Published:Updated:

மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு... செய்யவேண்டியது இவைதாம்!

துரை.நாகராஜன்

மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழல் மழைக்காலம்தான். அதேபோல ஏற்கெனவே இருக்கும் தோட்டத்தை இந்தப் பருவத்தில் சரியாக கவனித்துக் கொள்வதும் அவசியம். இரண்டிற்குமான வழிகாட்டல் இங்கே.

Terrace Garden
Terrace Garden

பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மை விட்டு அதிகமான தூரத்துக்குச் சென்று விட்டது. ஓடும் நீரை தடுத்துநிறுத்தி அணைகட்டி விவசாயம் பார்த்த முன்னோர்களின் வழிவந்த மக்களில், இன்று பலருக்கு புழுங்கல் அரிசிக்கும், பச்சை அரிசிக்கும்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது. இந்த சூழலில் பெருகிவரும் நோய்களும் அதற்குக் காரணமாக விளங்கிவரும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளும் நஞ்சான உணவையே மக்களுக்கு கொடுக்கிறது. பொதுவாகவே இயற்கையான காய்கறிகளைத்தான் நாம் உண்ணவேண்டும். அதற்கு மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது. இரண்டாவது, இயற்கை விவசாயப் பொருட்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் நேரடியாக பெறுவது. இறுதியாக மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்வது. இந்த வழிகளில் நகரவாசிகளில் பெரும்பாலானோர் இறுதி வழியான மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள்.

Terrace Garden
Terrace Garden

பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் இருந்தாலும்கூட அவற்றை சரியாக அமைப்பது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லை. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என தனித்தனியாக கால நிலைகள் வேறுபடும். அதற்கு ஏற்றார்போல மாடித்தோட்டம் அமைக்கவேண்டும். இப்போது மழைக்காலம் துவங்கியிருப்பதால் மாடித்தோட்டத்தை சரியாக பராமரிக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியிலும் அள்ள அள்ள குறையாத காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

பொதுவாகவே மாடித்தோட்டம் அமைப்பதற்கு இந்த பருவநிலைதான் மிகவும் ஏற்றது. மாடித்தோட்டத்துக்கு அடிப்படைத் தேவை மண் மற்றும் தொட்டிகள். இவற்றை எங்கே சேகரிப்பது என்ற கேள்வியில் தொடங்கும் சோம்பல்தான், உங்கள் வீட்டில் விவசாயம் நடக்காமல் இருப்பதற்கான அடிப்படைக்காரணம். யோசனை மட்டுமே செய்து கொண்டிருந்தால் மாடித்தோட்டம் அமைக்க முடியாது. எந்த நகரத்தில் இருந்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேர பயணத்தில் விவசாய நிலங்களைக் காணலாம். அந்த நிலத்தின் உரிமையாளரைச் சந்தித்துக் கேட்டால் தேவையான மண் கிடைக்கும். அதேபோல மாட்டுச் சாணத்தையும் தேடிப் பெறலாம். இவை நகரங்களிலும்கூட கிடைக்கிறது.

Vikatan

குறைந்த செலவில் தொட்டிகள்!

மண், சாணத்துக்கு அடுத்தது செடி வளரத் தேவையான தொட்டி. இதற்காக அதிக செலவுசெய்து புதுத்தொட்டிகளை வாங்கத்தேவையில்லை. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள், பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்கள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.

புதிதாக வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், 25 நாட்களில் அறுவடையாகும் கீரையிலிருந்து தொடங்கலாம். அதில் அனுபவம் பெற்ற பின்னர், மற்ற காய்கறிகளை விதைக்கலாம். மாடித்தோட்டத்துக்கும் பட்டம் உண்டு. எல்லா ஊரிலும் எல்லா காய்கறிகளும் வளரும் என்றாலும், சில ஊரில் சில பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருக்கும். அதை ஈடுசெய்ய நிழல்வலைப் பந்தல், மூடாக்கு போன்ற சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

Terrace Garden
Terrace Garden

வீட்டுத் தோட்ட விவசாயத்தில் மண் மேலாண்மையில் கவனமாக இருக்கவேண்டும். ஒரு தொட்டிக்கு ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு எரு என்கிற விகிதத்தில்தான் கலந்து போட வேண்டும். செம்மண் அல்லது வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் இவற்றுடன் சேர்த்து தென்னை நார்க்கழிவை கொஞ்சமாக பயன்படுத்தலாம். ஒரு தொட்டிக்குத் தேவையான மண், மணல் மற்றும் உரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் கொட்டிக் கலந்து தொட்டியில் முக்கால் பங்கு நிரப்ப வேண்டும்.

பிளாஸ்டிக் வாளிகளாக இருந்தால், அவற்றின் அடிப் பகுதியில், சுற்றிலும் கோணி ஊசி புகும் அளவுக்கு 12 இடங்களில் சிறு துளைகளை இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம். தொட்டிகளில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தால், மூன்றாவது நாள், மண் ஈரத்தன்மை குறைந்த பின்னர் அதில் விதை அல்லது நாற்றை நடவு செய்யலாம்.

Vikatan

அடுத்து ‘விதைக்கு எங்கே போவது?’ என்ற கேள்விதான் எழும். ஆரம்ப கட்டத்தில் சமையலறையில் உள்ள வெந்தயத்தையே விதைத்துப் பழகலாம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உடையது. கையளவு வெந்தயத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மண் நிரப்பி தயாராக உள்ள பக்கெட்டில் தூவி விதை மறையும்படி மண்ணைக் கிளறி விட்டு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும். அடுத்த நான்கு நாட்களில் கீரை துளிர்க்கும். களைகள் தென்பட்டால் கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 10-ம் நாளில், 100 கிராம் மண்புழு உரத்தை மேலே தூவிவிடலாம். தினமும் நீர் தேங்காத அளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், கீரை 25-ம் நாளில் அறுவடைக்கு வரும். தொடர்ந்து, கொத்தமல்லி, அரைக்கீரை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் அறுவடை கொடுக்கக்கூடிய கீரையை வளர்த்து அனுபவம் கண்ட பின்னர், காய்கறி விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம்.

தொட்டிகளில் அதிக தண்ணீர் தேங்கி இருக்குமாறு வைத்திருக்கக் கூடாது. செடியின் வேர் அழுகி பட்டுப்போய்விடும்.

மண் நிரப்பிய வாளியை மாடியில் வைக்கும் போது, நேரடியாகத் தளத்தில் வைக்கக்கூடாது. செங்கற்களை அடுக்கி அதன் மீதும் வைக்கலாம். நிறையத் தொட்டிகளை வரிசையாக வைக்கும்போது நீளமான மரப்பலகையின் மீது தொட்டிகளை வைக்கலாம். அப்போதுதான் மழைநீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக இருக்கும். எல்லவற்றையும் மீறி மழை பெய்யும் நேரங்களில் மழைத் தண்ணீர் தேங்கி நின்றால் உடனே மழைத் தண்ணீரை அப்புறப்படுத்திவிட வேண்டும். அதேபோல கோடை காலங்களில் நிழல்வலை பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வழியாதபடி தார்பாலின் பந்தல் அமைத்துக் கொள்ளலாம். மழையிலிருந்து தப்பிக்க தொங்கு தோட்டம், பி.வி.சி பைப்புகளை மேடை அமைத்து அதன்மீதும் தொட்டிகள் வைக்கலாம்.

தொட்டிகளில் அதிக தண்ணீர் தேங்கி இருக்குமாறு வைத்திருக்கக் கூடாது. செடியின் வேர் அழுகி பட்டுப்போய்விடும். மற்ற பூச்சித் தாக்குதல் இருந்தால், மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி பூன்டு கரைசலைப் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் மாடித்தோட்டம் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும்.