Published:Updated:

தோட்டக்கலை பயிர்கள் பற்றிய A டு Z தகவல்கள்... அழைக்கும் தேசிய தோட்டக்கலை கண்காட்சி!

தோட்டக்கலை கண்காட்சி
தோட்டக்கலை கண்காட்சி

ஒவ்வோர் ஆண்டும் தோட்டக்கலைப் பயிர்கள் சம்பந்தமான கண்காட்சியை நடத்தி வருகிறது பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்.

இதுகுறித்து பேசிய இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சக்திவேல், ``இந்திய அளவில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் கண்காட்சிகளில் இந்த தோட்டக்கலை கண்காட்சி முக்கியமானது. ஏனென்றால், விவசாயத்தில் அதிக வருமானம் கொடுப்பவற்றில் தோட்டக்கலைப் பயிர்கள் முன்னணியில் இருக்கின்றன. கொய்யா, பப்பாளி, சீத்தா, எலுமிச்சை, பலா, மா போன்ற பழப்பயிர்களும் கத்திரிக்காய், தக்காளி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகளும், மலர் வகைகளும், மூலிகை தாவரங்களும், இயற்கை இடுபொருளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

தோட்டக்கலை கண்காட்சி
தோட்டக்கலை கண்காட்சி

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய அர்கா கிரண் என்ற கொய்யா ரகம் தமிழ்நாட்டில் பிரபலம். அதேபோன்று இந்த ஆண்டு கொய்யாவில் வெண்ணிற சதை பற்றுள்ள `அர்கா பூர்ணா’ என்ற ரகத்தை வெளியிட்டிருக்கிறோம். ஐஸ் பாக்ஸ் தர்பூசணியான `அர்கா ஸ்யாம்’, கொடி அழுகல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட சுரைக்காயான `அர்கா கங்கா’, மிளகாயில் இலைச்சுருட்டை நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட `அர்கா ககன்’, காய்கறி மற்றும் பழங்களிலிருந்து பூச்சிக்கொல்லி ரசாயனங்களை அகற்றுவதற்கான `அர்கா ஹெர்பி வாஷ்’ என்ற இயற்கை இடுபொருள்களையும் வெளியிட்டிருக்கிறோம்.

புதிய வெளியீடுகள் பற்றிய சாகுபடி நுட்பங்களும் விதைகளும் கிடைக்கும். எங்கள் ஆராய்ச்சி மையம் சார்பாக இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட ரகங்களை வெளியிட்டிருக்கிறோம். அதுபற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கும். நேரடி செயல் விளக்கமும் இந்தக் கண்காட்சியில் நடைபெற உள்ளது. நர்சரி தொடங்குவதற்கான உரிமம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள், விதை நேர்த்தி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மா, பலாவில் மதிப்புக்கூட்டுவதற்கான தொழில்நுட்பங்கள் எனப் பல விஷயங்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கும் இந்தக் கண்காட்சி மூலம் கிடைக்கும்” என்றார்.

தோட்டக்கலை கண்காட்சி
தோட்டக்கலை கண்காட்சி

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் பேசியபோது, ``இந்தக் கண்காட்சியில் விதைகள், பழ நாற்றுகள், பசுமைக் குடில் அமைப்பதற்கான கட்டுமான பொருள்கள் கிடைக்கும். பல வகையான நீர்ப்பாசன முறைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் சிப்பமிடுதல் பற்றிய தொழில்நுட்பங்களும் கிடைக்கும். ஏற்றுமதி சேவைகள், தோட்டக்கலை இயந்திரமாக்கல், விவசாயிகள்-விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் நேரடியாகக் கலந்து கொள்வது போன்றும், அந்தந்த மாவட்ட கேவிகேயிலிருந்து ஆன்லைன் வழியாகப் பார்ப்பதற்கும் விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயிகள் முன்பதிவு செய்து பெங்களூரு அடுத்த ஹெசரகட்டாவில் நடைபெறும் கண்காட்சியில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம். அல்லது பிப்ரவரி 12-ம் தேதி அருகிலுள்ள கேவிகேயிலிருந்து நேரலை மூலமாகவும் பார்த்து பயன்பெறலாம்.

தினம்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாட உள்ளனர். விவசாயிகள், மாணவர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள் என யார் வேண்டுமென்றாலும் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். கண்காட்சியில் நேரடியாகக் கலந்துகொள்ள விரும்புவோர் https://nhf2021.iihr.res.in/ லிங்கில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்” என்றார்.

தோட்டக்கலை கண்காட்சி
தோட்டக்கலை கண்காட்சி

தேசிய தோட்டக்கலை கண்காட்சி

நடைபெறும் நாள்கள்: பிப்ரவரி 8 முதல் 12 வரை

இடம்: ஐ.சி.ஏ.ஆர்-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், ஹெசரகட்டா, பெங்களூரு-560 089

தங்கள் வருகையை முன்பதிவு செய்ய: https://nhf2021.iihr.res.in/

மேலும் விவரங்களுக்கு

முனைவர் சக்திவேல், செல்போன்: 94488 13662

முனைவர் ஆர்.செந்தில்குமார், செல்போன்: 96637 96473

அடுத்த கட்டுரைக்கு