Published:Updated:

தொடர் கனமழை; அறுவடை செய்யாமல் நெற்கதிர்கள் முளைக்கும் அபாயம் - கவலையில் டெல்டா விவசாயிகள்!

நெற்கதிர்கள்
நெற்கதிர்கள்

டெல்டா பகுதிகளை பாதித்த நிவர் புயல், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் அப்பகுதியிலுள்ள சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின.

காவிரி கடைமடைப் பகுதிகளான டெல்டா பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்ய ஏதுவாக சாகுபடி செய்யப்பட்ட பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுநிலையாக வலுப்பெற்று தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கடந்த சில தினங்களாக நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இடைவிடாமல் கனமழை பெய்துவருவதால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா, தாளடிப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.

நீரில் மூழ்கிய பயிர்கள்
நீரில் மூழ்கிய பயிர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், வேதாரண்யம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், மழைநீர், காவிரிநீர் எனப் பாசனநீர் போதிய அளவில் கிடைத்ததாலும் சம்பாச் சாகுபடியில் விவசாயிகள் முழுமூச்சாக ஈடுபட்டனர்.

`புயலைவிட பெரிய பாதிப்பு!’ - தொடர்மழையால் கலங்கி நிற்கும் டெல்டா விவசாயிகள்

அண்மையில், டெல்டா பகுதிகளை பாதித்த நிவர் புயல், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் அப்பகுதியிலுள்ள சம்பாப் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. தொடர் மழையால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, பயிர்கள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. உரிய இழப்பீடு வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.

அதைத் தொடர்ந்து, வயல்களில் தண்ணீர் வடிந்ததும் பயிருக்கு உரம், பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் ஒரளவுக்குப் பயிர்களை மீண்டும் காப்பாற்றிவந்தனர். செப்டம்பர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்யும் அளவுக்குத் தயார்நிலையில் இருந்தன. இந்தநிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

மழை
மழை

நிவர், புரவி புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வடிகால் வாய்க்கால் முழுவதும் நீர் நிரம்பியிருப்பதால், தற்போது பெய்யும் கனமழையால் கதிர் வந்த பயிர்கள் வயலில் சாயத் தொடங்கியிருக்கின்றன. முற்றிய பயிர்கள் தண்ணீரில் முளைக்கத் தொடங்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. கதிர் முற்றாமல் இருக்கும் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தால் நெல்மணிகள் பதராக மாறிவிடும் என்பதால், விவசாயிகள் வேதனையடைந்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய மயிலாடுதுறை மாவட்டம் கற்கோயில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், ``டெல்டா மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழைக்கு ஏற்கெனவே 3.50 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசமாகின. இந்தநிலையில் மீண்டும் தொடர் கனமழையால் பால் பிடிக்கும் பருவம் மற்றும் 10 நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. கதிருடன் நெற்பயிர்கள் சாய்ந்ததால், அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகியிருக்கிறோம். இனி மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முளைத்துவிடுவதோடு, பலத்த சேதம் ஏற்படும்" என்றார்.

மழையால் சேதம்
மழையால் சேதம்

``25 ஆண்டுகளாக விவசாயப் பணிகள் மேற்கொண்டுவருகிறோம். இது போன்று இயற்கை இதுவரை எங்களைப் பழி வாங்கியதில்லை. இதேநிலை தொடர்ந்தால், நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாது. அறுவடை செய்தாலும், நெல்லில் ஈரப்பதம் இருக்கும். அதை வியாபாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தைத் திருநாள் கொண்டாடாமல் விவசாயிகள் அனைவரும் வயலில் சோகத்தில் மூழ்கியிருக்கிறோம். அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லையென்றால் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரிக்கும்" என்கிறார் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரணிதரன்.

ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் விவசாயிகள் நிவாரணம் கேட்ட நிலையில் தற்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) 20,000 ரூபாய் என்பது விவசாயிகள் செலவு செய்த அளவையும்விடக் குறைவு என்பதால், விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். மேலும், கணக்கெடுப்பு என்ற பெயரில் தாலுகாவாரியாக இழப்பீட்டுத் தொகை மாறுகிறது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

மழை
மழை

நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அறுவடை செய்து, அப்புறப்படுத்தி மீண்டும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள இரட்டிப்பு செலவாகும் என்பதால் அரசு போதிய அளவு நிவாரணமும், 100 சதவிகித காப்பீடும் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு