அரசியல்
Published:Updated:

இது நல்ல முன்னேற்றம்!

இது நல்ல முன்னேற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது நல்ல முன்னேற்றம்!

அரசாணையில், `இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆணையத்துக்குப் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கான வல்லுநர்குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயத்தின் இதயம் காவிரி டெல்டா. இந்தப் பகுதியைக் குறிவைத்து ஷெல் கேஸ், மீத்தேன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என அறிவித்து, சட்டபூர்வமான பாதுகாப்பை இப்பகுதிக்கு வழங்க வேண்டும் என மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவந்தார்கள். இந்நிலையில் பிப்ரவரி 9-ம் தேதி, காவிரி டெல்டாவை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இச்செய்தியால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தபோதும், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், அவர்களிடம் அதிருப்தியும் இருந்துவந்தது.

இந்நிலையில், ‘காவிரி டெல்டாவில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது குறித்து 19.8.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘காவிரி காப்பாளரே... கதைதானா எல்லாம்?’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

பாரதிச்செல்வன் - வெ.ஜீவக்குமார்
பாரதிச்செல்வன் - வெ.ஜீவக்குமார்

இது குறித்து, நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகரான மருத்துவர் பாரதிச்செல்வன், ‘‘இது நல்ல முன்னேற்றம். அரசாணையில், `இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆணையத்துக்குப் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கான வல்லுநர்குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்துவிதமான வழிமுறைகளையும் இந்தக் குழு வழங்கும்’ என்பவை உள்ளிட்ட பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ‘எண்ணெய்-எரிவாயு தொழில்கள், ரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு இங்கு அனுமதியில்லை’ எனச் சட்ட முன்வடிவில் சொல்லப்பட்டிருந்தது. அதேநேரத்தில், ‘எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த, மக்களின் கருத்துக் கேட்பும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தேவையில்லை’ எனச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (இ.ஐ.ஏ 2020) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆபத்திலிருந்து டெல்டா பகுதியை வேளாண் மண்டலச் சட்டம் பாதுகாக்குமா எனத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

இது நல்ல முன்னேற்றம்!

வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் தற்போது உயிர்பெற்றுள்ளது. காவிரி டெல்டாவை, பசுமை மண்டலமாகப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தப் பகுதிகளில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிப்பதும் மிக மிக அவசியம். இது குறித்துப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக விவசாயத்தின் இதயம் காக்கப்பட வேண்டும்!