Published:Updated:

`₹50 இருந்த வைக்கோல் கட்டு இப்போ ₹350!' - தட்டுப்பாட்டால் தவிக்கும் மாடுகள்; வருத்தத்தில் விவசாயிகள்

வைக்கோல்
News
வைக்கோல்

``விவசாயிகள் ஏற்கெனவே சேமிச்சி வச்சிருந்த வைக்கோலும் மழையில நனைஞ்சி சேதமாயிடுச்சி. கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த வைக்கோலும், இப்ப பேஞ்ச மழையில பாதிச்சிடுச்சி. இந்த தட்டுப்பாட்டை ஒரு சிலர் குறுக்கு வழியில பயன்படுத்தி, ஒரு கட்டு 350 ரூபாய்க்கு மேல விக்கிறாங்க."

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் வைக்கோலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு கட்டு வைக்கோல் 50-80 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது இதன் விலை 350 ரூபாயை தாண்டியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். அதிக விலை கொடுத்தாலும் கூட, வைக்கோல் கிடைக்கவில்லை என்றும், இதனால் தங்களது மாடுகள் பசியில் வாடுவதாகவும், இறந்து போகக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும், தமிழக வேளாண்மைத்துறையும் கால்நடை துறையும் இதனை ஒரு சாதாரண பிரச்னையாக நினைத்து அலட்சியமாக இருந்துவிடக்கூடாது எனவும், வைக்கோல் தட்டுப்பாட்டை போக்குவதற்கும், வழக்கமான விலையில் வைக்கோல் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Straw (Representational Image)
Straw (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து நம்மிடம் பேசிய பரவாக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அழகிரி சிவசங்கரன், ``மன்னார்குடியை சுத்தியுள்ள பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, சுந்தரக்கோட்டை, கண்டிதம்பேட்டை, திருப்பாலக்குடி உள்ளிட்ட இன்னும் பல கிராமங்கள்ல பெரும்பாலான விவசாயிகள் மாடுகள் வளர்க்குறாங்க. மாடுகளுக்கு வைக்கோல் ரொம்பவே முக்கியமான தீவனம். பசுந்தீவனமும், புண்ணாக்கு மாதிரியான அடர் தீவனம் மட்டும் கொடுத்தா போதாது. அடர் தீவனமான வைக்கோல் கொடுத்தால்தான் மாடுகளுக்கு சம நிகர் சத்துக்கள் கிடைக்கும். இதைதான் மாடுகள் விரும்பி சாப்பிடும்.

இதை சாப்பிட்டாதான், பசி அடங்கும். வைக்கோல் கொடுக்கலைனா, மாடுகள் துவண்டுப் போயிடும். குறிப்பா மழை, குளிர் காலங்கள்ல உடல் வெப்பநிலையை அதிகப்படுத்த, வைக்கோல் ரொம்பவே அவசியம். ஆனா கடந்த பதினஞ்சி நாளா, இந்த பகுதிகள்ல வைக்கோலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் ரொம்பவே மன உளைச்சல்ல இருக்கோம். இதே நிலைமை நீடிச்சிதுனா, மாடுகளை காப்பாத்துறதே கேள்விக்குறியாகிடும்.

நான் ஒரு உம்பளாச்சேரி மாடு வளர்க்குறேன். இது இப்ப சினையா இருக்கு. சினை மாட்டுக்கு கண்டிப்பா வைக்கோல் கொடுத்தே ஆகணும், என்ன செய்றதுனே தெரியலை, நானும் நிறைய விவசாயிகள்கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். யாருகிட்டயுமே கிடைக்கலை. என்னை மாதிரிதான் பல விவசாயிகள் தவிச்சிக் கிடக்குறாங்க. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்ல உள்ள 50 மாடுகள், வைக்கோல் கிடைக்காமல் பரிதாப நிலையில இருக்கு. மன்னார்குடி பகுதியில இந்தளவுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட மழைதான் முக்கிய காரணம். குறுவை அறுவடை சமயத்துல மழை பேஞ்சதுனால வைக்கோல் நனைஞ்சி வீணாயிடுச்சி.

அழகிரி சிவசங்கரன்
அழகிரி சிவசங்கரன்

விவசாயிகள் ஏற்கெனவே சேமிச்சி வச்சிருந்த வைக்கோலும் மழையில நனைஞ்சி சேதமாயிடுச்சி. கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த வைக்கோலும், இப்ப பேஞ்ச மழையில பாதிச்சிடுச்சி. இந்த தட்டுப்பாட்டை ஒரு சிலர் குறுக்கு வழியில பயன்படுத்தி, ஒரு கட்டு 350 ரூபாய்க்கு மேல விக்கிறாங்க. ஆனா என்ன கொடுமைனா, அதுவும்கூட கிடைக்காமல் என்ன மாதிரி பல விவசாயிகள் திண்டாடிக்கிட்டு இருக்கோம். வைக்கோல் தட்டுப்பாட்டைப் போக்க, தமிழக வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள்ல இறங்கணும். வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள்ல உள்ள விவசாயிகள்கிட்ட இருந்து, வைக்கோல் கொள்முதல் செஞ்சி, எங்க பகுதியில விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கணும்’’ என வலியுறுத்தினார்.

மன்னார்குடி பகுதியில் மட்டுமல்லாமல், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்பட திருவாரூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக வைக்கோல் தட்டுப்பாடு நிலவுகிறது. தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் வைக்கோல் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தமிழக ஆட்சியாளர்கள் விரைவான நடவடிக்கைகளில் இறங்குவது மிகவும் அவசியம்.