Election bannerElection banner
Published:Updated:

தூத்துக்குடி: சித்திரை மாத `பொன்னேர் உழுதல்'... வழிபட்டு பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்!

பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்
பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்

ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் நல்ல அறுவடை கிடைக்க வேண்டுமென்று தமிழ் வருடத்தின் தொடக்கமான சித்திரை மாத தொடக்கத்தில் உழவு ஓட்டி சூரியபகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். தூத்துக்குடியில் பொன்னேர் பூட்டி உழவு செய்து விதைப்பைத் தொடங்கினர் மானாவாரி விவசாயிகள்.

தமிழகத்தில் இரு போகம் நஞ்சை, ஒரு போகம் புஞ்சை அல்லது ஒரு போகம் நஞ்சை இருபோகம் புஞ்சை என முப்போகம் விளைசல் உண்டு. அறுவடை முடிந்து பயிரின்றி வெறுமையாக, தரிசாகக் கிடக்கும் நிலத்துக்கு கரந்தை என்று பெயர். நிலத்தை தரிசு நிலம் என்பதை அமங்கலம் என்பார்கள், தரிசு என்று சொல்லாமல், 'கரந்தை' என்றுதான் சொல்வார்கள். அதனாலதான், பழைய கால விளைநில விற்பனை பத்திரத்தை எடுத்துப்பார்த்தால் ``இந்த இடத்தைக் கரந்தையுடன் கிரயம் செய்துகொடுக்கிறேன்’’ என்ற வரியைப் பார்க்கலாம்.

பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்
பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்

அறுவடை முடிந்துள்ள கரந்தை நிலம் புழுதிபடிந்த நிலமாக இருக்கும். சித்திரை மாதம் முதல் மழை பெய்தவுடன், உழவு செய்வார்கள். இதை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதிஉழவு’, `கோடை உழவு’ என்றும் சொல்வார்கள்.

தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரையில் முதல் நாளன்றோ, வளர்பிறையிலோ மங்கலம் கருதி கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூகட்டி, வணங்கிட்டு விட்டு மாடுகளைத் தயார் செய்து ஊர்ப்பொது வயலில், நிலத்தில் ஊரிலுள்ள விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் பொன்னேர் உழுதல் என்று பெயர். விவசாயத்தில் பெருமை, மிகுதி, மங்கலம் கருதி சொல்லப்பட்ட சொல்தான் `பொன்னேர்.’

ஊர்ப்பொது நிலத்தில் பொன்னேர் பூட்டி உழுது தானியங்களை விதைத்துவிட்டு பின் அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுதுவிட்டு ஏதாவது தானியத்தை சாஸ்திரத்துக்கு விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானியங்களை ஊர் கன்றுகாலிகள் சாப்பிடும்.

வயலை, நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தகுதிபடுத்துதலில் ஊர் விவசாயிகள் ஒன்றுகூடி செய்யும் சித்திரை மாத தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரம் அருகிலுள்ள புதுப்பட்டி கிராமத்தில் இன்று பொன்னேர் உழவைத் தொடங்கினார்கள் விவசாயிகள். 10-க்கும் மேற்பட்ட ஏர்கலப்பை, டிராக்டரால் உழவு செய்தனர். பொன்னேர் உழவு குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். அப்போது பேசிய அவர், ``தமிழ் வருஷத்தோட தலை மாசம்தான் சித்திரை. ``சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்", ``சித்திரையில மழை பெஞ்சா பொன் ஏர் கட்டலாம்‘’னு கிராமத்தில் சொலவடையே இருக்கு. சித்திரை மாச பிறப்பு அன்னைக்கும் அல்லது அந்த மாசத்து முக்கிய நாள்களிலயும் வளர்பிறையில முதல் உழவை உழுவார்கள். ஆனா, எங்க கிராமத்துல எப்பவுமே சித்திரை மாசம் முதல் நாள்லதான் பொன் ஏர் உழுவோம்.

சித்திரை மாத உழவு
சித்திரை மாத உழவு

காலையிலேயே உழவு மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, வீட்டில் சாணி மொழுகி, விளக்கேற்றி மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு, மாடுகளுக்கும் ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி, தோள்ல ஏரைத்தூக்கிட்டு கையில மாட்டையும் பிடிச்சுட்டு பெருமாள் கோயிலுக்கு முன்னால கொண்டு வந்து மாடுகளை நிப்பாட்டிட்டு, ஏர்கலப்பையை கோயில் வாசல்ல ஒண்ணுபோல வரிசையா வச்சு சாமி கும்பிட்டோம்.

ஒவ்வொரு வீட்டுலயும் அவரவர் வீடுகளில் கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுன்னு என்ன விதை இருக்கோ அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு கோயிலில் பெட்டியை வைத்து, சாமி கும்பிட்டு எல்லா விவசாயிகளும் ஏர்கலப்பைக்கும் மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடன் காட்டினதும், ஒவ்வொரு ஜோடி மாடுகளும் ஒண்ணு பின்னால ஒண்ணா போயி, கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்துல வரிசையா ஏர்பூட்டி கிழக்கு மேற்கா மூணு தடவை உழுதுட்டு, நிலத்தை குறை போடாம முழுவதுமா உழுது முடிச்சுடுவோம்.

சித்திரை மாத உழவு
சித்திரை மாத உழவு

மாடுகள் நிலத்தை உழுது வர, ஊர் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவி விடுவோம். பிறகு, விவசாயிகள் அவரவர்கள் சொந்த நிலத்துலயும் உழுதோம். ``சித்திரை உழவுக்குப் பின் உடன் பெய்யும் மழை" என்பார்கள். உழவு செய்த ஒரு மணி நேரத்தில் வானம் கருப்பாகி தூறல் விழுந்து சிறுமழையாகப் பெய்தது. எங்களின் உழவு நம்பிக்கை வீண்போகவில்லை. இந்தாண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு