Published:Updated:

மாதம் ரூ. 80,000 முயல் வளர்ப்பு தந்த முன்னேற்றம்! - பெண் பண்ணையாளரின் அனுபவப் பாடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூரைக் கொட்டகைக்குள் கூண்டுகளில் வளரும் முயல்களுடன் சத்யா
கூரைக் கொட்டகைக்குள் கூண்டுகளில் வளரும் முயல்களுடன் சத்யா

கால்நடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

சின்னச் சின்னத் தோல்விக்குக்கூடத் துவண்டு விழுந்துவிடுவது மனிதர்கள் இயல்பு. இவர்களுக்கு மத்தியில் திருமண வாழ்க்கையில் தோல்வி, குழந்தைக்கு இதயக்கோளாறு எனப் பல பெரிய துன்பங்களை எதிர்கொண்டு, போராடி வெற்றி பெற்றிருக்கிறார் சத்யா. வாழ்க்கையில் முன்னேற அவருக்குக் கைகொடுத்தது முயல் வளர்ப்பு. தற்போது ‘முயல்’ சத்யா என்பதே இவரின் அடையாளமாகிப் போனது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் முயல் பண்ணை வைத்திருக்கும் இவரை, அவரது பண்ணையில் சந்தித்தோம்.

மாதம் ரூ. 80,000 முயல் வளர்ப்பு தந்த முன்னேற்றம்! - பெண் பண்ணையாளரின் அனுபவப் பாடம்!

“என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்தினதே முயல்கள்தான். நான் பட்டப்படிப்பு படிச்சிட்டு, கவர்மென்ட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துகிட்டு இருந்தேன். அப்போ அப்பா இறந்துட்டாரு. கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய கட்டாயம். வாத்தியார் வேலை பார்த்த ஒருத்தருக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, அவரு வாத்தியார் வேலையில இல்லை, ஏமாத்தி கல்யாணம் செஞ்சிருக்காருனு. `சரி... என்ன பண்றது கல்யாணம் ஆகிடுச்சே’னு அதையும் சகிச்சுகிட்டுக் குடும்பம் நடத்தினேன். கொஞ்ச நாள்ல வரதட்சணைக் கொடுமை ஆரம்பிச்சுது. எத்தனை முறை அம்மா வீட்டுக்குப் போய் பணம் வாங்கிட்டு வந்து கொடுத்தாலும், அவருக்குப் பத்தலை. குழந்தை பொறந்துச்சு. குழந்தைக்கு இதயத்துல கோளாறு. அது தெரிஞ்சதும், என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாரு. அம்மாவும் அண்ணனும்தான் ஆறுதலா இருந்தாங்க. கிடைச்ச வேலைகளையெல்லாம் பார்த்தேன். ஒரு கட்டத்துல மகனுக்கு ஆபரேஷன் செஞ்சோம். அவனுக்கு குணமாகிடுச்சு.

சோறு போட ஆளில்லை. அவர் வளர்க்குற முயல்கள்தான் அவருக்கு வருமானம் கொடுத்தது. கறி முயல் கிலோ 400 ரூபாய்க்கும், மொத்தமா எடுக்குறவங்களுக்கு 300 ரூபாய்க்கும் கொடுக்குறேன்.

அந்த நேரத்துல கருங்காலகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல தினக்கூலியா வேலை கிடைச்சுது. அங்கே ஒரு பெரியவரைப் பார்த்தேன். அஞ்சு பிள்ளைகளைப் பெத்தும் அவருக்குச் சோறு போட ஆளில்லை. அவர் வளர்க்குற முயல்கள்தான் அவருக்கு வருமானம் கொடுத்தது. அவருதான் முயல் பண்ணை பத்தி எனக்குச் சொன்னார். மனசுக்கும் ஆறுதலா இருக்கும்கிறதால நானும் முயல் வளர்ப்புல இறங்கினேன். முதல்ல அஞ்சு முயல்களை வாங்கி வீட்டுல வளர்த்தேன். அதுல ஓரளவு அனுபவம் கிடைச்சுது. அண்ணனோட உதவியால ஊருக்கு வெளியே ஒரு இடம் கிடைச்சுது. அங்கே 2017-ம் வருஷம் ஒரு யூனிட் முயல்களை வளர்க்க ஆரம்பிச்சேன்.

ஒரு யூனிட்ங்கிறது 7 பெண், 3 ஆண் முயல்களைக் கொண்டது. காலையிலயும் சாயந்திரத்துலயும் பார்த்துகிட்டா போதும்கிறதால வேற வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு யூனிட், நாலு யூனிட்டா பெருகிச்சு. சில்லறை வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சுது. அப்போதான் எனக்கு ஒரு நம்பிக்கை உருவாகிச்சு. முயல்களை கவனமாகப் பராமரிக்க ஆரம்பிச்சேன். முயல்கள் பெருக ஆரம்பிச்சுது. இப்போ என்கிட்ட 300 முயல்களுக்கு மேல இருக்குது’’ என்றவர் முயல்களைப் பராமரிக்கும் முறைகளை விளக்கினார். ‘‘முயல்களால் அதிக வெப்பத்தையும் குளிரையும் தாங்க முடியாது. அதனால கூரைக் கொட்டகைதான் நல்லது. அது, காத்து மழையைத் தாங்கக்கூடியதாகவும் இருக்கணும். இதோடு முயல்களுக்கு மண் தரைதான் நல்லது. அப்போதான் முயல்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படாம இருக்கும். குழாய்வழியா தண்ணி கொடுத்தா, அடிக்கடி தண்ணி தர வேண்டிய அவசியம் இருக்காது.

பண்ணையும் சுத்தமாக இருக்கும். மண்பானையில தண்ணியை ஊத்தி, குழாய் வழியாகக் கொடுத்தா ஆரோக்கியமா இருக்கும். முயலுக்கு செரிமானத் தன்மை குறைவு. அதனால அடிக்கடி தீவனம் கொடுக்கக் கூடாது. காதைப் பிடிச்சு தூக்கக் கூடாது. காலையில 7 மணியில இருந்து 8.30 மணிக்குள்ள அடர் தீவனம் கொடுக்கணும்’’ என்றவர் தீவனம் மற்றும் பராமரிப்பு குறித்துப் பேசினார்.

அடர் தீவனம் தயாரிப்பு

‘‘ஒரு யூனிட்டுக்கு அடர் தீவனம் தயாரிக்க கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகுனு தலா 2 படி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பயறு, பருத்திக்கொட்டை, பச்சரிசி, புழுங்கலரிசியில் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு, உளுந்து, கடலைப் பிண்ணாக்கு, பொட்டுக்கடலையில் தலா அரைக் கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு சிறிது தாது உப்பு கலந்து, பதமாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை, தினமும் காலையில் தண்ணீரில் கலந்து உருண்டையாக உருட்டி முயல்களுக்குக் கொடுக்கலாம். குட்டி முயல்களுக்கு 40 கிராம், பெரிய முயல்களுக்குச் 80 கிராம், தாய் முயலுக்கு 120 கிராம் வீதம் என்ற அளவில் அடர் தீவன உணவைக் கொடுக்க வேண்டும்.

கூரைக் கொட்டகைக்குள் கூண்டுகளில் வளரும் முயல்களுடன் சத்யா
கூரைக் கொட்டகைக்குள் கூண்டுகளில் வளரும் முயல்களுடன் சத்யா

மாலை வேளையில் சிறிதளவு பசுந்தீவனம் கொடுத்தால் போதும். வாரம் ஒருமுறை குளூக்கோஸும், நெல்லிக்காய்ச் சாறும் தண்ணீரில் கலந்து கொடுப்பது நல்லது. முயல்கள் சோர்வாக இருக்கும்போது பழங்களை வெட்டிக் கொடுக்கலாம். கழிச்சல்நோய் ஏற்பட்டால் ஓமத்தை நசுக்கி, பெருங்காயம் சேர்த்து, வெந்நீரில் கலந்து கொடுக்கலாம் அல்லது தென்னைக் குறும்பை, பச்சை ஓலைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கலாம்.

‘‘முயல்களுக்கு அதிக வெப்பமும் குளிரும் தாங்காது. அதனால கூரைக் கொட்டகைதான் நல்லது. அதே சமயத்துல காத்து மழைக்குத் தாங்ககூடியதாகவும் இருக்கணும்.’’

விரைவாகக் கழிச்சல்நோய் சரியாகிவிடும். காதுகளில் சொறி ஏற்பட்டால், மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்துத் தடவிவிட்டால் சரியாகிவிடும். சளிப் பிரச்னை இருந்தால், நாட்டு வெற்றிலையைக் கொடுக்கலாம். கறிக்கு விற்பனையாகும் முயல்களுக்கு கோதுமைத் தவிடு மற்றும் கடலைப் பிண்ணாக்குக் கொடுத்தால் நல்ல எடை கிடைக்கும். முடிந்தவரை பண்ணையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும், நோய்த் தாக்குதல் ஏற்படாது’’ என்றவர், கூண்டின்மேல் இருந்த முயலைக் கையில் எடுத்து தடவிக்கொடுத்தபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

``இதுங்களை என்னோட குழந்தைகள் மாதிரி பார்த்துக்கிறேன். ஈடுபாடா இருந்தாத்தான் ஆரோக்கியமா வளர்க்க முடியும். முயல் வளர்க்குறது கொஞ்சம் சிரமமானது. ஆனா, முறையா கவனிச்சுகிட்டா போதும். நோய்த் தாக்கினா இயற்கை முறையில மருந்து கொடுத்து குணமாக்கிடுவேன். மண்பானை மூலம், சொட்டுநீர்க்குழாய் மூலம் முயல்களுக்குத் தண்ணி கொடுக்குறது, மூலிகை உணவு கொடுக்குறதால செலவு குறையுது. முயலும் ஆரோக்கியமா வளருது’’ என்றவர் விற்பனையைப் பற்றிப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விற்பனையில் வில்லங்கமில்லை

‘‘ஒரு முயல் மாசத்துக்கு ஒண்ணுல இருந்து 10 குட்டிகள் வரைக்கும் போடும். அதிக குட்டிகள் போட்டாலும், எல்லாக் குட்டிகளுக்கும் பால் கொடுக்க முடியாது. அதனால சில குட்டிகள் இறந்துடும். முயல் 30 நாள்களிலேயே இனப்பெருக்கத்துக்குத் தயாராகிடும். ஆனா, வருஷத்துக்கு ஆறு தடவை மட்டும் குட்டி போட்டாத்தான் தாயும் குட்டியும் நல்லா இருக்கும். குட்டி போட்ட பிறகு ஒரு மாசம் கழிச்சுதான் இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்தணும். அப்போதான் எல்லாக் குட்டிகளுக்கும் பால் கொடுக்க முடியும்.

விற்பனையில பிரச்னையில்லை. திருச்சி, கரூர், நாமக்கல் வியாபாரிங்க வாங்கிக்கிறாங்க. சிலர் நேர்ல வந்தும் வாங்கிட்டுப் போறாங்க. முயலின் வகைகள், எடையைப் பொறுத்து விலையில வித்தியாசம் இருக்கும். என்கிட்ட சோவியத் டச், அங்கோரா, ரெட் ஜெயின்ட், ஒயிட் ஜெயின்ட், பிளாக் ஜெயின்ட், நியூசிலாந்து ஒயிட், கலிஃபோர்னியா, இங்கிலீஷ் பார்ட் ரக முயல்கள் இருக்குது.

தனிநபர்களுக்கு முயல் கிலோ 400 ரூபாய்க்கும், மொத்தமா எடுக்குறவங்களுக்கு 300 ரூபாய்க்கும் விக்கிறேன். வளர்ப்புக்கு ஒரு மாத முயல் தனிநபருக்கு 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கொடுக்கிறேன். மொத்தமா கொடுக்கும்போது 400 முதல் 450 ரூபாய்க்கு கொடுக்கிறேன். இது மூலமா மாசம் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. செலவு 20,000 ரூபாய் போனாலும் மீதிப் பணம் லாபம்தான்’’ என்றார் நிறைவாக,

பயிற்சி இலவசம்

‘‘முயல் கொடுக்குற வருமானம்தான் என்னைத் தன்னம்பிக்கை மனுஷியா மாத்தியிருக்கு. என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கும் நான் உதவி செய்றேன். எனக்குத் தெரிஞ்சவங்களுக்குப் பண்ணை அமைச்சு கொடுத்திருக்கேன். இன்னும் பல பேருக்கு ஆலோசனை சொல்லிகிட்டு இருக்கேன்.

இந்தத் தொழில் செய்ய நினைக்குறவங்களுக்கு என் பண்ணையிலேயே இலவசமா பயிற்சி கொடுக்குறேன். விருப்பம் இருக்கறவங்க நேர்ல வந்து இலவசமா பயிற்சி எடுத்துக்கலாம். எங்கிட்ட பயிற்சி எடுத்துப் பண்ணை ஆரம்பிக்குறவங்க, வளர்த்துக் கொடுக்குற முயலையும் விற்பனை செய்ய உதவி செய்றேன். இந்த 20 சென்ட் இடத்துல முயல்களோட, கின்னிக்கோழி, நாட்டுக் கோழி, கருங்கோழி, புறா, நாய்னு பல பிராணிகளையும் வளர்த்துகிட்டு இருக்கேன்’’ என்றார் உற்சாகமாக.

தொடர்புக்கு, சத்யா, செல்போன்: 98432 55495.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு