Published:Updated:

மழைபெய்ய வேண்டி மழைக் கஞ்சி... விநோத வழிபாடு செய்த தூத்துக்குடி விவசாயிகள்!

மழைக் கஞ்சி வழிபாடு
மழைக் கஞ்சி வழிபாடு

தூத்துக்குடியில் மழைபெய்ய வேண்டி விவசாயிகள் மானாவாரி விளைநிலங்களில் மழைக் கஞ்சி வழிபாடு நடத்தினர். இதனால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் ஆகிய தாலுகாகளில் சுமார் 1,70,000 ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையை நம்பியே இப்பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. ராபி பருவத்தை முன்னிட்டு உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

மழைக் கஞ்சி வழிபாடு
மழைக் கஞ்சி வழிபாடு

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மழை பெய்த்ததால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிடும் எனக் கருதி முதல் கட்டமாக மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு போன்றவற்றை விதைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்யாததால் வளர்ச்சி இல்லை. இதனால், கவலை அடைந்த விவசாயிகள் மழைக் கஞ்சி வழிபாடு நடத்தினர்.

அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டத்தில் இறவைப் பாசனத்தைவிட மானாவாரி விவசாயம்தான் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சித்திரை மாதமே கோடை உழவு செய்து நிலத்தை தயார்படுத்தி மழைக்காகக் காத்திருந்தோம். ஆவணி தொடக்கத்திலேயே மூணு மழை பெய்ஞ்சுது. இதனால், இந்த ஆண்டு நல்ல மழை பொழியும் என நினைத்து சிறுதானியங்கள், மிளகாய் வத்தல், பருத்தி விதைகளை விதைத்துவிட்டோம். நிலத்தில் ஓரளவு இருந்த ஈரப்பதத்தில் சில பகுதிகளில் முளைத்தும் முளைக்காமலும் காணப்படுகின்றன.

மழைக் கஞ்சி
மழைக் கஞ்சி

முளைத்த விதைகளும் இரண்டு இலைகளுடன் காணப்படுகிறது. முளைக்காத விதைகளும் கெட்டுவிட்டன. பருவமழை தாமதமானால் கிராமங்களில் மழைக் கஞ்சி வழிபாடு நடத்துவார்கள். கிராமத்திலுள்ள பெரிய விவசாயிகள் சிலர் இரண்டு நாள்கள் தொடர்ந்து கிராமங்களிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று பழைய சாதத்தை பிச்சை எடுத்துவந்து தங்கள் வீடுகளில் மோர் ஊற்றி பிசைந்து ஊறுகாய், தேங்காய்த் துவையல், வற்றலுடன் சாப்பிடுவார்கள்.

வீடுவீடாகச் சென்று பழைய கஞ்சி கேட்கும்போது, ``மழையுமில்ல தண்ணியுமில்ல... மழைக் கஞ்சி ஊத்துங்கய்யா’ எனச் சொல்லிக் கேட்பார்கள். மூன்றாம் நாள் ஏதாவது ஒரு விவசாயியின் நிலத்தில், வடக்குத் திசையில் மஞ்சளில் வடக்குத்தி அம்மன் உருவம் பிடித்து கம்பங்கஞ்சி காய்ச்சி வழிபாடு நடத்தி ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிப்போம். வீடுகளுக்குச் செல்லும்போது பிய்ந்த செருப்பால் தலையில் ஆளுக்கு ஒரு அடி அவர்களாகவே அடித்துக் கொள்வார்கள்.

முளைக்காத பயிர்கள்
முளைக்காத பயிர்கள்

இப்படிச் செய்தால் அடுத்த சில மணி நேரத்தில் மழைபெய்யும். அப்படியும் பெய்யவில்லை என்றால் வைக்கோலில் கொடும்பாவி உருவம் செய்து கிராமத் தெருக்களில் கயிறு கட்டி இழுத்து வந்து சுடுகாட்டில் எரிப்பார்கள். அத்துடன், ஊர் எல்லையில் இரவில் செம்மறி ஆட்டுக்கிடாயை வெட்டி ஊர் மக்கள் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். இவை அனைத்துமே கிராமங்களில் மழை பெய்ய வேண்டி செய்து வந்த நம்பிக்கை வழிபாட்டுச் சடங்குகள். இதில், மழைக் கஞ்சி வழிபாட்டை எங்க கிராமத்துல நடத்தியிருக்கோம். மழைபெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு