Published:Updated:

கொரோனா தடுப்பு மருந்தில் மஞ்சள்? விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்... மஞ்சள் சாகுபடி கிடுகிடு உயர்வு!

மஞ்சள்
மஞ்சள்

"கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மஞ்சள் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுது. மஞ்சள்ல உள்ள குர்குமின் அதற்கு பயன்படுத்தப்படுது. இதுல பிரவிபா என்ற ரகத்துலதான் குர்குமின் அளவு அதிகம்."

மஞ்சள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை கடும் சரிவைச் சந்தித்து வந்ததால், இப்பகுதி மஞ்சள் விவசாயிகள் மிகுந்த விரக்தியில் இருந்து வந்தார்கள். இந்நிலையில்தான் தற்போது மஞ்சள் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியிருப்பது இவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய விலை உயர்வுக்கு என்ன காரணம். மஞ்சள் சாகுபடியில் நீண்ட அனுபவம் உள்ள விவசாயிகளிடம் இதுகுறித்து பேசினோம். மஞ்சள் விலை உயர்வுக்கு, கொரோனா பிரச்னை ஒரு முக்கிய காரணம் என்ற ஓர் ஆச்சர்யமான தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சள் சாகுபடி
மஞ்சள் சாகுபடி

ஈரோடு மாவட்டம் வேட சின்னானூரைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி ராமமூர்த்தியிடம் இதுகுறித்து பேசியபோது, ``ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியைத்தான் முதன்மைப் பயிராக நம்பியிருந்தாங்க. இதனால்தான் இதற்கு மஞ்சள் நகரம்னு அழைக்கப்படுது. கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகள்லயும் மஞ்சள் சாகுபடி நடந்துக்கிட்டு இருக்கு. இங்க உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் இந்தியாவுல பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்ததோடு மட்டுமல்லாமல், கம்போடியா, பர்மா, வியட்நாம், மெக்ஸிகோ, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் மஞ்சள் கொள்முதல் விலை படிபடியா உயர்ந்து, 2011-ம் வருஷம் ஒரு குவிண்டால் 18,000-த்தை எட்டியது. ஆனால், அதுக்குப் பிறகு விலை சரிய ஆரம்பிச்சது. கடந்த பத்தாண்டுகளாக, 6,000 - 7,000 ரூபாய்க்குதான் விலை போயிக்கிட்டு இருந்துச்சு. இதுக்கு முக்கிய காரணம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள்ல மஞ்சள் உற்பத்தி அபரிதமாக அதிகரிச்சிடுச்சு.

ஆற்றுப்பாசனமோ, ஆழ்த்துளைக் கிணறு வசதி இல்லாத விவசாயிகளுமே கூட, மானாவாரியில மஞ்சள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதனால் மஞ்சள் வரத்து அதிகமானதுனால, விலை வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு குவிண்டாலுக்கு 15,000 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சாதான், விவசாயிகளுக்கு உழைப்புக்கேத்த லாபம் கிடைக்கும். விவசாய வேலையாட்கள் சம்பளம், இடுபொருள்கள் விலை உயர்ந்ததுனால விவசாயிகளால சமாளிக்க முடியலை. ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகள் நீண்டகாலமா மஞ்சள் பயிர் பண்ணிக்கிட்டு இருந்த விவசாயிகள்ல பலர், இதைக் கைவிட்டு, வேறு பயிருக்கு மாறிட்டாங்க. இதனால் மஞ்சள் உற்பத்தி கணிசமான அளவு குறைஞ்சிப் போயிடுசக்சு. கொரோனாவால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டதுனால, மஞ்சளுக்குத் தட்டுப்பாடு அதிமானது.

மஞ்சள்
மஞ்சள்

குறிப்பாக, கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மஞ்சள் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துறாங்க. மஞ்சள்ல உள்ள குர்குமின் அதற்குப் பயன்படுத்தப்படுது. மஞ்சள்ல 15 வகைகள் இருக்கு. இதுல பிரவிபா என்ற ரகத்துலதான் குர்குமின் அளவு அதிகம். இந்த ரகத்துல 6.8 சதவிகிதம் குர்குமின் இருக்கு. இந்த மஞ்சள்தான் அதிகமா சாகுபடி செய்யப்படுது. கொரோனா பிரச்னை ஆரம்பிச்ச பிறகு, உலகளவுல மஞ்சளுக்கான தேவை பல மடங்கு அதிமாகியிருக்கு. ஆனால், அதுக்கேத்த உற்பத்தி இல்லாததால, பற்றாக்குறை நிலவுது. மகாராஷ்டிரா மஞ்சள் மார்க்கெட்ல ஒரு குவிண்டால் 13,500 ரூபாய்க்கு விலைப் போயிக்கிட்டு இருக்கு. ஈரோடு மார்க்கெட்டைப் பொறுத்தவரைக்கும் இப்ப 9,000 ரூபாய்க்கு விலை போயிக்கிட்டு இருக்கு. இன்னும் படிப்படியா விலை அதிகரிச்சு, இன்னும் நாலு மாசத்துல 20,000 ரூபாயைத் தொட வாய்ப்பிருக்கு. மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு இது மகிழ்ச்ச்யான காலகட்டம்’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு