Published:Updated:

வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்த ஆளுங்கட்சி பிரமுகர்; கொட்டும் மழையில் போராடிய 1500 குடும்பங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொட்டும் மழையிலும் போராட்டம்
கொட்டும் மழையிலும் போராட்டம்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளை சிறையில் அடைக்க, அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஓரிரு நாள்கள் தொடர்ச்சியாக மழை பெய்தாலே, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவது, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நிகழும் அவலமாக உள்ளது. ஒருகாலத்தில் விவசாய நிலங்களாக இருந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வெளியேறக்கூடிய வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதுதான் இந்த அவலத்திற்கு முதன்மையான காரணம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே மழைநீர் வடிகாலை சில தனிநபர்கள் ஆக்கிரமித்ததால், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி 1500 குடும்பங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பில், இப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் மழையிலும் போராட்டம்
கொட்டும் மழையிலும் போராட்டம்
`இதுக்கு மேல என்னன்னு சொல்றது?' - மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை; வேதனையில் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில் மழைநீர் வடியும் வாய்க்காலை தடுத்து திமுக பிரமுகரின் ஆதரவுடன் இப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், சுவர் எழுப்பியிருப்பதால், இங்கு மழைநீர் ஆறு போல் தேங்கியிருப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து பேசிய இப்பகுதி மக்கள், ``ஆவூர் பகுதியில் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியாக `வண்டாரத்தான் கட்டளை' எனும் பகுதியிலுள்ள சுமார் 40 ஏக்கர் விளைநிலங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்றது. மேலும் அந்த வாய்க்காலே அப்பகுதியின் வடிகாலாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது, இப்பகுதியில் உள்ள திருமுருகன் என்பவர் திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசனின் ஆதரவுடன் வாய்க்காலை ஆக்கிரமித்து கான்கிரீட் சுவர் எழுப்பி உள்ளார். இதனால், இப்பகுதியில் மழை நீர் வடியாமல் குளம்போல தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்ற காந்திநகர் பகுதியிலும், ஆவூர் மெயின் ரோட்டிலும் தேங்கி நிற்கும் மழை நீரினால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வலங்கைமான் வட்டாட்சியர், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொட்டும் மழையிலும் போராட்டம்
கொட்டும் மழையிலும் போராட்டம்
தொடர் கனமழையால் அழுகிய இளம் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

இதனால்தான் இந்த கொட்டித்தீர்க்கும் மழையையும் பொருட்படுத்தாமல் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என ஆதங்கப்பட்டார்கள். இப்போராட்டத்தில் கட்சி, சாதி, மதம் கடந்து இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். ஆவூரில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு, உடனடியாக அதிரடியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளை சிறையில் அடைப்பதற்கு, அவசர சட்டத்தையும் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு