Published:Updated:

விவசாயிகளின் தோட்டத்துக்கே வரும் நடமாடும் தக்காளிக் கூழாக்கும் இயந்திரம்!

அறிமுக விழாவில்
பிரீமியம் ஸ்டோரி
அறிமுக விழாவில்

மதிப்புக்கூட்டல்

விவசாயிகளின் தோட்டத்துக்கே வரும் நடமாடும் தக்காளிக் கூழாக்கும் இயந்திரம்!

மதிப்புக்கூட்டல்

Published:Updated:
அறிமுக விழாவில்
பிரீமியம் ஸ்டோரி
அறிமுக விழாவில்

‘தக்காளி விலை வீழ்ச்சி’, ‘விலை கிடைக்காததால், தக்காளி வயலில் ஆடு, மாடுகள் மேய்கின்றன’ என்று தக்காளி விலைநிலவரம் குறித்த செய்திகள் ஆண்டுதோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. தக்காளி விலை குறையும் காலங்களில் விவசாயிகள் அதிகளவில் நஷ்டமடைகின்றனர். கடையிலேயே கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகும் போது, விவசாயிகளுக்கு என்ன விலை கிடைத்து விடும்? இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம்.

கூழாக்கும் இயந்திரம் உள்ள பேருந்து...
கூழாக்கும் இயந்திரம் உள்ள பேருந்து...

தக்காளி விலை குறையும் காலங்களில் அதைக் கூழாக்கி, மதிப்புக்கூட்டி விற்பனைசெய்ய நடமாடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர், இந்த இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தினார்.

அனந்த ராமகிருஷ்ணன்
அனந்த ராமகிருஷ்ணன்

மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் இயங்கிவரும் இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், பழங்கள் மற்றும் காய்கறிகளை நவீன முறையில் பதப்படுத்திக் கொடுக்கும் வசதிகொண்ட 5 வாகனங்களை வடிவமைத்துத் தமிழக அரசிடம் வழங்கியிருக்கிறது. இதனால் தக்காளி, மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு விலையில்லாத காலங்களில் பதப்படுத்தி மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்ய முடியும். இந்த இயந்திரத்தை விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கே வரவழைத்துத் தங்களது விளைபொருள்களை மதிப்புக்கூட்டிக் கொள்ளலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயந்திரத்தின் செயல்பாடுகுறித்துப் பேசிய இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், முனைவர் அனந்த ராமகிருஷ்ணன், “தக்காளி கிலோ 10 ரூபாய்க்குக் கீழ் விலை குறையும் போது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது. அந்த நேரங்களில் வயலில் பறிக்காமல் விடுவது, சாலையோரங்களில் கொட்டுவது போன்ற செயல் களால் தக்காளி வீணாவதோடு விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் தக்காளியைக் கூழாகவோ அல்லது பேஸ்ட்டாகவோ மாற்றிவிட்டால், உணவுப்பொருளும் வீணாகாது, விவசாயிக்கும் லாபமும் கிடைக்கும். தக்காளியைக் கூழாக்கும் மொத்த இயந்திர வடிவமைப்பும் இந்த வாகனத்திலேயே இருக்கும். தக்காளியை நன்றாகக் கழுவி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். சரியான கொதிநிலையில் இருக்கும் பழங்களை எடுத்துக் கூழாக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்க வேண்டும். கூழாக்கும் இயந்திரத்திலிருந்து சக்கைத் தனியாகவும், கூழ் தனியாகவும் பிரிந்து வரும். சக்கையைக் காயவைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். தக்காளிக் கூழை அப்படியே பாட்டிலில் அடைத்து வைக்கலாம். அல்லது தக்காளிக் கூழை இன்னும் சுத்தம் செய்ய வேண்டுமெனில், மற்றொரு இயந்திரத்தில் கூழை ஊற்றிச் சூடுபடுத்த வேண்டும். சரியான வெப்பநிலையில் அதை மீண்டும் எடுத்துப் பாட்டிலில் அடைக்கும் இயந்திரத்தில் ஊற்றிப் பாட்டிலுக்குள் அடைக்கலாம். இதை அப்படியே பயன்படுத்தினால் மூன்று முதல் நான்கு நாள்கள் பயன்படுத்தலாம். இதை அதிக நாள்கள் வைத்துப் பயன்படுத்த மற்றொரு இயந்திரத்தில் சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில் பதப்படுத்தினால் மூன்று மாதங்கள்வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

அறிமுக விழாவில்
அறிமுக விழாவில்

இந்த முறையில் 1,000 கிலோ தக்காளிக்கு 300 கிலோ கூழ் கிடைக்கும். கூழை விற்பனை செய்யும்போது 1 கிலோ தக்காளிக்கு 40 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இயந்திரம்மூலம் ஒரு நாளைக்கு ஒரு டன் தக்காளியைக் கூழாக்க முடியும். இதில் உற்பத்தி, கூழாக்குவது உள்பட எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு 6,000 முதல் 9,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இந்தத் தக்காளிக் கூழை மூலப்பொருளாகக் கொண்டு ஜூஸ், ஜாம் போன்ற பொருள்களை தயாரிக்க முடியும். இதன்மூலம் விவசாயிகள் இனி தக்காளியை வீணாக வீதியில் கொட்ட வேண்டியது இல்லை. மிளகாய், மாம்பழம் உள்ளிட்ட அனைத்துப் பழம் மற்றும் காய்கறி களையும் பதப்படுத்தி வழங்கமுடியும். இந்த இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் எங்களிடமோ உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடமோ தொடர்புகொண்டு கேட்டால் அனுப்பி வைக்கப்படும். மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவில் இந்த வாகனம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முதலாக இதுபோன்ற நடமாடும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.

தமிழகத்தில் தக்காளி மற்றும் மாம்பழ விளைச்சலில் முன்னணியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ஓர் இயந்திரமும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஓர் இயந்திரமும், தமிழகத்தில் தேவையுள்ள மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லும் அனுமதியுடன் தோட்டக்கலைத்துறைக்கு ஓர் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதப்படுத்தும் வாகனங்கள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

‘விளைபொருள் இருக்கும் இடம் தேடி வந்து, பழம் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தித் தரும் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் தமிழகம் முழுவதும் இதுபோன்ற நவீன வசதிகொண்ட பதப்படுத்தும் வாகனங்கள் கூடுதலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்’ என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தக்காளி விவசாயிகள் குப்பையில் கொட்டாமல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்.

தொடர்புக்கு, இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர். தொலைபேசி: 04362 228155.