Published:Updated:

மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.23 லட்சம் விவசாயிகள்; நாளையேனும் அறிவிப்பு வருமா?

விவசாய மின் இணைப்பு
விவசாய மின் இணைப்பு ( M.Aravind )

``விவசாய மின் இணைப்பை முதன்மையான கோரிக்கையாக முன்வைத்தோம். வேளாண் பட்ஜெட்டில் நிச்சயமாக, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் நம்பினோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்காக, பதிவு செய்து 4.23 லட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததிருந்தது. இதனால் வேளாண் பட்ஜெட்டில் நிச்சயமாக விவசாய மின் இணைப்பு ஒதுக்கீடுகள் குறித்து மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. மின்சாரத்துறை மானியக் கோரிக்கையிலாவது , இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

விவசாயி
விவசாயி
தமிழக வேளாண் பட்ஜெட்: `பசுமை விகடன் சொன்னதும் அரசு செய்ததும்!' - நினைவுகூரும் விவசாயிகள்

இது தொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான், விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாய மின் இணைப்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலான விவசாயிகள் திமுக-வுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். கடந்த ஜூலை மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்கு பதிவு செய்து 4.23 லட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப் போவதாக உறுதியான தகவல் வெளியாக தொடங்கியதுமே, விவசாய மின் இணைப்பை முதன்மையான கோரிக்கையாக முன் வைத்தோம். வேளாண் பட்ஜெட்டில் நிச்சயமாக, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் நம்பினோம். ஆனால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனத்திற்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. காவிரி நீர் மட்டுமல்ல, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளின் தண்ணீரும் கூட, இங்குள்ள விவசாயிகளுக்கு சரிவர கிடைப்பதில்லை. நிலத்தடி நீரைதான் பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், மின் இணைப்புக்காக காத்துக்கிடந்து பயனற்று இருந்ததால், காலப்போக்கில் அவை தூர்ந்துப் போய்விட்டன. மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்க 2 லட்சம் ரூபாய் செலவாகும். டீசல் மோட்டார் பயன்படுத்தும் விவசாயிகளோ, டீசலுக்கு செலவு செய்தே கடனாளி ஆகிவிட்டார்கள்.

தக்கல் முறையில் 5 ஹெச்.பி-க்கு ரூ.2.5 லட்சம், 7.5 ஹெச்.பி-க்கு ரூ.2.75 லட்சம், 10 ஹெச்.பி-க்கு ரூ.3 லட்சம் என பணம் செலுத்திவிட்டு பல விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக காத்திருக்கிறார்கள். தக்கல் முறையில் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் நமது ஆட்சியாளர்கள் இதைப் பற்றி கவலையே படுவதில்லை. தெலுங்கானா மாநிலம், சில ஆண்டுகளுக்கு முன்புதான், ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவானது.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

அங்கு குறுகிய காலத்திற்குள்ளேயே 36 லட்சம் விவசாய விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கும் கட்டணம் கிடையாது. மின்சாரத்திற்கும் கட்டணம் கிடையாது. ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். 30 நாள்களுக்குள் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அங்கு தக்கல் முறையே கிடையாது. ஏழை விவசாயி, பணக்கார விவசாயி என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக விவசாய மின் இணைப்பு கிடைத்துவிடுகிறது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும்கூட, உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வேளாண் பட்ஜெட்டில், விவசாய மின் இணைப்பு வழங்குவது குறித்து, திமுக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாதது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுக அழுத்தமான கண்டனங்களை பதிவு செய்யவே இல்லை, தன்னை முச்சுக்கு முண்ணூறு முறை ஒரு விவசாயி என சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு 50,000 விவசாய இணைப்பு வழங்கப்பட்டது, ஆனால் தற்போதைய திமுக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில், விவசாய மின் இணைப்பு ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்று சொல்லியாவது சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலாவது, எடப்பாடி பழனிசாமி, தன் கடமையைச் செய்திருக்க வேண்டும்.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
பெண் விவசாயிகளுக்கு மானியம், புது கால்நடை மருத்துவமனை; வேளாண் மானிய கோரிக்கை அறிவிப்புகளின் ஹைலைட்ஸ்

வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள மின்சாரத்துறை மானியக் கோரிக்கையில், இந்த ஆண்டு எத்தனை லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நிச்சயம் அறிவிப்பு வெளியிட்டே ஆக வேண்டும். இது திமுக அரசின் தலையாய கடமை. எந்த ஒரு சாக்குப்போக்கும் சொல்லி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து காத்திருக்கக்கூடிய 4.23 லட்சம் விவசாயிகளுக்கும் முழுமையாக இந்த ஆண்டு மின் இணைப்பு வழங்க வாய்ப்பில்லை என்ற நிதர்சனத்தை, நாங்கள் உணர்கிறோம். ஆனால் அதேசமயம் இந்த ஆண்டு கணிசமான எண்ணிக்கையில், இயன்ற வரை அதிக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக மின் இணைப்பு வழங்கவிட வேண்டும். இது தமிழக விவசாயிகளின் மிகவும் நியாயமான கோரிக்கை. மின் இணைப்பு வழங்குவதில், விவசாயிகளாக உள்ள விதவைகள், முன்னாள் படை வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். தமிழ்நாட்டில் 3,60,000 ஏக்கரில் குத்தகை விவசாயம் நடைபெறுகிறது. குத்தகை சாகுபடி செய்து வரும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். இலவச மின்சாரம் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என நிறைய விவசாயிகள் பழங்கள், மலர்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பைப் பெற்றதால், மாதந்தோறும் ரூ. 3000 முதல் ரூ. 5000 வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். மற்ற விவசாயிகளைப் போல அவர்களும் உணவுப்பொருள்கள்தான் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என சொல்வது நியாயமில்லை. தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க தற்போதைய திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார். தமிழக அரசு தங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு