Published:Updated:

வறட்சியை விரட்டும் கரும்புச் சக்கை... எப்படி? - மாடித்தோட்டம் ஆலோசனைகள் - வீட்டுக்குள் விவசாயம் 20

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பசுமையை உருவாக்க வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 20

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த முறை மாடித்தோட்ட வல்லுநர் பம்மல் இந்திரகுமார் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்காரு. அதையும் சில டிப்ஸ்களையும் பார்க்கலாம். வீட்டுத்தோட்டம் தொடர்பா உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமென்ட் பாக்ஸ்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கான விளக்கம் கொடுக்கப்படும்.

முதல்ல சில பயனுள்ள டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

பாரம்பர்ய விதைகள்
பாரம்பர்ய விதைகள்
மண்பானையிலும் மகசூல் எடுக்கலாம்... எப்படி? - மாடித்தோட்ட ஆலோசனைகள்! - வீட்டுக்குள் விவசாயம் - 19

*விதைகள்ல இருந்து ஆரம்பிப்போம். பொதுவா, விதைகளை வாங்கிட்டு வந்தவுடனே அப்படியே தொட்டிகள்ல விதைச்சிடுறோம். ஆனா, அப்படி செய்யக்கூடாதுங்க. விதைகளைக் குறைந்தபட்சம் 6 மணி நேரம் பஞ்சகவ்யாவுல ஊற வைக்கணும். பஞ்சகவ்யா கிடைக்காதவங்க தண்ணியில 10 மணி நேரம் ஊற வைக்கலாம். அதுக்குப் பிறகு விதைகளை நடவு செய்யணும். அப்படி செஞ்சா, முளைப்புத்திறன் நல்லா இருக்கும். இதை அவசியம் செய்யணும்.

*செடிகளோட சமையலறை, இலைகள்தான். இலைகள் மூலமாக சூரிய ஒளியை அறுவடை பண்ணி, தேவையான உணவைச் செடிகள் தயார் செய்யும். ஆக, பயிர்களோட ஆரோக்கியத்துக்கு சூரிய ஒளி ரொம்ப முக்கியம். அதுனால காய்கறி பயிர்களை நடவு செய்யும்போது, நல்ல சூரிய ஒளி கிடைக்கக்கூடிய இடத்தைத் தேர்வு செஞ்சு நடணும். குறிப்பா, ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது சூரிய ஒளி கிடைக்குற மாதிரி இடத்துல செடிகள் இருக்க மாதிரி பாத்துக்கணும்.

* நம்ம வீடுகள்ல பயன்படுத்துற டீத்தூளை அப்படியே கொண்டுபோய் செடிகள்ல போடுறோம். அப்படிச் செய்யக் கூடாது. டீத்தூளை செடிகளுக்கு உரமாகப் போடலாம். ஆனா, காய வெச்சுதான் போடணும்.

* வீட்டுத்தோட்டத்துல பூக்கள் இருக்க செடிகள் அதிகமா இருக்கணும். அப்போதான் தேனீக்கள் நம்ம தோட்டத்துக்கு வரும். அதுங்க மூலமா அயல் மகரந்தச் சேர்க்கை நடக்கும். செடிகள்ல அதிக மகசூல் கிடைக்கும்.

* பொதுவா, நர்சரிகள்லதான் பூச்செடிகளை வாங்குறோம். அப்படி வாங்கும்போது, செடிகள்ல அதிக பூக்கள் இருக்குற செடிகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுப்போம். ஆனா, அப்படித் தேர்வு செய்யக் கூடாது. அதுக்குப் பதிலா அதிக கிளைகள் இருக்க செடிகளைத் தேர்வு செய்யணும். அப்படி வாங்கிட்டு வர்ற செடிகளை அப்படியே பையை உறிச்சிட்டு, தொட்டிகள்ல நடவு செஞ்சிடக் கூடாது. நம்ம இடத்துல ரெண்டு மூணு நாள் வெச்சிருக்கணும். அந்த இடத்தோட சீதோஷ்ண நிலைக்கு அந்தப் பயிர்கள் பழகிடும். அதுக்குப் பிறகு, தொட்டிகள்ல நடவு செய்யலாம்.

* வீட்டுத்தோட்டத்துல பூச்செடிகள் இருக்க மாதிரி, சில மூலிகைகளும் இருக்கணும். குறிப்பா,

- துளசி,

- தூதுவளை,

- சோற்றுக்கற்றாழை,

- மஞ்சள் கரிசாலை,

- பொன்னாங்கண்ணி,

- நேத்திரப்பூண்டு,

- நிலவேம்பு,

- பூலாங்கிழங்கு,

- ஓமவல்லி,

- ஆடாதொடை,

- நொச்சி,

- பூனை மீசை,

- தழுதாழை,

- அறுகம்புல்,

- செம்பருத்தி மாதிரியான மூலிகைகள் அவசியம் இருக்கணும்.

பூக்கள்
பூக்கள்
மாடித்தோட்டத்துல பயிர்கள் வாடிப் போகுதா? நீங்க பண்ணவேண்டியது இதுதான்! - வீட்டுக்குள் விவசாயம் - 18

மாடித்தோட்ட விவசாயத்துல பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் பம்மல் இந்திரகுமார். வீட்டுத்தோட்டம் தொடர்பா அவர் சில ஆலோசனைகளைச் சொல்றாரு. அதையும் கேளுங்க...

``வீட்டுத்தோட்டத்தில் இன்னைக்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. நாம வீட்டுத்தோட்டம் அமைப்பது நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்; அதற்காக விஷம் இல்லாத காய்கறிகளை உண்ண வேண்டும் என்பதற்காகத்தான். பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும்போது அந்த அடிப்படையே சற்று ஆட்டம் காண்கிறது. பாலித்தீன், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடு இன்றைக்கு வீட்டுத்தோட்டங்களில் இருக்கிறது. கூடுமானவரை பிளாஸ்டிக் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்குப் பதிலாக மூங்கில் கூடைகள், மர டப்பாக்கள், சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். கடப்பாக்கல் பயன்படுத்தி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்கலாம். அதற்குள் மண்ணைப் போட்டுச் செடிகளை வளர்க்கலாம். மாடித்தோட்டங்களில் மண் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். உண்மைதான் ஆனாலும், அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் தென்னை நார்க்கழிவு உரங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். காயர்பித்தில் `லிக்னைட்' என்ற ரசாயனம் இருக்கிறது. அதை வெளியேற்றிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பான்மையான ஆட்களுக்கு அது தெரிவதில்லை. அதனால் அதை நான் பரிந்துரை செய்வதில்லை.

அதற்குப் பதிலாக, தோட்ட மண், காய்ந்த சாணம், கரும்புச் சக்கை இவை மூன்றையும் சம அளவு கலந்து பயன்படுத்தலாம். இதில் விதைகளை விதைத்தால் அருமையாக முளைக்கும். கரும்புச் சக்கையை பல இடங்களில் சாலை ஓரமாகக் கொட்டி வைத்திருப்பார்கள். அதை அப்படியே எடுத்துப் பயன்படுத்தலாம். காயர் பித், மண்புழு உரம் ஆகியவற்றைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அதற்குப் பதிலாகக் கரும்புச்சக்கையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல மாடித் தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. பூச்சி விரட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, வந்த பிறகு செய்யாமல் 15 நாளைக்கு ஒரு முறை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது நல்லது.

இந்திரகுமார்
இந்திரகுமார்

ஒவ்வொரு மாடித்தோட்ட விவசாயிகளின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான இடுபொருள் மீன் அமிலம். இதை நாமே தயார் செய்துகொள்ளலாம். மீன் கழிவு, வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து 10 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து 50 மடங்கு தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். இதைச் செய்தால் பூக்காத செடிகள் பூக்கும். காய்க்காத செடிகளும் காய்க்கும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செடி வளர்க்க விரும்புபவர்கள் பால்கனிகளில் வளர்க்கலாம். அங்கு வெயில் அவ்வளவாக இருக்காது. ஆனால், வெளிச்சம் கிடைக்கும். பால்கனி கைப்பிடிகளையே தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம். 2 அடிக்கு 5 அடி கடப்பாக்கல் வாங்கி தொட்டிபோல் அமைத்துக் கொள்ளலாம். அதில் கீழ்ப்பகுதியில் மூன்று அங்குலம் உயரத்துக்குக் கரும்பு சக்கையைப் போட வேண்டும். அதற்கு மேல் ஒரு பங்கு காய்ந்த மாட்டுச் சாணம், ஒரு பங்கு தோட்ட மண் கொட்டி பரப்ப வேண்டும். அதற்கு மேல் மீண்டும் இரண்டு அங்குலத்துக்குக் கரும்பு சக்கையைப் பரப்ப வேண்டும். இதில் செடிகளை நடவு செய்து வளர்க்கலாம். பிளாஸ்டிக் பதிலாகக் கடப்பாக்கல் தொட்டிகளைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்க நினைப்பவர்களும் இதே முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

பால்கனியில், புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, கீரைகளை வளர்க்கலாம். இந்தப் பயிர்களுக்கு வெயில் அதிகம் தேவைப்படாது. வெளிச்சம் இருந்தால் போதும். பால்கனியில் காய்கறிகள் அதிகம் வராது. ஆனால், தக்காளிச் செடிகளை வளர்க்கலாம். அந்தச் செடிகள் கொடிபோலக் கீழே வெளியே படர்ந்து தொங்கும். தொட்டிகளில் தக்காளிச் செடிகளை வளர்க்கலாம். கரும்பு சக்கைகளை மாடித்தோட்ட பயிர்களுக்கு மூடாக்காகவும் பயன்படுத்தலாம். இதனால் வறட்சியிலிருந்து செடிகளைக் காக்கலாம். அறுவடை முடிந்த பிறகு, ஒருவாரம் தொட்டியைக் காயவிட்டுத்தான் மறுபடியும் நடவு செய்ய வேண்டும்'' என்றார்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு