Published:Updated:

தொடரும் மழை: பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள் விவசாயிகளே..!

பயிர் மற்றும் கால்நடை

பொதுவாகவே கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுவும் மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில் கால்நடை வளாகங்களை முற்றிலும் தூய்மையாக வைத்து கொள்வது மிக மிக முக்கியமாகும்.

தொடரும் மழை: பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள் விவசாயிகளே..!

பொதுவாகவே கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுவும் மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில் கால்நடை வளாகங்களை முற்றிலும் தூய்மையாக வைத்து கொள்வது மிக மிக முக்கியமாகும்.

Published:Updated:
பயிர் மற்றும் கால்நடை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையின்போது வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் கால்நடைகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் நோய் தாக்குதல், தீவன சேமிப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவைப்பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

பயிர்
பயிர்

அந்த ஆலோசனைகள் இங்கே இடம் பெறுகின்றன.

  • வடகிழக்கு பருவ மழை இன்னும் எதிர்பார்க்கப்படுவதால் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதை தவிர்க்கவும். மழை பொழியாத நாட்களாக பார்த்து தெளிப்பது நல்லது. தவிர வயல்களில் போதுமான வடிகால் வசதிகளை செய்து வைக்கவும்.

  • இடி மற்றும் மின்னலின் தாக்குதலை முன்னெச்சரிக்கையாக தெரிந்து கொள்ள தாமினி செயலியை பயன்படுத்தவும். வானிலை முன்னறிவிப்பு மற்றும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை தெரிந்து கொள்ள மேக்தூட் செயலியினை பயன்படுத்தவும். இரண்டுமே கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம்
சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம்
  • மழைகாலம் என்பதால் அறுவடை செய்த நெல்மணிகளை உலர வைக்க ஏதுவான இடங்களில் சேமிக்கவும். மேலும் மழை நீர் தேங்காதவாறு நல்ல வடிகால் வசதி அமைக்கவும். தொடர் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காலையில் மலர்களை அறுவடை செய்ய சிரமமாக இருந்தால், மாலையில் மலர்களை அறுவடை செய்து கொள்ளலாம்.

  • அதேபோல கால்நடைகளுக்கு அடர் தீவனமான மக்காச்சோளம், கம்பு, புண்ணாக்கு, தவிடு வகைகளை ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளின் மேல் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவற்றை ஒட்டி தீவன முட்டைகளை சேமிக்கக் கூடாது. தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அடர் தீவன தயாரிப்பு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டும் செய்தால் நல்லது.

  • தற்போது பெய்துள்ள மழை மற்றும் எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி நெல் நட்ட மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ என்ற அளவில் அசோலாவை பரவலாக தூவி நெற்பயிருடன் வளர்க்க வேண்டும். அசோலா வளர்ச்சியடைந்த நிலையில் களை எடுக்கும்போது காலால் மண்ணிற்குள் மிதித்துவிட வேண்டும்.

  • வரும் நாட்களில் காற்றுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால், உழவர்கள் சவுக்கு குச்சிகளை பயன்படுத்தி வாழை பயிர்களுக்கு முட்டு கொடுக்கவும்.

கால்நடை
கால்நடை
  • பொதுவாகவே கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுவும் மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதில் கால்நடை கொட்டகைகளை முற்றிலும் தூய்மையாக வைத்து கொள்வது மிக மிக முக்கியமாகும். அந்த வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு பார்த்து கொள்வதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

  • மேற்கூரைகளில் மழைநீர் வடியாதவாறு கூரைகளை நன்றாக அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி கூரைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • முக்கியமாக கால்நடைகளை மரத்திற்கு கீழேயும், உயரமான கம்பங்களின் கீழேயும், சேதமடைந்த கட்டடங்களுக்கு அருகேயும் கட்ட கூடாது.

  • நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இதன்மூலம் நோய் பரவலைத் தடுக்கலாம்.

  • அனைத்து கால்நடை மற்றும் கோழி கொட்டகைகள் சுற்றியும் கோணிப்பை அல்லது தார்பாய் கொண்டு கட்டவேண்டும். தவிர அதனுடன் நொச்சி இலைகளை சேர்த்து கட்டுவதன் மூலம் கால்நடைகளை குளிர் மற்றும் நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கலாம்.

கறவை மாடு
கறவை மாடு
  • பருவமழை காலம் என்பதால் மழையும், பனி பொழிவும் அதிகமாக இருக்கும். அதனால் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். அப்போது சேமிப்பு கிடங்கில் உள்ள தீவனங்களையே கொடுக்க வேண்டும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு காலை 10.00 மணிக்குமேல் அனுப்புவது நன்று.

  • மழையால் கன்றுகள் மற்றும் ஆட்டு குட்டிகளுக்கு சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு நுரையீரல் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவைகள்மீது மழை சாரல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளது சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம்.