர், விற்பனை வாய்ப்பு, வருமானம் குறித்துப் பேசினார்.

அறுவடையில்...
அறுவடையில்...

“இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தினதுனால தக்காளியில அழுகல், வெடிப்பு ஒண்ணுமில்லை. பஞ்சகவ்யா தெளிக்கறதால காய்கள் பளபளப்பா இருக்குது. அறுவடை செஞ்ச தக்காளியை 15 முதல் 20 நாள்கள் வரை இருப்புவைக்கலாம். காற்றோட்டமாகவெச்சிருந்தாலே போதும். திருநெல்வேலி, ஆலங்குளம் காய்கறிச் சந்தைக்கு அனுப்பிவைக்கிறேன். இது தவிர, சிறு வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க. தக்காளியின் திரட்சி, தரம், பளபளப்பு காரணமா மத்த தக்காளியைவிட கிலோவுக்குக் கூடுதலாக 4 ரூபாய் கிடைக்குது.

கொடித் தக்காளி
கொடித் தக்காளி

70-ம் நாள் 100 கிலோ மகசூல் கிடைக்கும். அதிலிருந்து படிப்படியாக அதிகரிச்சு 100-ம் நாளுக்கு மேல ஒரு பறிப்புக்கு 500 கிலோவுல இருந்து 1,000 கிலோ வரைக்கும்கூடக் கிடைக்கும். ஒருநாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்வோம். இதுவரைக்கும் 50 பறிப்புகள் மூலமா 39,000 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு.

‘‘70-ம் நாள்ல மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதிலிருந்து படிப்படியாக அதிகரிச்சு 100-ம் நாளுக்கு மேல ஒரு பறிப்புக்கு 500 கிலோவுல இருந்து 1,000 கிலோ வரைக்கும்கூடக் கிடைக்கும்.’’

இதுல 10,200 கிலோ ரூ.25-க்கும் (2,55,000), 9,500 கிலோ ரூ.19-க்கும் (1,80,500), 11,150 கிலோ ரூ.18-க்கும்(2,00,700), 8,150 கிலோ ரூ.15-க்கும் (1,22,250) விற்பனையாச்சு. இதன் மூலம் மொத்தம் ரூ.7,58,450 வருமானமா கிடைச்சிருக்கு. இதுல ரூ.2,14,000 செலவு போக மீதமிருக்கும் ரூ.5,44,450 லாபம். இன்னும் 300 கிலோ கிடைக்க வாய்ப்பிருக்கு.

ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி!

அறுவடை முடியம் நிலையில, களை எடுத்து அடியுரமாகச் செறியூட்டப்பட்ட சாணக்கலவை வைக்கணும். 10 நாளுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளிச்சுட்டு வந்தா அடுத்த 40-ம் நாள்ல மீண்டும் பூத்து, காய்ப்புக்கு வரும். இதன் மூலம் ஆறு முதல் எட்டு டன் வரை கூடுதல் மகசூல் எடுக்கலாம். இது தனி வருமானம்தான்.

ஆனா, இந்த வருஷம் மழை காரணமா மறுதாம்பு பண்ணலை” என்றவர் நிறைவாக, “குறைவான செலவுல, அதிகப் பராமரிப்பில்லாம நல்ல மகசூல் கிடைச்சதுனால, அடுத்த பருவத்தில் ரெண்டு ஏக்கருக்கு தக்காளிச் சாகுபடி செய்யத் திட்டமிட்டிருக்கேன்” என்று தக்காளியை அள்ளிக்காட்டி, புன்னகையோடு விடை கொடுத்தார்.

ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் தக்காளிச் சாகுபடி செய்வது குறித்து சுப்பிரமணியன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

தக்காளிச் சாகுபடியில் கோடைக்காலப் பருவத்துக்கு ஆடி, ஆவணி, புரட்டாசிப் பட்டங்களும், குளிர்காலப் பருவத்துக்கு கார்த்திகை, மார்கழி, தைப் பட்டங்களும் ஏற்றவை. செம்மண், செம்மண் சரளை, வண்டல், வண்டல் கலந்த மண் ஏற்றவை. தேர்வு செய்யப்பட்ட பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே உழவுப் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்கு முன்னதாக நான்கு டன் தொழுவுரக் கலவையைக் கொட்டி உழவு செய்ய வேண்டும்.

