Published:Updated:

பயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூரைச் சேர்ந்த ராஜா சிதம்பரம், தஞ்சையைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் இடம்பெற்ற விவசாயிகளில் பெரும்பாலானோர் இயற்கை விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள், அவருக்கு நினைவுப் பரிசாக கறுப்புக்கவுனி, கருங்குருவை, சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா நெல்லில் அலங்கரித்துச் செய்யப்பட்ட பாரம்பர்ய நெற்கதிர் கொத்து, பனம்பழத்தில் செதுக்கப்பட்ட நம்மாழ்வாரின் உருவம், 71 ஆண்டுகள் வயதுடைய தென்னை மரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தென்னங்கன்று ஆகியவற்றை வழங்கினார்கள். இது தமிழக முதவர் ஸ்டாலினை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விவசாயிகளுடன் முதல்வர்
விவசாயிகளுடன் முதல்வர்
பெண் விவசாயிகளுக்கு மானியம், புது கால்நடை மருத்துவமனை; வேளாண் மானிய கோரிக்கை அறிவிப்புகளின் ஹைலைட்ஸ்

தமிழகத்தில் முதல்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ததற்காகவும், ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர். கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 விவசாயிகள் நேரில் சந்தித்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள். பெரம்பலூரைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராஜா சிதம்பரம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் இடம்பெற்ற விவசாயிகளில் பெரும்பாலானோர் இயற்கை விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``தமிழகத்தில் சுமார் 4.23 லட்சம் உழவர்கள் வேளாண்மைக்குப் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்காக 2003-ம் ஆண்டிலிருந்து முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். மின்சாரத்துறை மானியக்கோரிக்கைக்கு சில தினங்களுக்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பசுமை விகடன் இணையத்தில் இது தொடர்பாக விரிவான கட்டுரை வெளியிடப்பட்டு, அது அரசின் கவனத்துக்குச் சென்றது.

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மூலமாகவும் இதை வலியுறுத்தினோம். இந்நிலையில்தான், நிகழாண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தமிழக விவசாயிகள் வரலாற்றில், ஒரே அறிவிப்பில் ஒரு லட்சம் விவசாய இணைப்புகள் வழங்கப்படுவது இதுதான் முதல்முறை. இதை வரலாற்று சாதனையாகவே பார்க்கிறோம். இதுமட்டுமல்ல... இதற்கு முன்பாக, தமிழக வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோடு, இதை டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் சிறப்பு மையம் அமைத்திட அறிவிப்பு செய்தார். விவசாயிகள் நலனில் அக்கறையோடு செயல்படும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அதோடு சில முக்கியமான கோரிக்கைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016-17-ம் ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாகக் குறுகிய கால பயிர்க்கடன்கள், மத்தியகால மறுமாற்று கடன்களாக மாற்றி கூட்டுறவுத்துறையால் அறிவிக்கப்பட்டு சுமார் ரூ.400 கோடி இதுவரை தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளது. பாரபட்சமின்றி அதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக வழங்கவுள்ள வேளாண் மின் இணைப்புகள் ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர்கள், மலைவாழ் உழவர்கள், மகளிர் உழவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், முன்னாள் படை வீரர்கள், குத்தகை சாகுபடி உழவர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு 5,000 மின் இணைப்புகள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழாண்டிலும் உழவர்கள் நலன் கருதி சம்பா சிறப்புத்தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, அத்திட்டத்தை தஞ்சையில் தொடங்கிட முதல்வர் வர வேண்டும். பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித்திட்டத்தில் நடைப்பெற்ற பல நூறுகோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

விவசாயிகளுடன் முதல்வர்
விவசாயிகளுடன் முதல்வர்
`ஒரே அறிவிப்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்; இதுதான் முதல் முறை!' - நெகிழும் விவசாயிகள்

கரும்பு உழவர்கள் நலன்கருதி முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தி, நெல் கொள்முதலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துகளை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பாடங்களில் இணைக்க வேண்டும். நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் காவிரியின் கல்லணைக் கரையில் நம்மாழ்வார் நினைவு அருங்காட்சியகம் மற்றும் இயற்கை வேளாண் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் சிறு குறு விவசாயிகளில் பலர், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி, மலர்கள், பழங்கள் சாகுபடி செய்வதற்காக, 12,000 மின் இணைப்புகளைப் பெற்று பயிர்சாகுபடி செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து மின் கட்டணம் ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 20,000 /-வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கும் வேளாண் மின்மானியத்தின் கீழ் கட்டணமில்லா மின்சாரம் வழங்கி, தாங்கள் மேலும் ஒரு புதிய வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்றோம். மேலும் சில கோரிக்கைகளையும் முன் வைத்தோம். கண்டிப்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் பலனாக, விவசாயிகளுக்கு பல நன்மைகள் பயக்கும் என நம்புகிறேன்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு