Published:Updated:

கழனி வீட்டில் கணிப்பொறி வேலை களத்து மேட்டில் சர்க்கரை ஆலை!

நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்

இயற்கை கரும்புச் சாகுபடியில் அசத்தும் பெண் மென்பொறியாளர்!

மதிப்புக்கூட்டல்

காணி நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். அந்த நிலத்தில் வீடுகட்டி அமைதியாக வாழ வேண்டும் என்பது நகரவாசிகள் பலரின் கனவாக இருக்கிறது.

குறிப்பாக மென்பொருள் துறையில் பணியாற்றும் சிலர், அந்தக் கனவை நனவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மென்பொறியாளர்கள், ஊரடங்கு விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்குப் போய்த் தீவிரமாக விவசாயம் செய்யவும் தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர்தான் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள கணியூர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்
நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்

மென்பொருள் பொறியாளராக வெளியூரில் வேலைபார்த்து வந்தவர், ஊரடங்கு விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று, கணவர் பிரபு மற்றும் தந்தை ரங்கராஜனுடன் இயற்கை வழி வேளாண்மையில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதோடு தங்கள் வயலில் ஆலை அமைத்துக் கரும்பை மதிப்புக்கூட்டல் செய்து, நாட்டுச் சர்க்கரை உற்பத்தியும் மேற்கொண்டு வருகிறார்.

ஓர் அதிகாலையில் அவரைச் சந்தித்தோம். முற்றிய கரும்பை வெட்டிக் கட்டாகக் கட்டி, களத்து மேட்டிற்குக் கொண்டுவரும் பணி ஒரு புறம் நடக்க, சுழலும் இயந்திரத்தில் கரும்பைக் கொடுத்துப் பால்(சாறு) எடுக்கும் வேலை இன்னொரு புறம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. கரும்புப் பால் நிரம்பிய கொப்பரை அடுப்பு கொதித்துக்கொண்டிருந்தது. ஆறிய பாகுவைக் கிளறிக் குவித்து மூட்டைப் பிடிக்கும் பணியும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்க, அப்பா ரங்கராஜனுடன் சேர்ந்து ஆலைப்பணிகளை பார்த்துக்கொண்டிருந்தார் கவிதா.

“நான் மென்பொருள் பொறியாளர். சென்னை, பெங்களூரு, கோவைனு பல ஊர்கள்ல வேலை பார்த்திருக்கேன். இப்ப ஊரடங்கு காரணமா கிராமத்துல இருக்கேன். இங்க அப்பாவுக்கு உதவியா விவசாயம் பார்க்கிறேன். எங்களது பரம்பரை விவசாய குடும்பம். படிக்கிற காலத்திலிருந்தே விவசாயம் செய்யணும்னு ரொம்ப ஆர்வம். விவசாயம் சம்பந்தமான பத்திரிகைகளை விரும்பி வாசிப்பேன். குறிப்பா பசுமை விகடன் இதழைத் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது பசுமை விகடன்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவசாயம் செய்ய ஆர்வம் இருந்தாலும் அதற்கான வாய்ப்பு அமையல. படிச்சு முடிச்சதும் வேலை கிடைச்சு வெளியூர் போயிட்டேன். அப்புறம் திருமணம், குழந்தைகள்னு பரபரப்பாக இயங்க வேண்டிய சூழ்நிலை. வீட்டுக்கு நான் ஒரே பெண். எங்கப்பா ரங்கராஜன். கூடமாட அவருக்கு உதவிக்கு ஆளில்லை. தனியாளா நின்னு விவசாயத்தை கவனிச்சிட்டிருந்தார். அடிக்கடி செல்போன்ல அப்பாவும் நானும் விவசாயம் சம்பந்தமாக நிறைய பேசிக்குவோம். இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து வாட்ஸ்அப் தகவல்களை அவருக்கு அனுப்புவேன். அதைப் பார்த்து அவரும் அதைச் செயல்படுத்துவார்.

நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்
நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு பணியில்

சில நேரங்கள்ல விவசாயத்துல நஷ்டம் ஏற்படும். அப்ப மனசு ஒடிஞ்சு அப்பா எங்கிட்ட பேசுவார். ‘விவசாயத்தை விட்டுப் போயிடலாம்னு தோணுது’ என்று சொல்லுவார். அந்த நேரத்துல நம்மாழ்வார் ஐயா சொல்லிக்கொடுத்த ஒரு விஷயத்தை அவருக்கு ஆறுதலா சொல்வேன். அந்த விஷயம்தான் மதிப்புக்கூட்டல்.

‘விவசாயிகள் தங்கள் வயலில் விளையும் விளைபொருள்களில் ஒரு பகுதியை மதிப்புக்கூட்டல் செய்து, நேரடி விற்பனை செய்தால் விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியும்’ இது ஐயா சொன்னது.

கரும்புப் பால் பிரித்தெடுக்கும் பணி
கரும்புப் பால் பிரித்தெடுக்கும் பணி

அந்த அடிப்படையில, கரும்பு விவசாயம் செய்ற அப்பாகிட்ட, ‘கரும்பை மதிப்புக்கூட்டல் செய்து நாட்டுச் சர்க்கரையா மாற்றி விற்பனை செய்யலாம்’னு ஆலோசனை சொன்னேன். அவரும் உடனே செயல்படுத்திட்டார். இப்ப அறுவடை செய்யும் கரும்பை அரைச்சு, சர்க்கரையாக மாற்றி விற்பனை பண்ணிட்டு இருக்கார். வீட்டுக்கு நான் ஒரே பெண். என்னைக்காவது ஒரு நாள் வேலையை விட்டு, கிராமத்தில வந்து உட்கார்ந்து அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்யணும்ங்கிற கனவு எப்பவும் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.

என்னோட நீண்ட நாள் விவசாயக்கனவை நனவாக்கிக் கொடுத்திருக்குது கொரோனா. இந்த நாலு மாச ஊரடங்கு, என்னை என்னோட கிராமத்துல கொண்டு வந்து சேர்த்திடுச்சு. கணவர் பிரபும் நானும், எங்க குழந்தைகளோடு சேர்ந்து அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரும்பு வெட்டுறது, கரும்புக்கட்டுக்களை வயல்ல இருந்து களத்து மேட்டுக்கு எடுத்துட்டு வர்றது, கரும்பு ஆலை இயந்திரத்தில அரவை செய்றது, பால் எடுத்துக் கொப்பரையில ஊத்திக் கொதிக்க வைக்கிறது, அதை ஆற வெச்சு, நாட்டுச்சர்க்கரையா மாத்தி, மூட்டைப் பிடிக்கிறதுன்னு எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செஞ்சுட்டு வர்றேன்.

நாட்டு மாட்டுடன் கவிதா
நாட்டு மாட்டுடன் கவிதா

இயற்கை விவசாயத்தில முக்கியமான மூலதனம் நாட்டு மாடுகள்தான். அந்த வகையில அஞ்சு நாட்டுப் பசுக்களை வளர்க்குறோம். வெளியூர்ல இருக்கும்போது பாக்கெட் பால் மட்டும்தான் கிடைக்கும். குழந்தைகளுக்கும் கூட அதுதான் கொடுப்போம். ஆனா, இப்ப நாலு மாசமா பால், தயிர், மோர், வெண்ணெய்னு எங்க வீட்டுல நாடுப்பசும்பால் வாசம்தான் வீசுது. பால் பயன்பாடுகளைத் தாண்டி, வயலுக்குத் தேவையான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கவும் மாடுகள் உதவியாக இருக்குது.

இயற்கை இடுபொருளுடன் ரங்கராஜன்
இயற்கை இடுபொருளுடன் ரங்கராஜன்

மதிப்புக்கூட்டல் முறையில் நாங்க உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஊரடங்கு காலத்தில விற்பனை செய்ய முடியாம அப்பா சிரமத்துல இருந்தார். அதற்கான தீர்வையும் கண்டுபிடிச்சு செயல்படுத்தினேன். இப்ப சர்க்கரை வியாபாரம் தூள் பறக்குது. வாட்ஸ் அப், முகநூல் ஆகிய சமூக ஊடகங்கள்ல தொடர்ந்து விளம்பரப்படுத்தினேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில விளைந்த கரும்பில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செஞ்சேன். அந்தப் பதிவைப் பார்த்த பலர், எங்க வயலுக்கே நேர்ல வந்து கிலோ 80 ரூபாய் விலையில சர்க்கரை வாங்கிட்டுப் போறாங்க. வெளியூர்காரங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்’’ என்ற கவிதா, நிறைவாக,

“ஊரடங்கு எப்போது முடியும்னு தெரியாது. என்னோட அலுவலக வேலையை வீட்டுல இருந்தே செய்றேன். இந்த ரெண்டு வேலையும் என் மனசை மகிழ்ச்சியா வெச்சிருக்கு. 12 வருஷமா, விடுமுறை கிடைக்கும்போது, அவசரகதியில ஊருக்கு வந்துட்டு மறுபடியும் அவசர அவசரமா ஒடுவோம். ஆனா, இப்பதான், என்னை மாதிரி பலருக்கும் ஊர், சொந்த பந்தங்களோட வாழும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. உறவுகளோடு வாழுற வாய்ப்பை ஊரடங்கு கொடுத்திருக்கு’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ரங்கராஜன், செல்போன்: 91766 70784

கழனி வீட்டில் கணிப்பொறி வேலை களத்து மேட்டில் சர்க்கரை ஆலை!

மறுதாம்பு மகசூல்!

ரும்புச் சாகுபடி குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் கவிதாவின் தந்தை ரங்கராஜன். ‘‘எங்களுக்கு மொத்தம் நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ஒன்றரை ஏக்கர் அளவுலதான் கரும்பு. மீதமுள்ள 3 ஏக்கர்ல நெல், வெங்காயம், மிளகாய்னு மற்ற பயிர்களை மாத்தி மாத்தி விதைப்போம். அமராவதி ஆற்றுப்பாசனம்தான் ஆதாரம். அந்தத் தண்ணீர் கிடைக்காத நாள்கள்ல கிணற்றுத் தண்ணீர்தான் கைகொடுக்கும். கடந்த 5 வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்யறோம். ‘நாட்டு மாடுகள்தான் இயற்கை விவசாயத்தின் மூலப்பொருள்’னு என் மகள் கவிதா சொல்லுவாங்க. அந்த வகையில 5 நாட்டுப்பசுக்களை வாங்கி வளர்க்குறோம். கரும்பு முதல்பட்டம் அறுவடை போன வருஷம் முடிஞ்சிருச்சு. இப்ப அறுவடையில இருப்பது மறு தழைவு கரும்பு.

ஒன்றரை ஏக்கர் நிலத்தை உழுது 15 டன் தொழுவுரத்தை அடியுரமா கொட்டி இறைச்சோம். பார் முறையில பாத்தி அமைச்சோம். குழித்தட்டு கரும்பு நாற்றுகளை வாங்கி நடவு செஞ்சிருக்கோம். ஒன்றரை ஏக்கருக்கு 9,000 நாற்றுகள் நடவு செஞ்சோம். சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். மாசம் ஒரு தடவை 5 வகையான பிண்ணாக்குக் கரைசலைக் கொடுப்போம். இதைக் கொடுக்குறதுனால வேர் சம்பந்தமான நோய், தோகை வாடல் நோய் வர்றதில்லை. தொடர்ந்து 15 நாளுக்கு ஒரு முறை சொட்டுநீர்க் குழாய் மூலம் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா ரெண்டையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். கரும்பு வயல்ல உறிக்குற தோகையை வயலுக்குள்ள மூடாக்கு போட்டுடுவோம். 10-ம் மாசம் கரும்பை வெட்ட ஆரம்பிப்போம்’’ என்றவர் கரும்பு மதிப்புக்கூட்டல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மதிப்புக்கூட்டலில் இரண்டு மடங்கு லாபம்...

வெட்டிய கரும்பை நேரடியா விற்பனை செய்தால் வெட்டுக்கூலி போக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் விலை கிடைக்கும். 70 டன்னுக்கு 1,61,000 ரூபாய் கிடைக்கும். அதையே நாட்டுச்சர்க்கரையா மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால் ரெண்டு மடங்கு விலை கிடைக்குது. ஒன்றரை ஏக்கரிலிருந்து கிடைக்கும் 70 டன் கரும்பிலிருந்து 7,000 கிலோ சர்க்கரை உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ சர்க்கரை 80 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். 7,000 கிலோவுக்கு 5,60,000 ரூபாய் வருமானம். இதில் கிட்டத்தட்ட 2,00,000 ரூபாய் உற்பத்திச் செலவு போயிடும். மீதம் 3,60,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும்.

சர்க்கரைக்காகக் களத்து மேட்டுல ஆலை அமைச்சிருக்கோம். அதுக்கான செலவு 5,00,000 ரூபாய். அந்தச் செலவு பணத்தை முதல் போக கரும்பு மகசூல்லயே எடுத்துட்டோம். எங்க தோட்டத்தில கரும்பு வெட்டு முடிஞ்சதும் சொந்தமா ஆலையில்லாத விவசாயிகளுக்கு மாசம் 6,000 ரூபாய் வாடகைக்கு விட்டுடுவோம். வருஷத்தில் 6 மாசம் வாடகை ஆலை ஓடும். அதன் மூலம் வருஷத்துக்கு 36,000 ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்குது. முழுக்க முழுக்க ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில சர்க்கரை உற்பத்தி செய்றதால, புளிப்பு, உவர்ப்பு தன்மை இல்லாம இயல்பான சுவையுடன் சர்க்கரை இருக்கும். கட்டுப்படியாகுற விலை கிடைக்காத நாள்கள்ல, இயற்கை நாட்டுச் சர்க்கரையை ஒரு வருஷம் வரைக்கும் இருப்பு வெச்சு விற்பனை செய்ய முடியும். அதன் தன்மையும் சுவையும் மாறாது’’ என்றார்.