Election bannerElection banner
Published:Updated:

`இந்திய விவசாய சங்கங்களுக்கு முன்னோடி இவர்தான்!' - தமிழக அரசு கௌரவிக்கும் மணலி கந்தசாமி யார்?

மணலி கந்தசாமி
மணலி கந்தசாமி

இப்போது போல் முன்பெல்லாம், அரசியல் கட்சிகளில் விவசாய பிரிவுகள் கிடையாது. இந்தியாவில் முதல்முறையாக, திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தென்பரை கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்.

பொதுவுடமைப் போராளி எனப் போற்றப்படும் மறைந்த மணலி கந்தசாமிக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 1960-70-ம் ஆண்டுகளில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் இவர் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கக்கூடியவை. விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாலர்களுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த இவர் எடுத்த முயற்சிகள் மகத்தானது.

Chief Minister Edapadi palanisamy
Chief Minister Edapadi palanisamy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மணலி கந்தசாமி. இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள மணலி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சிதம்பர தேவர் புனிதவதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். பிற்காலத்தில் தமிழகம் அறிந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவராகப் புகழ் பெற்று விளங்கினார்.

பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக, படிப்பை உதறித்தள்ளுமளவுக்கு தீவிரமாக செயல்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் ஈடுபாடு காரணமாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன்பின் கம்யூனிஸ்ட் கொள்கையின் தாக்கத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் விடியலுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக, விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக அளப்பரிய தியாகங்களைச் செய்தவர். ஒரு சில நிலக்கிழார்கள், தங்களது சுயநலனுக்காக, விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்குமிடையே பகைமையை உருவாக்கியிருந்தார்கள். விவசாய தொழிலாளர்களின் மீது கொடுமையான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிலக்கிழார்களின் உத்தரவுகளை நிறைவேற்றத் தவறும் கூலித்தொழிலாளர்கள் மீது சாணிப்பால் தெளித்து சவுக்கடி கொடுக்கும் தண்டனை அப்போது நடைமுறையில் இருந்தது. அதற்கு எதிரான போராட்டங்களை நடத்தி, அதை முறியடித்தவர்களில் மணலி கந்தசாமி மிக முக்கியமானவர். இப்போது போல் முன்பெல்லாம், அரசியல் கட்சிகளில் விவசாய பிரிவுகள் கிடையாது. அப்போது நிலக்கிழார்களின் கைபாவையாகத்தான் விவசாய சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் முதல்முறையாக, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தென்பரை கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்.

விவசாய நிலம்
விவசாய நிலம்

விவசாயிகளுக்கும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், இவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் இதை உருவாக்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்த போது, மணலி கந்தசாமி தலைமறைவு போராளியாக இருந்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினார். இவரை கண்டுபிடித்து தகவல் சொன்னால் 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இவருடைய தந்தை இறந்தபோது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருந்தார் மணலி கந்தசாமி. அப்போது அவர், தன் அம்மாவுக்கு எழுதிய கடிதம், துயரம் நிறைந்ததாக மட்டுமல்லாமல், இலக்கிய நயம் மிக்கதாக அமைந்தது. தலைமறைவு வாழ்க்கையின்போது, இவரது குடும்பம் முழுவதும் கடும் அடக்குமுறைக்கு உள்ளானது. அவரது வீடும் காவல் துறையினரால் நிரந்தரமாக முற்றுகைக்குள்ளானது.

விவசாயிகளுக்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாக இவர் முன்னெடுத்ததால் இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டு, அது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும் பதவி வகித்தார். இக்கட்சியின் நிர்வாகிகளோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், தனியாகப் பிரிந்து சென்று, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயக்கத்தைத் தொடங்கினார்.

மணலி ஊராட்சி
மணலி ஊராட்சி

இவரது முயற்சியால், முதல்முறையாகத் திருத்துறைப்பூண்டியில், அப்போதைய தி.மு.க அரசு ஏழை எளிய விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. தமிழ்நாட்டுக்கே உரிய வீரவிளையாட்டுகள், மருத்துவம், இசை, நாட்டியம், சிற்பம், கட்டடக்கலை) ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். சித்தமருத்துவத்தில் சிறந்த புலமை பெற்றிருந்தார். தான் நோய்வாய்ப்பட்டபோது அதில் நம்பிக்கை வைத்து அந்த வழி மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றார். ஏழை எளிய மற்றும் பட்டியலின மக்களின் உரிமைக்காக அயராது உழைத்த மணலி கந்தசாமி, 1977-ம் ஆண்டு மறைந்தார். இவரது புகழைப் போற்றும் வகையிலும் இவரது தியாகத்தையும் வீரம் செறிந்த வாழ்க்கையையும் எதிர்கால தலைமுறையினருக்கு நினைவுகூர்வதற்கும் இவருக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபம் பெருந்துணை ஆற்றும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு