Published:Updated:

தொடர் மழையால் மூழ்கிய 2,000 ஏக்கர் பயிர்கள்... கண்ணீரில் தூத்துக்குடி விவசாயிகள்!

மழை நீரில் மூழ்கிய தீவனச் சோளம்
மழை நீரில் மூழ்கிய தீவனச் சோளம்

தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்த மழையால், சுமார் 2,000 ஏக்கர் மானாவாரி விளைநிலங்களில் தண்ணீர் தேங்கிக் கடல் போல் காட்சியளிக்கின்றன.

`புரெவி புயல்’ பாதிப்பால் தமிழகத்தின் கடலோட மாவட்டங்களில் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல பகுதிகளில் பரவலாகத் தொடர் மழை பெய்து வருகிறது. சுமார் 1 லட்சம் ஏக்கரில் மக்காசோளம், மல்லி, உளுந்து, பாசி, கம்பு, சின்ன வெங்காயம், பருத்தி, குதிரைவாலி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு முதலில் தொடங்கிய மழையை நம்பி விவசாயத்தைத் தொடங்கினர் விவசாயிகள்.

விளைநிலத்துக்குள் புகுந்த  மழைநீர்
விளைநிலத்துக்குள் புகுந்த மழைநீர்

ஆனால், தொடர்ந்து மழை பெய்யாததால் பயிர்கள் அனைத்தும் கருகிப்போயின. இதற்கிடையில் கடந்த மாதம் பெய்த மழையால் பயிர்களும் நன்கு வளர்ந்தன. இந்நிலையில், `புரெவி’ புயலால் கடந்த 4 நாள்களாகப் பெய்த தொடர் மழையால், பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மழைநீர் வெளியேறிச் செல்கிறது. அத்துடன் ஓடைகளிலும் தண்ணீர் அதிகளவு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து கடல் போலத் தேங்கி நிற்கிறது. பயிர்கள் மழைநீரில் முழுவதும் மூழ்கியதால் மிகுந்த வேதனையுடன் உள்ளனர் விவசாயிகள்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த புரட்டாசி மாதம் பெய்த மழையால் முதல் கட்டமாக மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கம்பு, சின்ன வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, குதிரைவாலி, நெல், கொண்டைக்கடலை ஆகியவற்றைப் பயிரிட்டோம்.

கண்ணீரில் பெண் விவசாயிகள்
கண்ணீரில் பெண் விவசாயிகள்

ஓரளவு ஈரப்பதத்தில் விதைகள் சீராக முளைத்தன. விதைப்பு செய்த நாள் முதல் ஐப்பசி 22-ம் தேதி வரை மழையே இல்லை. இதனால் பயிர்கள் வாடிப்போயின. அதனால், பயிர்கள் சரிவர வளராததால் இரண்டு முறை அழித்து விதைத்தனர். ஒருமுறை உழவு, விதை, விதைப்புக்கு என ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வரை செலவானது. ஐப்பசி மாத கடைசி வாரத்தில் பெய்த மழையால் பயிர்கள் நன்கு வளர்ந்தன. இரண்டு முறை உரமும் தூவினோம். தற்போது பயிர்கள் நன்கு கதிர் பிடித்து வருகின்றன. பாசி, உளுந்து பூப்பூத்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்த மழையால் சுமார் 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. பனிப் பதத்தில் வளரும் கொத்தமல்லிச் செடிகள் முற்றிலுமாக அழுகிவிட்டன. இவை முழுவதும் கரிசல் மண் பகுதி என்பதால், தண்ணீரை அதிகளவில் உறிஞ்சாது. தற்போது தேங்கியுள்ள மழைநீர் வடிய ஒரு மாதமாகும். அடுத்த சில நாள்களில் எல்லாப் பயிர்களும் முற்றிலுமாக அழுகிவிடும். இந்தாண்டு உழக்கு அளவு விளைச்சல்கூட வீடு வந்து சேராது.

மழைநீர் தேங்கிய பாசிப்பயறு செடிகள்
மழைநீர் தேங்கிய பாசிப்பயறு செடிகள்

மழையால் பாதித்த பயிர்களைக் கணக்கெடுப்பு செய்து, புயல் வெள்ள நிவாரண நிதியில் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும். தற்போது மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் போதிய வடிகால்களோ, தாழ்வான பகுதிகளில் பாலங்களோ இல்லை. வடிகால்கள், தரைப்பாலங்கள் அமைத்திட வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மழையிலும் மீண்டும் மீண்டும் நாங்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு