Published:Updated:

மேக்கேதாட்டூ விவகாரம்: தமிழகத்துக்கு ஆதரவு; கேரள முதலமைச்சருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி!

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

``காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு எதிராக சட்ட விரோதமாக மேக்கேதாட்டூ அணை கட்டுவதை கேரளா அரசு அனுமதிக்காது என்று உறுதியோடு தெரிவித்துள்ளனர். இதனால் மேக்கேதாட்டூ பிரச்னையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ மலைப்பகுதியில், கர்நாடக அரசு சட்டவிரோதமாக அணை கட்ட முயன்று வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என இங்குள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் எதிரிப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்தான், தற்போது நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேக்கேதாட்டூ அணைக்கு எதிராக கேரள அரசு குரல் கொடுத்துள்ளது. இதற்கு தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டூ அணை
மேக்கேதாட்டூ அணை
மேக்கேதாட்டூ: பினராயி விஜயனை சந்தித்து ஆதரவு கேட்ட தமிழக விவசாயிகள்; அவரின் பதில் என்ன?

இது குறித்து பேசிய பி.ஆ.பாண்டியன், ``கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக மேக்கேதாட்டூ அணை கட்ட முயல்வதைத் தடுத்து நிறுத்த, தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆதரவளித்திட வேண்டும் எனவும், கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரித்திட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கடந்த 30-ம் தேதி கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்ட அவர் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, ஆணையக் கூட்டத்தில் கேரள அரசு சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு எதிராக சட்ட விரோதமாக மேக்கேதாட்டூ அணை கட்டுவதை கேரளா அரசு அனுமதிக்காது என்று உறுதியோடு தெரிவித்துள்ளனர். இதனால் மேக்கேதாட்டூ பிரச்னையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத் தமிழக அரசு நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முன் வர வேண்டும்.

எங்கள் கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராய் விஜயன் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து தமிழக - கேரள நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முன் வர வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டா குறுவை சாகுபடி தற்போது கதிர் வந்துகொண்டிருக்கிற நிலையில் விளைநிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து வெடித்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பணியையும் தொடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், சம்பா சாகுபடியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கு தண்ணீரை கர்நாடகாவிடம் பெற்று தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விகடன் செய்தி : மேக்கேதாட்டூ விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

கர்நாடக, தமிழக பாசனப் பகுதிகளையும், அணைகளையும் ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட்டு உரிய தண்ணீரை பெற்றுத் தருவதற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த குறுவை, சம்பா அழிந்து போகும் பேராபத்து ஏற்படும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு