Published:Updated:

முல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என கேரளத்தில் நடந்துவரும்  விஷமப் பிரசாரம் தொடர்ந்தால் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் சாலையை மறிப்போம் என ஜந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோய், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் உள்ளிட்ட பலர், முல்லைப்பெரியாறு அணை உடையப்போவதாகவும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கபோவதாகவும் விடியோ பதிவுகளை யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். கேரள திரைத்துறையினரும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பேசி வருகின்றனர்.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாய சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பொன்காசி கண்ணன், அன்வர் பாலசிங்கம் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள், ``கடந்த வாரம் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நாட்டில் முதல் ஆளாக தமிழக முதல்வர்தான் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். தமிழகம் இப்படி தாயுள்ளத்தோடு நடந்து கொள்ளும்போது கேரளாவில் தமிழகத்திற்கு எதிரான விஷமப் பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கேரள அரசின் புதிய நாடகமா?

கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கேரள வழக்கறிஞர் ரசூல் ஜோய் `கேரளா சேவ்' என்ற அமைப்பை உருவாக்கி, கேரள மாநிலம் முழுவதும் சென்று பெரியாறு அணை உடையப் போகிறது என்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகிறார். அதில் பெரியாறு அணை உடையும், தொடுபுழா நகரம் கண்மூடித் திறப்பதற்குள் காணாமல் போகும், ஆயிரக்கணக்கானோர் இறப்பார்கள் என்று பொய்ச் செய்தி பரப்பி வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை வழக்கில் இரண்டு முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் அணை குறித்து சமூக வலைதளங்களில் விஷமத்தனத்தை பரப்பி இருமாநில மக்களுக்கிடையே பகையை மூட்டி விடும் செயலை செய்து வரும் ரசூல் ஜோய் மற்றும் ஜோசப் ஆகியோர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு தமிழகத்திடம் இருக்கும் போது அணையின் பாதுகாப்பும் நம்மிடமே இருக்க வேண்டும். அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்துகிறோம்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்"- பினராயி விஜயன்

கேரளம் செல்லும் வழித்தடத்தை மறிப்போம்

அணையை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கேரள அரசு தங்கள் காவல் துறையை அங்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர். அணையின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தேனி மாவட்ட ஆட்சியர் மாதம் ஒரு முறை அணைக்குச் சென்று வரவேண்டும். முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா மீண்டும் பிரச்னை செய்தால், இவர்களின் விஷமப் பிரசாரங்களை நிறுத்தப்படாவிட்டால், 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1-ம் தேதி தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் மார்த்தாண்டம், செங்கோட்டை, குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு, நீலகிரி சாலை, வாளையார் சோதனை சாவடி என ஏழு வழித்தடங்களையும் ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கம் முற்றுகையிடும். இதற்காக தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் விவசாய சங்கங்களையும் சந்திக்க உள்ளோம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு