Published:Updated:

வறண்ட போர்வெல்லையும் உயிர்ப்பிக்கலாம்... விவசாயிகள் செய்யவேண்டியது இவைதாம்!

துரை.நாகராஜன்

வறண்ட போர்வெல் அல்லது கிணறுகளுக்குள் நீரை அனுப்பி நிலத்தடிநீரை அதிகரித்து விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு செய்யவேண்டியது என்ன?

farm pond
farm pond

தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழைபெய்யத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் கோடைக்காலம் தொடங்கிய சிறிது நாள்களிலேயே தமிழகம் முழுவதும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் அதிகம் கவலைப்பட்டது, பொதுமக்களும், விவசாயிகளும்தான். மழைபெய்தால் நீர்நிலைகளில் இருக்கும் தண்ணீரை வைத்து ஓரளவு பயன்பெற்று வருகிறார்கள். ஆனால், வறண்ட கிணறு மற்றும் போர்வெல்களை வைத்துக்கொண்டு, அதைச் செயல்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில உத்திகளைப் பயன்படுத்தினால், வறண்ட கிணறுகள் மற்றும் போர்வெல்களை உயிர்ப்பிக்க வைக்கலாம்.

`வீணான 110 அடி போர்வெல், ஆனால்..!- தஞ்சை இளைஞரின் ஆச்சர்யப்பட வைத்த மழைநீர் சேமிப்பு பிளான்

வறண்ட போர்வெல் அல்லது கிணறுகளுக்குள் நீரை அனுப்பி நிலத்தடிநீரை அதிகரித்து விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைச் செய்யும் முன்னர் நிலத்தில் ஆங்காங்கே வரப்புகள் அமைக்க வேண்டும். ஒரே அளவாக தண்ணீர் தேங்கி நிற்கும்படி வரப்புகள் அமைக்க வேண்டும். அதில் சேகரமாகும் நீரை குழாய்கள் மூலமாக வடித்து எடுத்து அதை ஆழ்துளைக் கிணற்றின் அருகில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பிற்குள் விழும்படி கொண்டு வந்துவிட வேண்டும். அதன் பின்னர் மழைநீர் சேகரிப்பு அமைப்பை போர்வெல்லுக்கு அருகில் இருக்குமாறு அமைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால் எவ்வளவு காலம் ஆனாலும், போர்வெல்லில் நிலத்தடிநீர் நிரந்தரமாக இருக்கும்.

போர்வெல்லைச் சுற்றி 10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட குழியினை அமைக்க வேண்டும். அந்தக் குழியின் மையப்பகுதியில் இருக்கும் போர்வெல் குழாயில் துளையிட வேண்டும். துளையிட்ட இடத்தில் பெரிய கண் கொண்ட கொசுவலைகளை வாங்கி சுற்ற (பேண்டேஜ் சுற்றுவது போல) வேண்டும். இந்தக் கொசு வலைகளை கீழேயும், மேலேயும் கட்டுக் கம்பி கொண்டு கட்டிவிட வேண்டும். அதன்பின்னர் குழியில் கிணற்றுக்கல் அல்லது உடைகல்லை (150 மி.மீ அளவு) கொண்டு 6 அடி வரை நிரப்ப வேண்டும். அடுத்த 3 அடிக்கு 40 மி.மீ அளவு கொண்ட ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மீதமுள்ள ஒரு அடிக்குக் குழியின் ஓரங்களில் செங்கற்களை வைத்து தொட்டிபோல அமைக்க வேண்டும். இப்படி அமைக்கும்போது, மழை நீரானது கற்களால் வடிகட்டப்பட்டு கிணற்றில் சேகரமாகும். இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும்போது, ஏற்கெனவே ஊற்றுகளை அடைத்திருக்கும் சிமென்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து வறண்டுபோன போர்வெல்லில் தண்ணீர் கிடைக்கும். இதனால் நிலத்தடி நீர் உயரும்.

bore well
bore well

கிணற்றின் மேற்பகுதியில் பத்தடி தூரத்தில் 10 அடி நீளம், 10 அடி அகலம், 6 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்திலிருந்து அரையடி உயரத்தில் 4 அங்குல குழாய் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையைக் கிணற்றில் இருக்குமாறு குழி எடுத்து அமைக்க வேண்டும். குழாய் பதிக்கப்பட்டிருக்கும் மையப்பகுதியில் சிமென்ட்டைக் கொண்டு பூசிவிட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் அதிகமாக வரும்போது குழாய்கள் நகராமல் பிடிப்புடன் இருக்கும். குழிக்குள் இருக்கும் குழாயின் முனையை மூடியால் மூடிவிட வேண்டும்.

அதன் பின்னர் குழிக்குள் இருக்கும் குழாயின் பகுதியில் துளையிட வேண்டும். அதைச் சுற்றி கொசுவலையால் சுற்ற வேண்டும். அதன்பின்னர் குழியில் கிணற்றுக்கல் அல்லது உடைகல்லை (150 மி.மீ அளவு) கொண்டு 3 அடி வரை நிரப்ப வேண்டும். அடுத்த 2 அடிக்கு 40 மி.மீ அளவு கொண்ட ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மீதமுள்ள ஒரு அடிக்குக் குழியின் ஓரங்களில் செங்கற்களை வைத்து தொட்டிபோல அமைக்க வேண்டும். இப்போது நிலத்தில் விழும் மழைநீர், இக்குழியில் சுத்திகரிக்கப்பட்டு கிணற்றுக்குள் சேகரமாகும்.

"மழைநீர் சேகரிப்பில் மட்டுமே 8,00,000 லிட்டர் தண்ணீர் சேமித்தோம்!" - கிரண்ஃபோஸ் CEO ரங்கநாத்

மழை நீரை பண்ணைக் குட்டைகள் மூலம் சேமித்தும், கிணறு அல்லது போர்வெல் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். 3 ஏக்கர் அளவுள்ள நிலங்களுக்குச் சிறிய பண்ணைக்குட்டைகள் 30 அடி நீளம், 30 அடி அகலம், 5 அடி ஆழம் அளவுள்ள பண்ணைக்குட்டைகள் போதுமானது. 4 ஏக்கர் நிலங்களுக்கு 60 அடி நீளம், 60 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட பண்ணைக்குடைகள் அமைக்க வேண்டும். இந்தப் பண்ணைக்குட்டைகளை நிலத்தின் பாதி அல்லது மேல் பகுதியில் அமைக்க வேண்டும். கிணறு அல்லது போர்வெல்லுக்கு மேற்பகுதியில் பண்ணைக்குட்டையை அமைப்பது மிக அவசியம். அதனால் கிணறு அல்லது போர்வெல்லில் தண்ணீர் மட்டம் உயரும். பொதுவாக நிலத்தில் தண்ணீர் உருண்டோடும் பாதையில் பண்ணைக்குட்டையின் வாய்ப்பகுதியை வைத்து, மீதமுள்ள பக்கங்களில் குட்டைகள் அமைக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளால் பூமிக்குள் இறங்கக்கூடிய தண்ணீரின் அளவு அதிகமாகிறது. சிறிய பண்ணைக்குட்டைகளைத் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகமாக உள்ள நிலங்களில் அமைக்க வேண்டும். நடுத்தரப் பண்ணைக்குட்டைகளை காய்கறிப் பயிர்கள் அதிகமாக விலையும் நிலங்களில் அமைக்க வேண்டும். 10 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களிலோ அல்லது மானாவாரி நிலங்களிலோ, 100 அடி நீளம், 100 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்ட பண்ணைக்குட்டைகளை அமைக்க வேண்டும். சிறிய பண்ணைக்குட்டைக்கு 15,000 ரூபாயும், நடுத்தரப் பண்ணைக்குட்டைக்கு 35,000 ரூபாயும், பெரிய பண்ணைக்குட்டைக்கு 55,000 ரூபாய் வரையும் செலவாகும். ஆனால் இதன் பலன் பல ஆண்டுகளுக்கும் விவசாயிகளுக்கு உதவும்.

well
well

இதுபோன்ற யுக்திகளைக் கடைப்பிடித்தால் வறண்ட கிணறுகளையும், போர்வெல்களையும் உயிர்ப்பித்து விவசாயிகள் பயன்பெறலாம்.