பாரம்பர்ய நெல் ரகங்களில் அதிக மருத்துவக் குணங்கள் உண்டு. காலச் சூழலில் வேகமாகப் பயிரிடும் முறைக்கு வேளாண் உற்பத்தி மாறிய போதும், பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்து விளைவித்து மக்களுக்கு வழங்கி வரும் விவசாயி களும் உள்ளனர். அவர்களைக் கௌரவிக்கும் வகையில், பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளுக்கு `பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பர்ய நெல் பாதுகாவலர் விருது’ தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதும் பரிசுத் தொகையும் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கு முதலமைச்சரால் தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.
இந்த விருதுக்கான முதலிடத்தைப் பிடித்தவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி. இவர் கறுப்புக் கவுனி ரகம் சாகுபடி செய்து, ஹெக்டேருக்கு 10,672.5 கிலோ அளவில் மகசூல் ஈட்டியுள்ளார். இவருக்கு விருதுடன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னு புதியவனுக்கு இரண்டாம் பரிசாக விருதுடன், பரிசுத்தொகை ரூ.75,000 ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவர் வாசனை சீரக சம்பா ரகம் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,200 கிலோ மகசூல் கண்டுள்ளார்.

மூன்றாவதாகத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிதேவிக்கு விருதுடன், 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவர் ஆத்தூர் கிச்சிலி சம்பா சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,024.875 கிலோ மகசூல் ஈட்டியுள்ளார்.