Published:Updated:

`5,000 ஏக்கர் வாழை சாய்ஞ்சுடுச்சு; என்ன பண்றதுன்னே தெரியல?!’ -கலங்கும் தூத்துக்குடி விவசாயிகள்

சூறைக்காற்றில் சரிந்த வாழைகள்
சூறைக்காற்றில் சரிந்த வாழைகள்

தூத்துக்குடியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டதில் ஸ்ரீவைகுண்டம், தாமிரபரணி மேலக்கால், கீழக்கால், வடகால் மற்றும் தென்கால் பாசனத்தின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், குலையன்கரிசல், சாயர்புரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், சிவகளை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், பூவன் ரக வாழைகள் அறுவடை நிலையில் உள்ளன.

சூறைக்காற்றில் சரிந்த வாழைகள்
சூறைக்காற்றில் சரிந்த வாழைகள்

ஊரடங்கு தொடங்கிய சில நாள்கள் வரை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதாலும், வாழைக் குலைகளுக்கு உள்ளூரில் தேவை இல்லாததாலும் குலைகளை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டனர். இதனால், பழங்கள் பழுத்தும், அழுகியும் காணப்பட்டன. கடந்த சில நாள்களாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பிறகு, சாதாரணமாக ஏற்றுமதி செய்யும் எண்ணிக்கையை விட 50 சதவிகிதம் குறைவாக வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

சில பகுதிகளில் வாழைப் பிஞ்சு பிடித்தும், முதிர்ந்தும் வருகிறது. இந்நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் முறிந்து சாய்ந்தன. இதனால் வாழை விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம்.

''தூத்துக்குடி வடகால் பாசனத்துக்கு உட்பட்ட குலையன்கரிசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் மட்டுமே நடக்கிறது. பூவன், நாடான், ஏத்தன், பச்சை, கற்பூரவல்லி உள்ளிட்ட ரக வாழைகளை சாகுபடி செய்துட்டு வர்றோம்.

சாய்ந்த வாழைகளை கவலையுடன் பார்த்த விவசாயி
சாய்ந்த வாழைகளை கவலையுடன் பார்த்த விவசாயி

இதில், ஊரடங்கு தொடங்கிய நாள்களில் பூவன் ரக வாழைக்கு உள்ளூர்லயே அதிக தேவை இல்லை. வெளியூர்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்ய மினிவேன் போன்ற வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்பதாலும் குலைகளை வெட்டாமல் விட்டுட்டோம். கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவுல விளைஞ்ச பூவன் வாழைக் குலைகள் மரத்திலேயே அழுகி நாசமாயின.

பூவன் ரக வாழைக் குலைகளுக்குப் பொதுவாக அதிக விலை இல்லை என்பதால், நாங்களும் மனசைத் தேத்திக்கிட்டோம். அதே நேரத்துல ஏத்தன் ரக வாழைகள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிக்கிட்டிருக்கு. இப்போ, நாடான், கற்பூரவல்லி உள்ளிட்ட உயர் ரக வாழைகள் பூத்த நிலையிலயும், பிஞ்சு பிடிச்ச நிலையிலயும், அறுவடைக்கு வந்த நிலையிலயும் இருந்த சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் திடீரென வீசிய சூறைக்காற்றில் முறிந்து சரிந்தன.

சூறைக் காற்றில் சரிந்த வாழைகள்
சூறைக் காற்றில் சரிந்த வாழைகள்

வாழைமரங்கள் சாயாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வாழைக்கும் இரண்டு கம்புகளைக் கொண்டு முட்டு கொடுத்து கட்டிவைத்தும் சூறைக்காற்றில் முறிந்துவிட்டது. இதனால், சுமார் 60 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கு. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மிச்சம்மீதி இருக்குற வாழைகளையாவது விற்று காசுபார்த்து வாங்கிய கடன்களை அடைச்சுடலாம், பிள்ளைகளுக்குக் கல்யாணத்தையும் முடிச்சிடலான்னு முடிவு செஞ்சு வச்சிருந்தோம். இப்போ இந்த நஷ்டத்தை எப்படி ஈடு கட்டுறதுனு தெரியலை.

நெல், கரும்பு விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை வாழை விவசாயிகளுக்கு அளிப்பதில்லை. கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான வாழைப் பயிர் காப்பீட்டுக்கான தொகையை 'தி நியூ இண்டியா’ காப்பீடு நிறுவனத்தில் செலுத்தியுள்ளோம். ஆனால், வாழைப்பயிருக்கு மட்டும் அந்தத்தொகை வழங்கப்படாமல் மற்ற பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்றில் சரிந்த  வாழைகள்
சூறைக்காற்றில் சரிந்த வாழைகள்

இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பலனுமில்லை. தற்போதைய சூழலில் அந்தப் பணம் கிடைத்தால் எங்களுக்கு உதவியாய் இருக்கும். நெல், கரும்புகளை அரசே கொள்முதல் செய்வதைப் போல வாழைக்குலைகளையும் விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு