கிராமப்புற மக்களில் பெரும்பாலானவர்கள் முறையாக கல்வி கற்கவில்லை என்றாலும், சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பல புதுமையான தொழில்நுட்பங்களை குறைந்த செலவிலேயே உருவாக்கி வருகின்றனர். கல்வி மற்றும் பணத் தட்டுப்பாடு போன்ற பல தடைகள் இருந்தாலும், சமுகத்தின் நலனுக்காக இவர்கள் கண்டுபிடித்த பல உள்நாட்டு கண்டுபிடிப்புகள் பெரும் உதவியாக உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர்களின் இந்தப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் `ஊரக கண்டுபிடிப்பாளர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கிராமப்புற கண்டுபிடிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து பத்து அறிவியல் ஆசிரியர்களை தேர்வு செய்து, பொதுப்பிரிவைச் சேர்ந்த 5 ஆசிரியர்களுக்கும், தமிழ்வழிக் கல்விப் பிரிவில் 5 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மாணவர்களை சமுக முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு `அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கி கௌரவிப்பதோடு இந்த பத்து ஆசிரியர்களுக்கும் 25,000 ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த இரண்டு விருதுகள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு இளம் விஞ்ஞானிகள் விருது, தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிகள் விருது, அறிவியலுக்கான தமிழ்நாடு வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற விருதுகளை வழங்கி வருகிறது, அறிவியல் நகரம் (science city). இது தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், பிரபலப்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விதிகளை குறித்து தெரிந்து கொள்ள www.sciencecitychennai.in என்ற இணையதள முகப்பு பக்கத்தில், விருதுகள் என்ற பிரிவின் கீழ் பார்க்கலாம். விண்ணப்பங்கள் சென்றைவதற்கான கடைசி நாள் மார்ச் 7-ம் தேதி, மாலை 5 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.