பிறகு, ஓரடி உயரம், மூன்றடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்குமான இடைவெளி ஐந்தடி இருக்க வேண்டும். பாத்திகள் அமைக்கும்போதே சொட்டுநீர்ப் பாசனக் குழாய்கள் அமைக்க வேண்டும். நாற்று நடவு செய்யும் நாளன்று காலையில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, மாலை நேரத்தில் (3 மணி முதல் 6 மணிக்குள்) நடவு செய்யலாம். 22 முதல் 25 நாள் வயதுள்ள நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. விதை என்றால், ஒரு ஏக்கருக்கு 8,000 விதைகள் தேவைப்படும்.(நர்சரியில் பக்குவமாக 20 நாள்கள் வரை வளர்க்க வேண்டும்) நாற்றுகள் என்றால் 7,000 நாற்றுகள் தேவை.

நடவுக்கு முன்னதாக நாற்றுகளின் வேர்கள் மூழ்கும்படி பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து 15 நிமிடங்கள் வரை உலரவைத்த பிறகு, செடிக்குச் செடி இரண்டடி இடைவெளியில் பாத்திகளில் `ஜிக்ஜாக்’ முறையில் நடவு செய்ய வேண்டும். தக்காளி நாற்று நடுவதற்கு 10 நாள்களுக்கு முன்னரே வரப்பு ஓரத்தில் அகத்தி, ஆமணக்கு, செண்டுமல்லி விதைகளை மேலே உள்ள வரிசைப்படி தூவிவிட வேண்டும். இவற்றின் மூலம் பூச்சிகளைக் கவர்ந்து, கட்டுப்படுத்த முடியும். 20 மற்றும் 40-ம் நாள் களை எடுக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகள் வளர்ந்து நிழல்படுவதால் களைகள் முளைக்க வாய்ப்பில்லை. 25-ம் நாளில் செடியிலிருந்து அரை அடி தூரத்தில் 100 கிராம் என்ற கணக்கில் ஒவ்வொரு செடிக்கும் செறிவூட்டப்பட்ட சாணக்கலவை வைக்க வேண்டும்.

30-ம் நாளிலிருந்து 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளித்துவர வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் பூப்பூக்கும். அந்த நேரத்தில் அசுவினி, அந்துப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். தாய் அந்துப்பூச்சி இலையின் பின்புறம் முட்டையிட்டு, குஞ்சுபொரித்துவிட்டு இலையின் பச்சையத்தை உறிஞ்சிவிடும். இலையின் மீது வெண்மை நிறக் கோடுகள் தென்படுவதே இதன் அறிகுறி. இதைத் தவிர்க்க 35-ம் நாளுக்கு மேல் 10 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து 10 நாள்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பூப்பூக்க ஆரம்பித்த நேரத்தில் அதிகமாகப் பூ எடுக்கவும், பூக்கள் உதிராமலிருக்கவும் ஒரு ஏக்கருக்கு இரண்டு லிட்டர் புளித்தமோரில் ஐந்து தேங்காய்களிலிருந்து எடுக்கப்பட்ட பால் கலந்து, அதிலிருந்து 100 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் ஐந்து நாள்களுக்கு ஒரு முறை என மூன்று முறை தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பிஞ்சுக் காய்கள் தென்படும். 70-ம் நாளிலிருந்து 120 நாள்கள் வரை தொடர்ந்து பறிக்கலாம்.

100-ம் நாளுக்கு மேல், செடியில் இலை உதிரத் தொடங்கும். இலை உதிர்வதைத் தடுக்க 90-ம் நாளுக்கு மேல், ஒன்பது லிட்டர் தண்ணீரில், 300 கிராம் வண்டல் மண் கரைத்து, அதனுடன் ஒரு லிட்டர் இளநீர் கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கரைசலிலிருந்து ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாள்களுக்கு ஒரு முறை என மூன்று முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

தொழுவுரக் கலவை

பிளாஸ்டிக் தாள் விரித்து, நான்கு டன் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, அதனுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், வேம் ஆகியவற்றில் தலா இரண்டு கிலோ கலந்து கலவையாக்கிக்கொள்ள வேண்டும்.

இதை நிழலில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். கடைசி உழவு அன்று இந்தக் கலவையுடன் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, ராக்பாஸ்பேட் 50 கிலோ, சுண்ணாம்புத்தூள் 10 கிலோ ஆகியவற்றைக் கலந்து அடியுரமாகப் பயன்படுத்தலாம்.

குச்சி கட்டுதல்

நாற்று நடவு செய்த 25-ம் நாளில் சவுக்குக் குச்சிகளை ஆறடிக்கு ஒன்று என்ற இடைவெளியில் பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் ஆங்கில எழுத்து ‘A’ வடிவில் ஊன்ற வேண்டும். குச்சி கட்டியவுடன், முதலில் குறுக்கே 3, 5, 7 அடி உயரத்தில் மூன்று அடுக்காக நைலான் கயிற்றையும் சேர்த்துக் கட்டவிட வேண்டும்.

30-ம் நாளில் தக்காளிக் கொடிகளின் தண்டில் சணல் கட்டித் தூக்க வேண்டும். இதனால், கொடி வளையாமலும் சாயாமலும் இருக்கும். செடியின் வளர்ச்சியைப் பொறுத்து சணலைக் கட்டிவர வேண்டும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி

50 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் ஆடு தீண்டாப்பாலை ஐந்து கிலோ, சோற்றுக்கற்றாழை ஐந்து கிலோ, தும்பையிலை ஐந்து கிலோ, துளசி ஐந்து கிலோ, வேப்பங்கொட்டைத்தூள் ஐந்து கிலோ, புகையிலை 250 கிராம், பிரண்டை 250 கிராம், வெள்ளருகு 250 கிராம் ஆகியவற்றைத் துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு அவற்றுடன் ஐந்து லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் மற்றும் 25 லிட்டர் தண்ணீர் கலந்து நிழலில் 20 முதல் 25 நாள்வரை வைத்திருக்க வேண்டும்.

மூன்று நாளுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். இதை வடிகட்டி, இதிலிருந்து 150 மி.லி எடுத்து,10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

விவசாயிகள் ஒன்றிணைந்து நேரடி விற்பனை

திருநெல்வேலி மாவட்ட இயற்கை விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து நேரடியாக விளைபொருள்களை விற்பனை செய்து வருகிறார்கள். அது குறித்துப் பேசிய சுப்பிரமணியன், “ ‘விவசாயி வியாபாரியாகவும் மாறினால்தான் முன்னேற முடியும்’ என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, இயற்கை விவசாயிகள் 15 பேர் ஒண்ணு சேர்ந்தோம்.

ஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி!

‘திருநெல்வேலி இயற்கை விவசாயிகள் சங்க’மாகப் பதிவுசெய்தோம். அப்போ இருந்த மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உதவி செஞ்சாரு. பாளையங்கோட்டை உழவர் சந்தைக்கு வெளிப்பகுதியில எங்க விளைபொருள்களை விற்பனை செஞ்சோம்.

இப்போ அங்கே பாலம் வேலை நடக்குது. அதனால தற்காலிகமா என்.ஜி.ஓ காலனியில் என் வீட்டுல செயல்படுது. 15 பேரும் வழக்கமான சாகுபடியோடு சோதனை முயற்சியா கொஞ்ச இடத்துல இந்தத் தக்காளியையும் சாகுபடி செஞ்சோம். முதல் முயற்சியிலேயே நல்ல மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றார்.

செறிவூட்டப்பட்ட சாணக்கலவை

பிளாஸ்டிக் தாளில் பசுஞ்சாணம் 700 கிலோ, ஹுயூமிக் அமிலம் 500 கிராம், கடுக்காய்த்தூள் ஒரு கிலோ, அதிமதுரத்தூள் 250 கிராம், கோரைக்கிழங்குத்தூள் ஒரு கிலோ, வண்டல் மண் ஐந்து கிலோ, அறுகம்புல் சாறு ஒரு லிட்டர், இளநீர் ஒரு லிட்டர் ஆகியவற்றைப் பிசைந்து கலவையாக்கிக்கொள்ள வேண்டும். இதை ஒரு வாரம் வரை நிழலில்வைத்து, அதிலிருந்து ஒரு செடிக்கு 100 கிராம் வீதம் எடுத்து, அரை அடி தூரத்தில் வைத்து மூட வேண்டும்.