Published:Updated:

தடையை மீறி வெட்டப்பட்ட 60 பனைமரங்கள்; 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார்!

தூத்துக்குடியில் அரசின் உத்தரவை மீறியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமலும் 60 மரங்களை வெட்டிய 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பனைமரம், தமிழகத்தின் மாநில மரம் என அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகிறது. உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால்தான் பனையை `கற்பகத்தரு’ என்கிறார்கள். 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.10 கோடி பனை மரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதிகமாக வெட்டப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கஜா புயலின் தாக்கத்தின்போது டெல்டா மாவட்டங்களில் அத்தனை மரங்களும் வீழ்ந்து கிடக்க, பனைமரங்கள் மட்டுமே கம்பீரமாக நின்றன.

வெட்டிச் சாய்க்கப்பட்ட பனை மரங்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்ட பனை மரங்கள்
சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா?

பனைமரத்தின் சிறப்பு அறியப்பட்டதாலும் பனையின் முக்கியத்தும் குறித்த பரவலான விழிப்புணர்வினாலும் இளம் தலைமுறையினரே கடந்த சில ஆண்டுகளாகக் கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், சாலையோரங்களில் பனை விதை ஊன்றி வைத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், ``தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் வளத்தோடும் ஒன்றுபட்டது பனைமரம். நீர்நிலைகளின் காவலன், மழை ஈர்ப்பு மையம் என அழைக்கப்படும் பனைமரங்களை விறகுக்காகவும், செங்கல் சூளைகளுக்காகவும் வெட்டப்படுவது தடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், பனைமரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெறுவது கட்டாயம்” என அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பு பனைத் தொழிலாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது அனைவரின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, பல மாவட்டங்களில் பனைவிதைகளின் சேகரிப்பும் நடுதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

அத்துடன் பனை சார்ந்த தொழிலை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, பழங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சடையன்கிணற்றில் இருந்து கல்விளை செல்லும் சாலையில் உள்ள பனை மரங்கள் கடந்த 5 நாள்களாகத் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன.

ஜெயக்குமார் - எஸ்.பி
ஜெயக்குமார் - எஸ்.பி

இதுகுறித்து, தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் கென்னடி வாட்ஸ்அப் மூலம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸார் அங்கு சென்றதும் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் பனைமரங்கள் வெட்டப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான பரமசிவன், திருமணி, சித்திரைபாண்டி ஆகியோர் மீதும் பனை மரத்தை வெட்டி விற்பனை செய்வதற்கு புரோக்கராகச் செயல்பட்ட துரைசாமி என்பவர் மீதும், பனை மரத்தைத் துண்டு துண்டாக வெட்டிய ஜெயசீலன், இசக்கிமுத்து ஆகியோர் மீதும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ``தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி பனைமரங்களை வெட்டினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரும் எச்சரித்துள்ளார்.

கென்னடி
கென்னடி

இதுகுறித்து தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் கென்னடியிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம் தாலுகாக்களில்தான் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பனைமரங்கள் உள்ளன. பனைத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பனைத்தொழிலை நடத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனால் பனைமரங்களை விறகுக்காகவும், செங்கல்சூளைகளுக்காகவும் பனைமரங்களை வெட்டி விற்பனை செய்து வந்தது தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில்தான் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் `பனைமரங்களை வெட்டக் கூடாது’ என அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, பனைமரங்கள் வெட்டுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாகப் பனைமரங்களை வெட்டுவது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. விறகுக்காகவும், செங்கள் சூளையில் செங்கலைச் சுடுவதற்காகவும் தேவைப்படும் விறகின் விலை, மற்ற விறகின் விலையைவிட, மிகக்குறைவாக உள்ளதால்தான் பனையை வெட்டுகிறார்கள். ஒரு மரத்துக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கிடைப்பதால் நிலத்தின் உரிமையாளர்களும் பணத்துக்காக ஆசைப்பட்டு மரத்தை விலை பேசுகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து செங்கல்சூளைகளின் உரிமையாளர்கள் பனைமரம் வெட்டுவதற்கு இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு வேலையாட்களையும் அழைத்துக்கொண்டு லாரிகளில் வந்துவிடுகிறார்கள்.

வெட்டப்பட்ட பனைமரம்
வெட்டப்பட்ட பனைமரம்
`ஒரே இடத்தில் 10,000 பனை மரங்கள்!' - விவசாயியின் முயற்சியால் உருவான பனைமர குறுங்காடு

பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் பனைகளை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். சடையன்கிணற்றுப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பனைகளை கலெக்டரின் அனுமதி பெறாமல் வெட்டியுள்ளனர். பட்டுப்போன மரம் மட்டுமல்லாமல், பணத்துக்காக நல்ல பலன் தரும் நிலையில் உள்ள மரங்களையும் வெட்டி விடுகிறார்கள். இந்தத் தகவலை கலெக்டர், எஸ்.பி, தாசில்தாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இதையடுத்து 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது பனைமரங்கள் வெட்டப்படுகிறதா எனக் கண்காணித்து வர வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு