மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு ஈமச்சடங்கு... நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

மழைக்குச் சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஈமச்சடங்குப் போராட்டம் நடத்தினர்.
நிவர் புயலின் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது. தொடர் மழை காரணமாக, செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால், விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.

இந்த நிலையில், ‘‘பயிர்கள் சேதமடைந்து இரண்டு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை அதிகாரிகள் பயிர் பாதிப்பு குறித்துக் கணக்கெடுக்க வரவில்லை. அதேநேரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 சதவிகித பாதிப்புதான் என்று தவறான புள்ளி விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்று வேளாண்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதிகாரிகளின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து செய்யாறை அடுத்துள்ள நாவல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு ஈமச்சடங்கு செய்தனர்.

பின்னர், ஊர்வலமாகச் சென்று நீர் நிலையோரம் 18-ம் நாள் காரியம் நடத்தி திதி கொடுத்தனர். தொடர்ந்து, ஓடை வழியாக பாய்ந்தோடிய தண்ணீரில் காகித கப்பலை விட்டனர். இதன் மூலம் வேளாண் அதிகாரிகளுக்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்த விவசாயிகள், ‘‘முறையாக ஆய்வு செய்து பாதிப்பு குறித்து அரசுக்குத் தெரிவிக்கவேண்டும். ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.