Published:Updated:

`இது கதிர் வரும் நேரம்; பயிர் கருகிடுமோனு பயமா இருக்கு!’ - விவசாயிகளை அச்சுறுத்தும் மின்வெட்டு

விவசாய போர்வெல்
விவசாய போர்வெல்

கொரானா ஊரடங்கால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை. மின்சாரம் சேமிப்பில் இருப்பதால், மின்வெட்டு இருக்காது என நினைத்தார்கள். ஆனால், இவர்கள் எதிர்பார்ப்போ ஏமாற்றமாகிவிட்டது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில், அறிவிக்கப்படாத தீடீர் மின்வெட்டால், முறையாகத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நெருக்கடியான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால், நெற்பயிர்கள் கருகக்கூடிய அபாயம் நெருங்குவதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

விவசாயி விவேகானந்தன்
விவசாயி விவேகானந்தன்

ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பே இல்லையென விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். காரணம், கடந்த 45 நாள்களுக்கும் மேலாக நீடித்து வந்த கொரானா ஊரடங்கால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை. மின்சாரம் சேமிப்பில் இருப்பதால், மின்வெட்டு இருக்காது என நினைத்தார்கள். ஆனால், இவர்கள் எதிர்பார்ப்போ ஏமாற்றமாகிவிட்டது.

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் ஏற்கெனவே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். கோடை நெல் சாகுபடியாவது தங்களுக்கு ஓரளவுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு, மிகுந்த சவால்களை எதிர்கொண்டு சாகுபடி பணிகளை மேற்கொண்டார்கள். இந்நிலையில்தான் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு இவர்களைப் பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி விவேகானந்தன் கூறுகையில், ``இந்தப் பகுதியில ஆயிரக்கணக்கான ஏக்கர்ல கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுருக்கு. பயிர்கள் நல்லா செழிப்பா வளர்ந்துருக்கு. இது கதிர் வர்ற நேரம். காய்ச்சல் ஏற்படாத அளவுக்கு முறையாகத் தண்ணீர் பாய்ச்சியாகணும். ஆனால், கடந்த 10 நாள்களாக, விவசாய மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுது.

மும்முனை மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது
மும்முனை மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது

எப்ப மின்சாரம் வரும், எப்ப போகும்னு உறுதியாத் தெரியலை. அடிக்கடி நிறுத்திடுறாங்க. ஆலங்குடி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட வலங்கைமான், திருவோணமங்கலம், மேல அமராவதி, பூந்தோட்டம், சாத்தனூர், தென்குவளவேலி, நாத்தாங்குடி, கொட்டையூர் உட்பட இன்னும் பல கிராமங்கள்ல இந்த பிரச்னை இப்ப அதிகமாக இருக்கு. கதிர் வர்ற நேரத்துல, ஒழுங்கா தண்ணீர் பாய்ச்ச முடியலை. இன்னும் ஓரிரு நாள்கள் இதே நிலைமை நீடிச்சுதுனா, நெற்பயிர்கள் கருக ஆரம்பிச்சுடும். விவசாயிகள் எல்லாருமே மிகுந்த உளைச்சலோடு இருக்கோம்” என வேதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு