Published:Updated:

தூத்துக்குடி: மழையால் மூழ்கிய பயிர்கள்... மரத்தில் தேங்காய் கட்டி மழையை வழியனுப்பிய விவசாயிகள்!

தேங்காய் வழிபாடு
தேங்காய் வழிபாடு

பருவம் தப்பிப் பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது, கிராமங்களில் வடகிழக்கு எல்லையில் முழுத்தேங்காயை மரத்தின் கிளையில் கட்டி, வழிபாடு செய்து வேண்டிக்கொண்டு மழையை வழியனுப்புவார்களாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 80,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக விவசாயம் நடந்து வருகிறது. நடப்பாண்டு ராபி பருவத்தில் சின்ன வெங்காயம், உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், மிளகாய், கொத்தமல்லி, வெள்ளைச்சோளம், சூரியகாந்தி, பருத்தி, குதிரைவாலி, கேழ்வரகு, எள் ஆகிய பல்வேறு பயிர்களைப் பயிரிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர்மழையால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தேங்காய் வழிபாடு
தேங்காய் வழிபாடு

இதனால், பயிர்கள் மூழ்கியும், அழுகியும் விட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், பருவம் தப்பிப் பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது, கிராமங்களில் வடகிழக்கு எல்லையில் முழுத்தேங்காயை மரத்தின் கிளையில் கட்டி, வழிபாடு செய்து வேண்டிக்கொண்டு மழையை வழியனுப்புவார்களாம். தாப்பாத்தி அருகிலுள்ள அயவடமலாபுரம் கிராமத்தில் விவசாயிகள் தேங்காய் கட்டி மழையை இப்படி `வழியனுப்பி வைத்துள்ளனர்.'

இதுகுறித்து அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``இந்த வருஷம் நல்ல மழை பெய்ஞ்சுது. எல்லா பயிர்களுமே நல்ல வளர்ச்சியா இருந்துச்சு. உளுந்து, பாசிப் பயிர்கள் காய்த்து நெற்றுகளாக முதிர்ந்தன. கேழ்வரகு, குதிரை வாலி, வெள்ளைச்சோளம் ஆகியவை நன்கு கதிர் பிடித்து அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையிலதான், கடந்த சில நாள்களா தொடர் மழை பெய்ஞ்சுட்டு இருக்கு. இதனால, மழைநீர் விளைநிலங்களில் தேங்கிடுச்சு.

தேங்காய் வழிபாடு
தேங்காய் வழிபாடு

முதிர்ச்சியடைந்த பயிர்களின் நெற்றுகளில் அதிக ஈரப்பதம் ஏறி பருப்புகள் கெட்டுவிட்டன. பொன்னிறத்தில் காணப்பட வேண்டிய வெள்ளைச்சோளக் கதிர்கள் கருப்பாகிட்டு. சின்ன வெங்காயமும், கொத்தமல்லியும் அழுகிப்போச்சு. இந்த மாதிரி பருவம் தப்பிப் பெய்யுற மழை, விடாம பெய்யுற மழையை நிறுத்த முன்னோடி விவசாயிங்கள்லாம், ஊரோட வடகிழக்கு எல்லையில மரத்தின் கிளையில தேங்காய் கட்டித் தொங்க விடுவங்க. இப்படிச் செஞ்சா மழை பெய்யாதுன்னு ஒரு நம்பிக்கை.

எங்க ஊர்ல உள்ள வயசான விவசாயிங்க, ஊரோட வடகிழக்கு எல்லையான பட்டூரணியில உள்ள ஒரு புளிய மரத்தடியில நின்னு, முழுத்தேங்காய்க்கு மஞ்சள் தேய்ச்சு, மஞ்சள் கயிறால தேங்காயைக் கட்டி குங்குமம் வச்சு, கற்பூர ஆரத்தி எடுத்து, `வருண பகவானே.. இந்த வருஷம் நல்ல மழையைப் பொழிய வச்சுட்ட... எங்கப் பாசனத்துக்குத் தேவையான தண்ணி கிடைச்சுப் போச்சு. எங்க ஊருக்கு மழை போதும்யா”ன்னு சொல்லி வருணபகவானிடம் வேண்டினா, கருணை காட்டுவார்னு நம்பிக்கை. இப்படி வேண்டிக்கிட்டு புளியமரத்தின் கிளையில கட்டித் தொங்க விட்டுட்டோம்.

மழை நீரில் மூழ்கிய பயிர்கள்
மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

மழையை வழியனுப்புற பார்ம்பர்ய வழிபாட்டு முறை. தொடர் மழையால மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. விளாத்திகுளம் பக்கத்துல உள்ள மேலமாந்தை கிராமத்துல 580 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கண்மாய் இருக்கு. கடந்த 1962-ம் வருஷம், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்த கக்கன், இந்த கண்மாயைத் திறந்து வைத்தார். இதன் நீர் ஆதாரத்தால்தான் 480 ஏக்கர் இறவைத் தோட்ட நிலங்களும், சுமார் 2,000 ஏக்கர் மானாவாரி நிலங்களும் பாசன வசதி பெறுது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால 85 லட்சம் ரூபாயில் இந்தக் கண்மாய், நீரைப் பயன்படுத்துவோர் சங்கம் மூலமாகக் குடிமராமத்து செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டதோட கண்மாயின் அருகிலுள்ள தடுப்பணை ஷட்டரும் புதுப்பிக்கப்பட்டது. தொடர் மழையால, மேல்மாந்தைக் கண்மாயும் முழுசா நிரம்பிடுச்சு. வழக்கமா கண்மாய் நிரம்புச்சுன்னா ஷட்டர்களை திறந்துவிடுறது வழக்கம். அப்படி திறந்துவிடும்போது மற்ற சிறுசிறு கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லும். ஆனா, மரத்தினாலான ஷட்டர்களுக்குப் பதிலா, இரும்பினாலான உயரமான நிரந்தர ஷட்டர் அமைக்கப்பட்டிருக்கு.

மழை நீரில் மூழ்கிய பயிர்கள்
மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

அவற்றை எடுத்து விட முடியாததுனால நிரம்பி வழிஞ்ச தண்ணீர், விளைநிலங்களுக்குள்ள புகுந்து கடல் போல காட்சியளிக்குது. இதைப் போல, தற்போது மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகள்ல போதிய வடிகால்களோ, தாழ்வான பகுதிகள்ல பாலமோ இல்லை. வடிகால்கள், தரைப்பாலங்கள் அமைக்க வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல. இதனால, ஒவ்வொரு மழையின் போதும் நாங்க பாதிகப்பட்டுட்டு வர்றோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு