Published:Updated:

முல்லை பெரியாறு விவகாரம்: இந்த உண்மைகளை கேரள அரசியல்வாதிகள் உணர மறுப்பது ஏன்?

முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை, மத்திய அரசின் நிபுணர் குழுக்கள் பல முறை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும், கூடுதலாகக் கடலில் கலக்கும் நீரில் சிறு பகுதியைத்தான் தமிழகம் பயன்படுத்துவதாகவும் இப்பிரச்னையை கூர்ந்து கவனிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியதால், இங்கிருந்த விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இதனால் ஏராளமான மக்கள் உணவு பஞ்சத்தாலும் பட்டினியாலும் மடிந்தனர். அந்நிலையில்தான் ஆங்கிலேய பொறியாளர் பென்னிக் குயிக்கின் பெரும் அர்ப்பணிப்பால், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு (கேரளா) உட்பட்ட பகுதியில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. முல்லை பெரியாற்றில் இருந்து கடலில் கலக்கக்கூடிய உபரிநீர், முல்லை பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாசனம் அளிக்கக்கூடிய முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்படக் கலைஞர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, 137 அடி உயத்துக்கு மேல் தண்ணீர் தேக்க, அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில்தான் முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை, மத்திய அரசின் நிபுணர் குழுக்கள் பல முறை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும், கூடுதலாகக் கடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் பயன்படுத்துவதாகவும் இப்பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த கொந்தளிப்போடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் பாரதிச்செலவன், ``முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கினால், உடைப்பெடுத்து வெள்ளம் உண்டாகும் என கேரள அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி வருகிறார்கள். இது முற்றிலும் பொய்யானது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனே `முல்லை பெரியாறு அணையால் ஆபத்து இல்லை' எனத் தெரிவித்தார்.

மருத்துவர் பாரதிச்செல்வன்
மருத்துவர் பாரதிச்செல்வன்

ஆனால், அவரே முன்னுக்குப் பின் முரணாக, முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக கேரளாவில் புதிய அணை கட்டப்படும் என்கிறார். இது நயவஞ்சகமான பேச்சு. முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட்டு, புதிய அணை கட்டப்பட்டால், முழு தண்ணீரையும் அவர்கள்தான் சொந்தம் கொண்டாடுவார்கள். அதோடு அந்த அணையைத் திறந்து மூடும் அனைத்தும் அதிகாரமும் கேரள அரசிடம் இருக்கும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முல்லை பெரியாறு அணையின் மூலம் தமிழ்நாட்டுக்கு மிகவும் சொற்பமான நீர்தான் கிடைத்து வருகிறது. 7.66 டி.எம்.சி நீர்தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. இதைக் கூட தரமாட்டோம் எனச் சொல்வது, மனிதத்தன்மையற்ற பண்பாகும். இந்த அணையின் 104-வது அடி உயரத்தில்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரக்கூடிய குகையே உள்ளது. அதாவது 104 அடி வரை உள்ள தண்ணீர் தமிழ்நாட்டுக்குப் பயன்படாது. 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் 137 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மேல் தண்ணீர் தேக்கப்படுவது தவிர்க்கப்பட்டால். அந்தத் தண்ணீரை கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்குக் கொண்டு சென்று மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான், அங்குள்ளவர்களின் திட்டம்’’ எனத் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு: கேரள அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா?

முல்லை பெரியாறு அணை உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், ``முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி உயர்நிலைக்குழுக் கூடி அணையிலிருந்து எவ்வளவு அதிகப்பட்ச நீரை வெளியேற்ற முடியுமோ, அதை வெளியேற்றி, வைகை அணைக்குக் கொண்டு செல்லும்படி தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சில தனி நபர்கள் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஐயப்பாடு தெரிவித்து தொடுத்த வழக்கின் விளைவாகவே இவ்வாறு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலைமை உருவானது. சில ஆண்டுகளுக்கொருமுறை கேரள அரசு சார்பில் அல்லது அரசின் பின்னணியில் சிலர் இத்தகைய வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அணையின் உறுதித்தன்மை குறித்து கடந்த காலத்தில் ஒன்றிய அரசு அமைத்த 6 நிபுணர் குழுக்கள் அணை வலிமையாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு குழுவை உச்ச நீதிமன்றமே நியமித்தது. அந்தக் குழு, நிபுணர்குழு அளித்த ஆலோசனையை ஆராய்ந்து பார்த்தும் அணைக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டும், அணை வலிமையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. அதற்குப் பின்னர், ``பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம்” என 7.5.2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு தீர்ப்பளித்தது. கேரளத்தைச் சேர்ந்த நீதியரசர் கே.டி.தாமஸ் நடுநிலை தவறாமல் அளித்த இந்தத் தீர்ப்புக்காக கேரள அரசியல் கட்சிகள் அவருக்கு எதிரான அறிக்கைகள் வெளியிட்டன. ஆனாலும், மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க,

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

10 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு செலவழித்து அணையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. ஆனாலும், அங்குள்ள சிற்றணையை மராமத்து செய்ய கேரள அரசு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இப்போதும் வெள்ள அபாயத்தைச் சுட்டிக்காட்டி பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டுமென்று கூக்குரல் எழுப்புகிறது.

பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் குகை வழியின் அளவை அகலப்படுத்துவதற்கும், வைகை அணையின் உயரத்தை மேலும் சில அடிகள் உயர்த்துவதற்கும் கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் பெரு வெள்ளக் காலத்தில் வெள்ள நீரை விரைவாக வடிப்பதற்கு உதவியாக இருந்திருக்கும். எதையும் சிந்திக்காமலும், தொலைநோக்குப் பார்வையில்லாமலும் தன்னலத்துடன் மட்டுமே நடந்துகொள்ளும் கேரள அரசியல் கட்சிகளின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

பெரியாறு நதியின் மீது கேரள மாநிலம் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. அந்த ஆறு தமிழக எல்லைக்குள் 114 சதுர கி.மீ பரப்பளவுக்கு வந்து செல்வதால் அது இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதியாகும். எனவே, அதன்மீது தமிழகத்துக்கும் சம உரிமை உள்ளது. பெரியாற்றின் நீரில் கேரளத்தின் அனைத்துத் தேவைகளும் போக, பின்னர் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313 மில்லியன் கன மீட்டராகும். வெள்ளக் காலங்களில் இந்த அளவைப் போல் பல மடங்கு அதிகமான நீர் கடலில் சேர்கிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
``முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு தாரை வார்த்துவிட்டது!" - கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்

அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தால் நீரின் அளவு 217.10 மில்லியன் கன மீட்டராகும். வீணாகக் கடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெரியாற்றின் மூலம் தமிழகம் பயன்படுத்துகிறது. அதைக்கூட ஏற்கும் மனம் இல்லாமல் கேரளம் நடந்துகொள்கிறது. கேரளத்தில் உள்ள மொத்த ஆறுகளிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவில் ஒரு சிறு பகுதியை கிழக்கே திருப்பினால் தமிழகத்தில் பாசன வசதி பெருகும். இதன்மூலம் வேளாண்மை உற்பத்தி பலமடங்கு கூடும்.

கேரளத்துக்கு நாள்தோறும் தவறாமல் தானியங்கள், காய், கனி மற்றும் ஆடு, மாடு, கோழி, முட்டை போன்றவை தமிழகத்திலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தில் 20 சதவிகிதம் கேரளத்துக்கு அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் தமிழகத்துக்குத் தண்ணீர் தர கேரளத்தில் உள்ள கட்சிகள் திட்டமிட்டு மறுப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவு ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு