Published:Updated:

`15 வருஷத்துக்குப் பிறகு திரும்பவும் குளத்தை பார்க்கப்போறோம்!' - கனிமொழிக்கு நன்றி சொல்லும் மக்கள்

குளம் தூர் வாரும் பணியைத் தொடங்கி வைத்த கனிமொழி
குளம் தூர் வாரும் பணியைத் தொடங்கி வைத்த கனிமொழி

``இந்தத் தண்ணீரை நம்பி 2,000 ஏக்கருக்கும் மேல விவசாயம் நடந்துச்சு. புன்னக்காயல் கடலில் இருந்து 7 கி.மீ தூரத்துலதான் எங்க ஊரு இருக்குது. அதனால, நிலத்தடி நீரெல்லாம் உப்பாகுற அபாயத்துல இருக்கோம்".

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆத்தூர் கஸ்பா கிராமத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினரான கனிமொழி. அப்போது மக்கள் திரண்டு ``அம்மா... ஆத்தூர்ல பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் ஒண்ணு இருக்குது. இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கும், இந்த குளத்துல இருந்துதான் குடிநீர் கிடைச்சுட்டு இருந்துச்சு. அதுமட்டுமல்லாம, இந்தத் தண்ணீரை நம்பி 2,000 ஏக்கருக்கும் மேல விவசாயம் நடந்துச்சு. புன்னக்காயல் கடலில் இருந்து 7 கி.மீ தூரத்துலதான் எங்க ஊரு இருக்குது. அதனால, நிலத்தடி நீரெல்லாம் உப்பாகுற அபாயத்துல இருக்கோம்.

ஆத்தூர் கஸ்பா குளத்தின் தற்போதைய நிலை
ஆத்தூர் கஸ்பா குளத்தின் தற்போதைய நிலை

இந்தக் குளத்தை தூர் வாரி 15 வருஷத்துக்கும் மேல இருக்கும். அதனால இந்தக் குளத்தோட ஆழம் நாலடியாக் குறைஞ்சு, செடிகொடிகள் படர்ந்து புதர் மண்டிக் கிடக்குது. இதையெல்லாம் அகற்றி குளத்தைத் தூர்வாரினா இந்த சுத்து வட்டாரத்துல இருக்க கிராமங்களோட தண்ணீர்த் தேவை பூர்த்தியாகும். விவசாயமும் செழிக்கும், நிலத்தடி நீரையும் உப்பாகாமத் தடுக்கலாம். இந்தக் குளத்தை தூர் வாருவதற்காக அரசாங்கம் ரூ.50 லட்சம் ஒதுக்குனதாச் சொன்னாங்க. ஆனா, எந்த வேலையுமே நடக்கலை. அதனால, நீங்க கவனம் எடுத்து இந்த ஆத்தூர் கஸ்பா குளத்தை தூர்வார நடவடிக்கை எடுத்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனே, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அந்தக் குளத்தின் விவரங்களைக் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அக்குளத்தை தூர் வாரிட முன்வந்த தன்னார்வ அமைப்பு, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த சில நாள்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கொரோனாப் பணிகள் ஆய்வு, கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல் போன்ற பணிகளை மேற்கொண்டாலும், இந்தக் குளத்தைத் தூர்வாருவதற்கான செயல் திட்டங்களையும் தயாரித்துக்கொண்டிருந்தார் கனிமொழி எம்.பி.

 அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கனிமொழி
அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கனிமொழி

இதற்கிடையில், `என்வயர்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் குளத்தை சீரமைக்கவும் ஆழப்படுத்தவும் தங்கள் அமைப்பு தயார் எனவும், அதற்கான வழிகாட்டுதல்களைத் தர வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தது. இந்த சுற்றுச் சூழல் தன்னார்வத் தொண்டு அமைப்பு, ஏற்கெனவே சென்னை முதல் திருநெல்வேலி வரை பல நீர் நிலைகளை செம்மைப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுதும் 15 மாநிலங்களில் 141 ஏரிகளை ஆழப்படுத்தியும் சீரமைத்தும் கொடுத்துள்ளது. இந்நிலையில், `என்வர்மன்டெலிஸ்ட் ஃபவுண்டேஷன் அமைப்பு’, `தூத்துக்குடி மாவட்ட நிர்வாக’த்தோடு இணைந்து ஆத்தூர் கஸ்பா குளத்தை சீரமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூர் வாரப்படும் குளம்
தூர் வாரப்படும் குளம்

இது குறித்து ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம், ``போன வருஷம் ஜனவரி மாசம், எங்க ஊருல கிராமசபைக் கூட்டம் நடந்துச்சு. `ஆத்தூர் கஸ்பா’ குளத்தை சீரமைச்சுத் தரணும்னு கனிமொழி மேடமிடம் கோரிக்கை வச்சோம். `உங்க கோரிக்கையை நிச்சயமா நிறைவேத்துறேன்’ எனச் சொன்னதுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைச்சு குளத்தைப் பத்தியான முழு விவரத்தையும் கேட்டாங்க.

அதுக்குள்ள கொரோனா முதல் அலை பரவலில் ஊரடங்கும் போட்டாங்க. ஒரு வருஷம் கழிச்சாலும், எங்களோடக் கோரிக்கையை ஞாபகமா வச்சிருந்து குளத்தை சீர்படுத்த பல முயற்சிகளை எடுத்து இன்னிக்கு, தூர்வாருற வேலையை வெற்றிகரமா ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக் குளத்தை சீரமைச்சா 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெறும். 16-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடி குடிநீர் பயன் பெறும், இதையெல்லாத்தையும்விட நிலத்தடி நீர் உப்பாகாம நிரந்தரமா தடுக்கப்படும். குளத்துல தூர்வாரும்போது எடுக்குற மண்ணை வெளியேத்தாம, கரைகளைப் பலப்படுத்துவதாகவும் மேடம் சொல்லியிருக்காங்க.

தூர் வாருதல்
தூர் வாருதல்

`ஆத்தூர்’னாலே வெற்றிலையும் வாழையும்தான் முக்கியப் பயிர்கள். இந்தக் குளம் சீரமைக்கப்பட்டா வெற்றிலை, வாழை சாகுபடி செய்யுற பரப்பளவும் அதிகரிக்கும். இந்தக் குளம் தூர்வாரினா பார்க்குறதுக்கு கடல் மாதிரி இருக்கும். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அந்தக் குளத்தோட அழகை திரும்பவும் பார்கப்போறோம். விவசாயிகளோட கோரிக்கையை ஞாபகம் வச்சி நிறைவேத்துன எம்.பி மேடமுக்கு எங்களோட நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு