Published:Updated:

பழைய வாட்டர் கேன்லயே அசத்தலா அமைக்கலாம் மாடித்தோட்டம்... வாங்க தெரிஞ்சுப்போம்! - 17

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 17

`அனுபவங்கள்தான் சிறந்த ஆசான்'னு சொல்லுவாங்க. அப்படி நாம வீட்டுத்தோட்டத்துல இறங்கி, ஒவ்வொரு விஷயமா கத்துகிட்டாதான் நாமளும் சிறந்த வீட்டுத்தோட்ட விவசாயியா மாற முடியும். அப்படி அனுபவம் இல்லாம இறங்கி, 10 மாசத்துலயே சிறந்த விவசாயியா மாறியிருக்காங்க சிவப்பிரியா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரியா ஆடை வடிவமைப்புக் கலைஞர். தன்னோட புது வீட்டுல வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிச்சு, அதுல கத்துகிட்ட அனுபவங்களை நம்மோட பகிர்ந்துக்கிறாங்க.

சிவப்பிரியா
சிவப்பிரியா

``எங்க வீடு புதுசா கட்டுன வீடு. 2020-ம் வருஷம் மார்ச் மாதம் குடிவந்தோம். இது எங்களோட கனவு இல்லம். வீட்டுத்தோட்டம் அமைக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். வீட்டுக்கு வந்தவுடனே அந்த வேலையைத் தொடங்கிட்டேன். ஆரம்பத்துல மண்ணுலதான் விதைகளை நடவு பண்ணி விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஆனா, மண்ணு `செட்' ஆகல. கொஞ்ச நாள்லயே இறுகிப்போச்சு. அப்பதான், மாடித்தோட்டத்துல, `மண் அதிகம் பயன்படுத்தக் கூடாது. மாடியில வெயிட் ஏத்தக்கூடாது'ன்னு சொன்னாங்க. உடனே `காயர் பித்' வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

70 சதவிகிதம் காயர் பித், 20 சதவிகிதம் மண்புழு உரம், 10 சதவிகிதம் மண், அதோட ஒரு கைப்பிடி வேப்பம்பிண்ணாக்கு கலந்து கலவையைத் தயார் செஞ்சு அதுல விதைகளை விதைச்சேன்.

அதுலயும் ஒரு சிக்கல் இருந்தது. இந்தக் கலவையைத் தயார் செய்தவுடனே அப்படியே தொட்டியில போட்டு விதைகளைப் போடக் கூடாது. 10 நாள் கலவையை வெச்சிருந்து, அதுக்குப் பிறகுதான் பயன்படுத்தணும். அதை நான் அனுபவத்துலதான் தெரிஞ்சுகிட்டேன்.

நான் இந்தக் கலவையைத் தயார் செய்றதைப் பார்த்துட்டு எங்க அம்மாவும் தயார் பண்ணி பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. ஆனா, அவங்க கலவையைத் தயார் செஞ்சவுடனே விதையை நடவு பண்ணிட்டாங்க. விதைகள் அவிஞ்சுப் போச்சு. அதுனால 10 நாள் வெச்சுருந்து பிறகு, விதைக்குறதுதான் சரியான நடைமுறை. அப்பதான் கலவையில இருக்க சூடு ஆறியிருக்கும். அதுக்குப் பின்னாடிதான் அதுல விதை போடணும். இது கவனிக்க வேண்டிய விஷயம்.

நான் `குரோபேக்'ல பயிர் வளர்க்கல. நாலஞ்சு `குரோபேக்'ல கீரைகளை மட்டும்தான் வளர்க்குறேன். மத்தபடி முழுக்க முழுக்க `வேஸ்ட் ரீசைக்கிளிங்' வாட்டர் கேன்லதான் செடிகளை வளர்க்கிறேன். மாடித்தோட்டத்துக்கு அதிக செலவு செய்யக் கூடாதுனு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டுதான் இறங்குனேன். இதுவரைக்கும் 2,000 ரூபாய்தான் செலவாகியிருக்கு. 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பழைய வாட்டர் கேன்களை வாங்குவோம். கீழே ஒரு ஓட்டை போட்டு மேலே `டாப்' பகுதியை `கட்' பண்ணிட்டா தொட்டி தயாராகிடும். அதுலதான் காயர் பித், கம்போஸ்ட் கலவையைப் போட்டுச் செடிகளை வளர்க்குறோம். ஒரு கேன் 10 - 20 ரூபாய் விலையில கிடைக்குது.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்
மாவுப்பூச்சிக்கு புளிச்ச மோர், இரும்புச் சத்துக்கு முருங்கை இலை... மாடித்தோட்ட அனுபவங்கள்! - 16

