Published:Updated:

தூத்துக்குடி: மருதூர் அணையை விழுங்கும் அமலைச் செடிகள்... ஆபத்தில் 20,000 ஏக்கர் விவசாய நிலம்!

அமலைகள் ஆக்கிரமித்துள்ள மருதூர் அணை
அமலைகள் ஆக்கிரமித்துள்ள மருதூர் அணை

தூத்துக்குடியில் மருதூர் அணையை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் தண்ணீர் மற்றும் பாசனத் தேவைகளை முழுமையாகவும் விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர்த் தேவையில் 30 சதவிகிதத்தையும் பூர்த்தி செய்கிறது தாமிரபரணி ஆறு. நெல்லை, பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகள் வழியாகக் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

மருதூர் அணை
மருதூர் அணை

இந்த இரண்டு அணைகளில் உள்ள மேலக்கால், கீழக்கால், வடகால் மற்றும் தென்கால் ஆகிய 4 வாய்க்கால்கள், 53 குளங்கள் மூலம் இம்மாவட்டத்தில் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில், மருதூர் அணை 6 அடி ஆழமும் 4,000 அடி நீளமும் கொண்டது. மருதூர் அணை மூலம் மட்டும் சுமார் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அத்துடன், இந்த அணையிலிருந்து 4வது பைப்லைன் திட்டம் மூலமாகத் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டில் தேங்கும் மணலை அப்புறப்படுத்த 12 மணல் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால், அமலைச் செடிகளை அகற்றமுடியவில்லை. அமலைச்செடிகளின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் ஓட்டமும் குறைந்துள்ளது.

அணைப்பகுதியில் கிடக்கும் உடைந்த கல் தூண்கள்
அணைப்பகுதியில் கிடக்கும் உடைந்த கல் தூண்கள்

எனவே, அமலைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம், ``தாமிரபரணியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மிக நீளமானது இதுதான். இது, சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த அணையின் மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு பாசனங்கள் மூலம் கார், பிசானம் முன்கார் ஆகிய மூன்று போகங்களில் நெல் விளைகிறது.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் தேங்கிய அமலைச்செடிகளை அகற்றிட அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள், போராட்டங்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது. அதேபோல மருதூர் அணையில் தேங்கி நிற்கும் அமலைகளை அகற்ற வேண்டும். இவை ஓடும் தண்ணீரின் வேகத்தைக் குறைப்பதுடன், நீரின் தரத்தையும் குறைத்துவிடுகின்றன. தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்கும் தன்மை கொண்டது இந்த அமலைச்செடிகள். அத்துடன், நீர்க்கருவை, வேலிக்காத்தான் மரங்களுடன், பரிகாரம் என்ற பெயரில் குளித்துவிட்டு, பக்தர்கள் அப்படியே விட்டுச் செல்லும் அழுக்குத் துணிகளும் ஆங்காங்கே ஆக்கிரமித்துக் கிடக்கின்றன.

அமலைகள் அகற்றப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை
அமலைகள் அகற்றப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை

அத்துடன் அணையின் ஓரங்களில் இடிந்த மண்டபங்களின் கல் தூண்கள் போடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்” அமலைகளை நிரந்தரமாகத் தடுக்கவும், தூர்வாரப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆற்றுமணல் சேராமல் தடுப்பதற்காகக் குறிப்பிட்ட சில தூரங்களுக்கு இடையே கம்பி வேலிகளுடனான நவீனத் தடுப்பணை அமைப்பதுதான் தீர்வாகும். இதனால், அமலைகளை எளிதாக உடனுக்குடன் அப்புறப்படுத்திவிடலாம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு