Published:Updated:

ஒரு ஏக்கரில் ஒரு லட்சம்... தேனீ வளர்ப்பில் வருமானம் அள்ளும் விருத்தாச்சலம் இளைஞர்!

"முந்திரித் தோப்புகள் தேனீ வளர்ப்புக்கு உதவியாக இருக்கின்றன. 40 பெட்டிகளில் தேனீ வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது" என்கிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரச்செல்வன்.

தேனீ பெட்டிகள்
தேனீ பெட்டிகள் ( எஸ்.தேவராஜன் )

படித்து முடித்ததும் எங்கே வேலைக்குச் செல்வது, யாரை அணுகுவது, வேலைவாய்ப்புச் செய்திகள் என்ன, கேம்பஸ் இன்டர்வியூ என்று தேடி அலைவதுதான் இன்றைய இளைஞர்களின் ஸ்டைல். ஆனால், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரச்செல்வன் சற்றே வித்தியாசமானவர்.

Vikatan

படித்து முடித்ததும் உடனே விவசாயத்தில் இறங்கிவிட்டார். வெறும் விவசாயத்தை மட்டுமே செய்துகொண்டிருக்காமல் கூடவே தேனீவளர்ப்பைக் கற்றுக்கொண்டு அதிலும் ஏராளமாக வருமானம் ஈட்டுகிறார்! ஆரம்பத்தில் ஃபுல்டைம் விவசாயம், பார்ட் டைமாக தேனீவளர்ப்பு என்று இருந்தவருக்கு இப்போது... தேனீ வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாகி விட்டது.

"தேனீ வளர்ப்பு மிகவும் கடினமான தொழில் இல்லை. சரியாகக் கற்றுக்கொண்டு முறையாகச் செய்தால் யாரும் நிச்சய வருமானம் பார்க்கலாம்!"
சுந்தரச்செல்வன்

இது குறித்து பேசிய சுந்தரச்செல்வன் "படிப்பு முடிஞ்சதும் எல்லோரையும் போல வேலை தேடணும், மாசச் சம்பளம் வாங்கணும் என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. விவசாயம் பண்ணி ஏதாச்சும் பெரிசா சாதிக்கணும்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும். அந்த நேரத்துல தேனீ வளர்ப்பு பற்றி தெரிய ஆரம்பிச்சதும் அந்த எண்ணம் அதிகமாயிடுச்சு. உடனே அதைப் பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பிச்சேன். தேனீ வளர்க்குறவங்களை தேடிப் போய், பார்த்துப் பேசி என்னோட சந்தேகங்களைத் தீர்த்துக்கிட்டேன். எங்களுக்கு தண்ணீர் வசதியோட 5 ஏக்கர் நிலமிருக்குது. அதுல தேனீ வளர்ப்பை ஆரம்பிச்சேன்.

தேனீயுடன் சுந்தரச்செல்வன்
தேனீயுடன் சுந்தரச்செல்வன்
எஸ்.தேவராஜன்

முதல்ல 30 சென்ட் நிலத்துல குறைந்தளவு பெட்டிகளை வெச்சு ஆரம்பிச்சேன். முறையா கவனிச்சுக்கிட்டதால இப்ப பெட்டிகள் அதிகமாகிடுச்சு. இன்னைக்கு ஒரு ஏக்கர் நிலத்துல 40 பெட்டிகள் இருக்குது. எங்க பகுதியில இருக்குற முந்திரி வயல்கள் தேனீ வளர்க்க ரொம்பவும் உதவியா இருக்கு. தேனீக்களை அடிக்கடி இடம் மாற்றம் செய்யணும். அப்பதான் அதிக தேன் கிடைக்கும். இதுக்கு பக்கத்துல இருக்க சொந்தக்காரங்க நிலங்களைப் பயன்படுத்திக்கிறேன்.

தேனீ பெட்டி வைக்குறதுனால அயல் மகரந்தச்சேர்க்கை நடக்குது. அதுனால அதிக மகசூல் கிடைக்குறதுனால அவங்களுக்கும் மகிழ்ச்சிதான். முந்திரி பூ பூக்குற சீசன்ல ஒரு பெட்டிக்குக் குறைஞ்சது 4 கிலோ வரைக்கும் தேன் கிடைக்கும். இயற்கையான முறையில தேன் கிடைக்குறதால கிலோ 700 ரூபாய்னு விற்பனை செய்றேன். நேரடியா வந்து வாங்கிட்டுப் போறாங்க. முந்திரி சீசன் இல்லாத நாள்ல தேனீக்களுக்கு சர்க்கரை பாகு வைப்பேன். எங்க நிலத்தில வாழை, எள் பயிர் பண்றோம். அந்த நிலத்துல பெட்டியை வெச்சிடுவேன். பல விவசாயிகள் எங்க வயலுக்கு வந்து தேனீ வளர்ப்பு பற்றிக் கேட்டுட்டுப் போறாங்க. நானும் பல இடங்களுக்குப் போய் பயிற்சி கொடுக்குறேன். தேனீ வளர்க்கும் பெட்டிகளையும் தயார் செஞ்சு விற்பனை செய்றேன்.

தேனீ வயல்
தேனீ வயல்
எஸ்.தேவராஜன்
தேனீ வளர்த்தால் வருமானம் ‘கொட்டும்’!

முதல் வருடம் 40 பெட்டிகள்ல தேனீ வளர்க்கும் போதே ஒரு லட்சம் வரைக்கும் லாபம் கிடைக்கும். அடுத்தடுத்த வருடங்கள்ல தேனீ பெருகி, பெட்டிகளோட எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கும். தேனிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து விற்பனை செஞ்சா வருமானம் இன்னமும் அதிகமாகும்'' என்றார் மகிழ்ச்சியுடன்.