தோட்டம் ஆரம்பிச்சவுடனே எனக்கு ரிசல்ட் கிடைக்கல. சரியா பூ பூக்கல. காய் காய்க்கலை. என்ன செய்றதுன்னே தெரியல. அப்பதான் பெருங்காயத்தூளை வேர் பகுதியில போட்டா, செடி நல்லா பூப்பூத்து காய் காய்க்கும்னு சொன்னாங்க. உடனே நானும் அதைச் செஞ்சிப் பார்த்தேன்.

ஒரு டீ ஸ்பூன் பெருங்காயத்தூளை எடுத்து ஒரு டம்ளர் தண்ணியில கலந்துகிட்டேன். அதை ஒவ்வொரு செடியோட வேர் பகுதியிலயும் நாலு ஸ்பூன் ஊத்துனேன். அதுக்குப் பிறகு, ரொம்ப நாள் பூ எடுக்காத செடிகள்கூட பூ எடுக்க ஆரம்பிச்சு நல்லா காய்ச்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடித்தோட்ட விவசாயத்துல எனக்குப் பெரிய படிப்பினையைக் கொடுத்தது அவரைச்செடிதான். அவரைச் செடியில கறுப்பு கலர்ல ஒரு பூச்சி (அசுவினி) விழுந்தது. பூவெடுக்குற நேரத்தில அதோட தாக்குதல் அதிகமா இருக்கும். காம்பு முழுக்க நசநசன்னு ஒரே பூச்சியா இருக்கும். அதுக்கு பயந்து நான் ஒரு செடியைப் பிடுங்கிப் போட்டுட்டேன். பிறகு அதுக்கும் ஒரு தீர்வு கிடைச்சது. அதுதான் தேமோர் கரைசல். தேங்காய் பால், மோர் இரண்டையும் கலந்து தெளிச்சா இந்தப் பிரச்னை சரியாகிடும்னு சொன்னாங்க. அதுக்கு வாய்ப்பு இல்லன்னா வேப்பெண்ணெய் தெளிக்கச் சொன்னாங்க. நான் சோதனை முயற்சியா ரெண்டையும் யூஸ் பண்ணுனேன். வேப்பெண்ணெய்க்கு நல்ல ரிசல்ட் கிடைச்சது. தேமோர் கரைசலுக்கும் நல்ல ரிசல்ட் கிடைச்சதோட பூக்கள் உதிர்வதும் நின்னுப்போச்சு. ஆக, இது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் கணக்கு இருக்குன்னு தேமோர் கரைசலையே அதிகம் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன்.

வாட்டர் கேனில் வளரும் செடி
வாட்டர் கேனில் வளரும் செடி

தேமோர் கரைசல் தயாரிக்க ஒரு நல்ல தேங்காய் எடுத்து அதைத் துருவி, அரைச்சு பால் எடுத்துக்கணும். 400 மில்லி பால் கிடைத்தால் 100 மில்லி தண்ணீர் சேர்த்துக்கலாம். அதோட 500 மில்லி மோர் எடுத்துக்கலாம். தயிர்ல தண்ணியை ஊத்தி, மோர்னு எடுத்துக்கக் கூடாது. நல்லா புளிச்ச மோரா இருக்கணும். தேங்காய் பால், மோர் ரெண்டையும் சம அளவு எடுத்துப் பழைய பானையில ஊற்றி, துணியை வெச்சு வாய் பகுதியை மூடி, கட்டி வெச்சுடணும். பானையை வெயில்ல வைக்கக் கூடாது. நிழலான இடத்துலதான் வைக்கணும். 6 நாள் கழிச்சு, அதை எடுத்து ஓப்பன் பண்ணி அதுல இருக்க கரைசலை கலக்கி எடுத்துப் பயன்படுத்தலாம். அதுதான் தேமோர் கரைசல். இந்தக் கரைசலை நேரடியா தெளிக்கக் கூடாது.

500 மில்லி தண்ணியில 20 மில்லி தேமோர் கரைசல் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். நான் அவரைச் செடியில் இருக்க பூச்சிகளை `டிஷ்யூ' பேப்பர் மூலமாகத் தொடச்சிட்டு, அதுக்கப்புறம் தேமோர் கரைசல் அடிச்சேன். நல்ல ரிசல்ட் இருந்தது. இப்ப நான் தொடர்ந்து தேமோர் கரைசல் பயன்படுத்திட்டு வரேன்.

அவரைச்செடி
அவரைச்செடி

கத்திரிக்காய்ல என்கிட்ட மூன்று ரகங்கள் இருக்குது. அது நல்ல வளர்ச்சியில இருக்கு. எப்பவும் காய் இருந்துட்டே இருக்கும். தினமும் ஒரு செடியில இருந்து நாலஞ்சு காய் கண்டிப்பா கிடைக்கும். ஆரம்பத்துல கத்திரிச்செடியில காய் பிடிக்கலை. அதுல வேர் பக்கத்துல ஆணி ஊன்றி வைக்கச் சொன்னாங்க. நானும் ஊன்றி வெச்சேன். தொடர்ந்து தேமோர் கரைசலையும் பயன்படுத்துனேன். அதுக்குப் பிறகு நல்லா காய்க்க ஆரம்பிச்சது. அது ஆணியை வெச்சதுனாலயா? இல்லை தேமோர் கரைசல் தெளிச்சனாலயானு தெரியல. ஆனா, காய் காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. அதே போல தக்காளிச் செடியில இருக்குற மாவுப்பூச்சிக்கும் தேமோர் கரைசல் உதவியா இருக்குது.

கீரைகளைப் பொறுத்தவரைக்கும், நான் முதல்ல வெந்தயக்கீரை முயற்சி பண்ணுனேன். ஆனால், தண்ணீர் ஊற்றும்போது கீரை மடங்கிப் போயிடுது. அதனால அதை விட்டுட்டேன். இப்போ பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா இருக்கு. பாலக்கீரை ரொம்ப நல்ல பலன் கொடுக்குது. அதேபோல என்கிட்ட மூன்று வகையான வெண்டிக்காய் இருக்கு. அதுல ஒரு ரகம் சிவப்பு வெண்டி. அது அதிகமா காய்க்காது. ஆனா, நல்ல சுவையா இருக்கும். அற்புதமான சுவை.

கற்பூரவெற்றிலை
கற்பூரவெற்றிலை

என்னைப் பொறுத்தவரைக்கும் வீட்டுத்தோட்டம் ஒரு பள்ளிக்கூடம்னுதான் சொல்லுவேன். ஒவ்வொரு நாளும் அங்க புதுசு புதுசா கத்துக்கலாம். அது ஒரு மனதுக்கு மகிழ்ச்சியான அனுபவம். இப்ப என் தோட்டத்துல முருங்கை, முள்ளங்கி, மிளகாய், கத்திரி, தக்காளி, வெண்டை, கீரைகள்னு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைச்சிடுது. இதுனால காய்கறிக்கான செலவு ரொம்ப குறைஞ்சு போச்சு. அதே போல வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்க நினைக்குறவங்க அதிக செலவு செய்யாம, குறைந்த செலவு `வேஸ்ட் ரீசைக்கிளிங்' பொருள்களைப் பயன்படுத்தி தொடங்கலாம்'' என்றார்.

வரும் வெள்ளிக்கிழமை அடுத்த பகுதியில் இன்னும் பேசலாம்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு