Published:Updated:

`விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த கற்றல் அறிவே போதும்!' - தூத்துக்குடி துணை ஆட்சியர்

கருத்தரங்கில் புத்தக வெளியீடு
கருத்தரங்கில் புத்தக வெளியீடு

``விவசாயப் பணிகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதையும், வளங்களை வீணடிக்காமல் சரியான முறையில் பயன்படுத்துவதையும் உறுதிசெய்யும் தொழில்முறையை சீர்மிகு விவசாயம் அதாவது `ஸ்மார்ட் ஃபார்மிங்’ என்கிறோம்."

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி நபார்டு வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மற்றும் பசுமை விகடன் இணைந்து `வேளாண்மையில் உதாரணங்களுடன் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு' என்ற தலைப்பில் கடந்த 28-ம் தேதி இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது. விழாவில் பேசிய நபார்டு வங்கியின் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், ``விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கான கடன் வசதிகள், வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஊக்குவித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் வேலை வாய்ப்பை அதிகரித்தல் போன்ற பல பணிகளை நபார்டு வங்கி முனைப்புடன் செய்து வருகிறது. தற்போதைய விவசாயத்தில் காணப்படும் சவால்களை விவசாயிகள் சமாளிக்கும் வகையில் இணையத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றி காண்பதே இக்கருத்தரங்கின் நோக்கம்” என்றார்.

தூத்துக்குடி நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம்
தூத்துக்குடி நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம்

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கருத்தரங்கு புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய, தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ``இணைய தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய இணைய பயன்பாட்டை விவசாயத்திலும் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தைப் செழிக்கச் செய்யலாம். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க முடியும்.

ரசாயன விவசாயத்தின் தாக்கத்தினால் விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பி வருகிறார்கள். அதிக மகசூல் என்பதை விடவும், கிடைக்கின்ற மகசூல் நஞ்சில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு விவசாயிகள் மாறியுள்ளனர். தண்ணீர்ப் பற்றாகுறை, விவசாயக் கூலியாட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சமாளிக்கவே நவீன தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. மேலும் மண் வளப்பாதுகாப்பு, விதைத்தேர்வு, பயிர் வளர்ச்சி, நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், உரமிடுதல், பயிர் கண்காணிப்பு, அறுவடை வரை பல்வேறு தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு உதவுகின்றன.

கருத்தரங்கில் பேசிய துனை ஆட்சியர் ஸ்ருதன்ஜெய்
கருத்தரங்கில் பேசிய துனை ஆட்சியர் ஸ்ருதன்ஜெய்
பெண் விவசாயிகளுக்கு மானியம், புது கால்நடை மருத்துவமனை; வேளாண் மானிய கோரிக்கை அறிவிப்புகளின் ஹைலைட்ஸ்

விவசாயிகள், இந்த வகைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திட கல்வியறிவு தேவையில்லை. கற்றல் அறிவு மட்டுமே போதும். அந்தளவுக்கு தொழில்நுட்பங்களை இயக்குதல் எளிமையாகிவிட்டது. எனவே விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பயிர்களுக்கு எப்போது தண்ணீர் தேவை, எந்தளவு தண்ணீர் தேவை என்பதை ஸ்மார்ட் போன் மூலம் தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் மோட்டாரை ஆன் செய்து தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விவசாயிகள் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை இயற்கை முறையில் செய்ய வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர். பெனோ, `விவசாயத்துறை வளர்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு' என்ற தலைப்பில், ``உலக மற்றும் இந்திய அளவில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. பாரம்பர்யம் மாறாமல் விவசாயத்துறையில் மின்னணுவியல் சார்ந்த உபகரணங்கள் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளன. சென்சார் தொழில்நுட்பம் சாதாரண மக்களும் விவசாயம் செய்ய ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. `ட்ரோன் டெக்னாலஜி’யில் கேமரா மூலம் விவசாய நிலங்களில் பூச்சிமருந்து தெளிக்கவும், பயிர்களின் முதிர்ச்சி சரியான வளர்ச்சி ஆகியவற்றை தெளிவாக மேற்பார்வை செய்ய முடியும்.

கருத்தரங்கு புத்தகம் வெளியிட்ட துனை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்
கருத்தரங்கு புத்தகம் வெளியிட்ட துனை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்

`ஸ்மார்ட் டெக்னாலஜி’ மூலம் நிலத்தின் நீர்ப்பாசனத் தேவைகளை நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களது மொபைல் போன் மூலம் மண்ணின் ஈரம் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு தண்ணீர்ப் பாய்ச்ச முடியும். ஆப்டிகல் டெக்னாலஜி, பயிர்களுக்கு எந்த அளவு உரம் மற்றும் பூச்சிமருந்து தேவை என்பதைத் துல்லியமாக தெரிவித்துவிடும். இமேஜ் பிராசஸிங், பார்கோடு ஸ்கேனர் ஜி.பி.எஸ் உபகரணங்கள், வை-ஃபை டெக்னாலஜி, வயர்லெஸ் சென்சார் நெட்ஒர்க், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜி போன்ற நவீன தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தி விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி முன்னேறலாம்” என்றார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் ICAR வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். குமார ரெத்தினசபாபதி, `வேளாண்மையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, ``மின் வேளாண்மை என்பது கிராமப்புற களத்தில் பயனபடுத்துவதற்கான புதுமையான வழிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, மதிப்பீடு, பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. விவசாய உற்பத்தியில் வானிலை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் உள்ளுர்மயமாக்கல் வரையும், கண்டறிதல் முதல் முன்கணிப்புவரையிலும் அனைத்து இணைப்புகளிலும் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஓரு முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்திய விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஓர் முக்கிய பங்காக மாறிவருகிறது” என்றார்.

கருத்தரங்கு
கருத்தரங்கு

`சீர்மிகு விவசாயத்திற்கான முன்கணிப்பு பகுப்பாய்வு' என்ற தலைப்பில் பேசிய சேலம், பெரியார் பல்கலைக்கழகம், மேலாண்மைத்துறையின் இணை பேராசியர், முனைவர்.சுப்ரமணிய பாரதி, ``விவசாயப் பணிகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதையும், வளங்களை வீணடிக்காமல் சரியான முறையில் பயன்படுத்துவதையும் உறுதிசெய்யும் தொழில்முறையை சீர்மிகு விவசாயம் அதாவது `ஸ்மார்ட் ஃபார்மிங்’ என்கிறோம்.

இம்முறையானது இணைய பொருட்கள், புவி நிலைப்படுத்துதல் முறை, துல்லிய உபகரணங்கள், ரோபாட்டிக்ஸ் இயக்கிகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு திறன் மிகுந்த, வளங்களை சரியாகப் பயன்படுத்துகின்ற தகவலின் அடிப்படையில் முடிவெடுக்கின்ற வேளாண்மை தொழில் சூழ்நிலையை உருவாக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. நிலத்தை தயார் செய்தல், விதைகள் தேர்வு, விதைத்தல், நீர்ப்பாசனம், பயிரின் வளர்ச்சி, உரமிடுதல், அறுவடை வரை இந்த சீர்மிகு விவசாயத்தில் முன்கணிக்க முடியும். மத்திய, மாநில அரசுகள், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளையும், மானியங்களையும் அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

தூத்துக்குடி நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம்
தூத்துக்குடி நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம்
`அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கணும்னு சொல்லுவாரு!' - இயற்கையில் கலந்த விவசாயி மணி

`நவீன வேளாண்மையில் ஹைட்ரோபோனிக்ஸ' என்ற தலைப்பில் கோவை, பாரதியார் பல்கலைக்கழகம், உயிர்த்தொழில்நுட்பத் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர்.பிரபாகரன், `` `ஹைட்ரோபோனிக்ஸ்’ என்பது மண்ணில்லாமல் நேரடியாகத் தண்ணீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறை. பி.வி.சி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகள் இட்டு அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைத்து செடி நிற்க ஒரு விதமான களிமண் உருண்டைகளை போட வேண்டும். இந்த களிமண் உருண்டைகள் நீரில் கரையாது, ஆனால் நீரை உறிஞ்சு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

இந்த விவசாயத்தில் வேர் பகுதிக்கு நேரிடையாக காற்று, நீர் வழங்கப்படுகிறது. ஏரோபோனிக்ஸ் முறையில் காற்று நிறைந்த பி.வி.சி. பைப்புகளுக்குள் மிதந்தபடி இருக்கும். தண்ணீர் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் மறுசுழற்சி செய்வதன்மூலம் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீருடன் கலந்து செலுத்தும் போது செடிகள் நன்கு செழித்து வளர்கிறது. பசுமை குடில்களில் வளர்க்கும் போது பறக்கும் பூச்சிகளினால் ஏற்படும் நோய்கள் எதுவும் வருவதில்லை. பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயம் செய்யலாம். இதற்கு தனியா தண்ணீர் விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பராமரிப்பது எளிது. பெரிய இட வசதி தேவை இல்லை. குறைவான இடவசதியில் ரசாயன இல்லாத காய்கறிகளை பலமடங்கு உற்பத்தி செய்யமுடியும். வேலை ஆட்கள் யாரும் தேவை இல்லை.

கருத்தரங்கு
கருத்தரங்கு

மற்ற விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி செலவு மிகக் குறைவு. இந்த முறை விவசாயத்தில் களைகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.குறைந்த நாட்களில் மிக விரைவாக அறுவடைக்கு வந்து விடும். ஆண்டு முழுவதும் எல்லா வகை காய்கறிகளும், பழங்களும் சாகுபடி செய்யலாம்” என்றார்.

மேலும், `இணையவழி கால்நடை பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு முறை கிளவுட் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், பேசிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கணினிப்பொறியியல் கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் கேசவராஜா, ``கிளவுட் ஐ.ஓ.டி தொழில்நுட்பம் மூலம் செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள், செல்லப்பிராணிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறியைக் கண்டறிய முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் ஆரோக்கியமான செல்லப்பிராணிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது, விலங்கு நடத்தை கண்காணிப்பு, செரிமான கண்காணிப்பு, தொடர்ச்சியான கண்காணிப்பு, டெலிமெடிசின் சேவைகள், சுகாதாரச் சிகிச்சைகளை வழங்குகிறது” என்றார். இக்கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு