2030-ம் ஆண்டுக்குள், தொண்டை மண்டலத்தை முழுமையான இயற்கை வேளாண் மண்டலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு (THOFA). இதற்காக, தொண்டை மண்டலத்தினுள் வரும் சுமார் 13 மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் 6, 7-ம் தேதிகளில் `வேளாண் திருவிழா'வை நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது இந்த கூட்டமைப்பு. அச்சமயத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததால், தற்காலிகமாக அந்த `வேளாண் திருவிழா' தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அந்த இயற்கை வேளாண் திருவிழா தொடங்கி நடைபெறுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதன் முறையாக `தொண்டை மண்டல இயற்கை வேளாண் திருவிழா' அறிவிக்கப்பட்ட போது நம்மிடையே பேசியிருந்த ஒருங்கிணைப்பாளர் C.K.அசோக்குமார், ``இன்றைய நாள்களில் நோய் அதிகமுள்ள ஒரு சமூகத்தைதான் நாம் பார்க்கிறோம். காரணம் என்னவென்றால் இயற்கையை விட்டு நாம் விலகி வந்துவிட்டோம். இயற்கை விவசாயத்துக்கு நாம் திரும்புவதன் மூலம்தான் நோயற்ற சமூகத்தை மீட்டெடுக்க முடியும். அதன்படிதான், `தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு' (THOFA) உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 13 மாவட்டத்திலுள்ள இயற்கை விவசாயிகள் இந்தத் தொண்டை மண்டலத்துக்குள் வருவார்கள். திருவாண்ணாமலையை மையமாகக் கொண்டு THOFA செயல்படும். `நஞ்சில்லா உணவு செய்வோம்! நோயில்லா உலகை படைப்போம்!' என்பதுதான் THOFA-வின் முக்கிய நோக்கம்.
அதே சமையம், THOFA மூலமாக விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை அவர்களே மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுப்போம். 2030-ம் ஆண்டுக்குள் இந்தத் தொண்டை மண்டலத்தை முற்றிலும் இயற்கை விவசாயம் நிறைந்த பகுதியாக மாற்றுவதற்கான முயற்சியை முழு நோக்கமாக வைத்து செயல்படுவோம்" என்று கூறியிருந்தார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் விதமாக நடைபெறவுள்ள இந்த `வேளாண் திருவிழா'... திருவண்ணாமலையை மையப்படுத்தி இன்று முதல் மூன்று நாள்கள் (மார்ச் 23, 24, 25) தொடர்ச்சியாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆண்டாள் சிங்காரவேல் தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த வேளாண் திருவிழாவில், விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏற்றதான வழிகாட்டுதல்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை எளிதாக விற்பனை செய்வதற்கான வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், பாரம்பர்ய உணவுப்பொருள்கள் மற்றும் விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதோடு, பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.