தொடர்கள்
நாட்டு நடப்பு
Published:Updated:

மாதம் ரூ.77,000 வருமானம்: பாரம்பர்ய கல்செக்குக்கு புத்துயிர் கொடுத்த பொறியாளர்!

எண்ணெய் அளவிடும் சிவசெண்பகம்
பிரீமியம் ஸ்டோரி
News
எண்ணெய் அளவிடும் சிவசெண்பகம்

பாரம்பர்யம்

  • மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு நாள்கள் தவிர, 28 நாள்கள் செக்கு இயங்கிக் கொண்டிருக்கும்.

  • அடக்கச் செலவுகள் நல்லெண்ணெயில் ரூ.350-ம், தேங்காய் எண்ணெயில் ரூ.250-ம், கடலை எண்ணெயில் ரூ.200-ம் ஆகிறது.

கிராமங்களில் மாடுபூட்டி, கல்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்தான் ஆரோக்கிய எண்ணெய் வகை. அதை உபயோகித்ததால்தான் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். காலப்போக்கில் அதிகரித்த மெஷின் அரவை எண்ணெயின் பயன்பாட்டால் கல்செக்கு காட்சிப் பொருளாகி, பின் காணாமலே போய்விட்டது. தற்போது மரச்செக்கு மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தாலும், பாரம்பர்ய கல்செக்கில் எண்ணெய் எடுப்பது அரிதாகிவிட்டது. அந்த வகையில் கல் செக்குக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவசெண்பகம்.

திருநெல்வேலி, வண்ணார் பேட்டையிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இருக்கிறது சிவசெண்பகத்தின் கல்செக்கடி இடம். மாடுகள், கல்செக்கைச் சுற்றச் சுற்ற ‘கிர்... கிர்ர்...’ என்ற சத்தமே நமக்கு அந்த இடத்துக்கு வழிகாட்டிவிடுகிறது. செக்கு உரலில் எள்ளைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்த சிவசெண்பகத்திடம் பேசினோம். “திருநெல்வேலி, பேட்டைதான் என்னோட ஊரு. எங்க ஊர்ல 45 வருஷத்துக்கு முன்னால 60-க்கும் மேற்பட்ட கல் செக்குகள் இருந்துச்சு. மாடுபூட்டிச் சுற்றவிட்டு, தினமும் எண்ணெய் எடுப்பாங்க. எங்க தெருவுக்குப் பெயரே ‘செக்கடித் தெரு’தான்.

மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்கு
மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்கு

தாத்தா, அப்பா, பெரியப்பா... எல்லாருமே பாரம்பர்யமா செக்குல எண்ணெய் ஆட்டுற தொழிலைத்தான் செஞ்சுகிட்டு இருந்தாங்க. எண்ணெய் அரவை இயந்திரங்கள் வந்த பிறகு, கல்செக்குத் தொழில் நலிவடைஞ்சு போச்சு. இருந்தாலும், பாரம்பர்யத் தொழிலை விட்டுடக் கூடாதுன்னு அப்பா தொடர்ந்து மாடுபூட்டி, கல் செக்குல் எண்ணெய் ஆட்டும் தொழிலைச் செஞ்சுகிட்டு இருந்தார்.

பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். 4-வது வருஷம், கடைசி செமஸ்டர் தேர்வு எழுதி முடிச்சதும், வெளியில வேலை தேட ஆரம்பிச்சேன். பல இடங்கள்ல இன்டர்வியூவுக்குப் போயும் தேர்வாகலை. ‘நாங்கதான் சொந்தத் தொழில் இல்லாம வேலை தேடிக்கிட்டு இருக்கோம். உங்க அப்பா செக்குல எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யறாங்கதானே... அதை முழுசாக் கத்துக்கிட்டு, நீ ஏன் தனியா செக்குவெச்சு, எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யக் கூடாது?’னு நண்பர்கள் கேட்டாங்க. அப்போதான், எனக்கும் அந்த ஐடியா சரின்னு தோணுச்சு. அப்பாவிடம் சொன்னேன்.

எண்ணெய்
எண்ணெய்

“பாரம்பர்யமா செக்குல எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யற தொழில் என்னோட முடிஞ்சிடுமோன்னு நினைச்சேன். நீ சொன்னது எனக்குச் சந்தோஷமா இருக்குப்பா”ன்னு சொன்னார். அடுத்தநாளே, செக்கடிக்குப் போனேன். ஆறு மாசம் தொழிலை நல்லாக் கத்துக்கிட்டேன். இப்போ ரெண்டு வருஷமா தனியா கல்செக்கு அமைச்சு சொந்தமாத் தொழில் செஞ்சுட்டு வர்றேன்” என்றார்.

தொடர்ந்து, கல் செக்கில் எண்ணெய் உற்பத்தி செய்யும்விதம் குறித்துக் கூறிய சிவசெண்பகம், ‘‘ஒரே கல்லில் குடைக்காளான் போன்ற அமைப்பிலுள்ள செக்கின் நடுவில், ஆட்டு உரல் போன்ற அமைப்பு உள்ளது. இந்த உரலின் நடுவில் குழி இருக்கிறது. இதன் நடுவில் சுழலும் வகையில் வாகை மரத்தால் ஆன உலக்கை பொருத்தப்பட்டிருக்கிறது. உலக்கையின் உயரம் 7.75 அடி. இதில், `கொக்கி’ எனப்படும் வாகை மரத்தாலான கம்பு அதைத் தாங்கி நிற்கிறது. அதன் கீழ்ப் பகுதியில் 22 அடி நீண்ட தேக்கு மரத்தாலான வீச்சுப்பலகை செக்கின் அடிவாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கருப்பட்டி சேர்க்கும் பணியில்
கருப்பட்டி சேர்க்கும் பணியில்

இதன் அடிப்பகுதியிலுள்ள வீச்சுப்பலகையில், மேக்காலை இணைத்து அதில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டினால் மாடுகள் சுற்றி வரும். அவை செக்கைச் சுற்றச் சுற்ற, உரலில் போடப்பட்டிருக்கும் கடலை, தேங்காய், எள் ஆகியவை உலக்கையில் அரைபட்டு எண்ணெய் கிடைக்கும். முதலில் செக்கில் வாகை மர உலக்கையை மாட்டிவிட்டு, அதில் கால் கிலோ உடைத்த பனங்கருப்பட்டியைப் போட்டு, அதனுடன் 250 மி.லி தண்ணீர் சேர்த்து இரண்டு, மூன்று முறை சுற்ற வேண்டும். இதனால் உலக்கைக்கும் கல் உரலுக்கும் இறுக்கம் ஏற்படும். பிறகு, 30 கிலோ எள்ளைப் போட்டு, அதனுடன் ஒன்றே கால் கிலோ சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட கருப்பட்டியைப் போட்டுச் சுற்ற வேண்டும்.

செக்கில் எள்ளைப் போட்டுச் சுற்றச் சுற்ற எள் நசுங்கும். பிடிப்புத்தன்மைக்காக 700 மி.லி தண்ணீரையும் சேர்த்துச் சுற்ற வேண்டியதுதான். ஒன்றரை மணி நேரத்தில் ஒரு முறையும், அடுத்த ஒரு மணி நேரத்தில் மீதமுள்ள எண்ணெயையும் எடுக்கலாம். உரலுக்குள் கிடக்கும் எண்ணெயை மல்லுத்துணியால் பிழிந்து எடுத்துவிட வேண்டும். செக்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை சில்வர் பாத்திரத்தில் சேகரித்து, துணியால் மூடி 12 மணி நேரம் அப்படியே வைத்திருந்து தெளியவிட்டு டின்னில் அடைக்கலாம். நிலக்கடலை எண்ணெய் உற்பத்திக்கும், முதலில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி, 30 கிலோ நிலக்கடலைப் பருப்பைக் கொட்டி ஆட்டத் தொடங்க வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் 500 மி.லி தண்ணீர் ஊற்றி ஆட்ட வேண்டும். எள்ளைப் போல நிலக்கடலையையும் உரலுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் தயாரிப்பில், 30 கிலோ கொப்பரைத் தேங்காயைப் போட்டு 200 கிராம் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து ஆட்ட வேண்டும்.

‘‘ஆர்கானிக் என்பது காய்கறிகளிலும், பாரம்பர்ய அரிசிகளிலும் மட்டுமல்ல... எண்ணெயிலும் இருக்கு.’’

இயந்திரங்கள் மூலம் ஆட்டி எண்ணெய் எடுக்கும்போது வேகமான சுழற்சியில் எள், தேங்காய், கடலை ஆகியவை அதிகமாகச் சூடாகிவிடுகின்றன. இதனால், அவற்றிலுள்ள உயிர்ச்சத்துகள் குறைந்து ஆவியாகிவிடும். ஆனால், கல்செக்கில் ஆட்டும்போது பனங்கருப்பட்டி சேர்ப்பதால் கல் குளிர்ச்சியாகவே இருக்கும்; உயிர்ச்சத்துகள் அப்படியே இருக்கும்” என்றார்.

இறுதியாக விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசிய சிவசெண்பகம், ‘‘மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு நாள்கள் தவிர 28 நாள்கள் செக்கு இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றில் 12 நாள்கள் நல்லெண்ணெய், 8 நாள்கள் தேங்காய் எண்ணெய், 8 நாள்கள் நிலக்கடலை எண்ணெய் உற்பத்தி செய்கிறோம். 30 கிலோ எள் மூலம் 14 லிட்டர் நல்லெண்ணெயும், 30 கிலோ கொப்பரைத் தேங்காய் மூலம் 18 லிட்டர் தேங்காய் எண்ணெயும், 30 கிலோ நிலக்கடலை மூலம் 14 லிட்டர் கடலை எண்ணெயும் கிடைக்கிறது. ஒரு மாதத்தில் மொத்தம் 624 லிட்டர் நல்லெண்ணெயும், 512 லிட்டர் தேங்காய் எண்ணெயும், 384 லிட்டர் கடலை எண்ணெயும் கிடைக்கிறது. இவற்றில், நல்லெண்ணெய் லிட்டர் ரூ.400-க்கும், தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.300-க்கும், கடலை எண்ணெய் லிட்டர் ரூ.280-க்கும் விற்பனையாகின்றன.

எண்ணெய் அளவிடும் சிவசெண்பகம்
எண்ணெய் அளவிடும் சிவசெண்பகம்

அடக்கச் செலவு நல்லெண்ணெய்க்கு ரூ.350-ம், தேங்காய் எண்ணெய்க்கு ரூ.250-ம், கடலை எண்ணெய்க்கு ரூ.200-ம் ஆகிறது. இந்தக் கணக்கில் 624 லிட்டர் நல்லெண்ணெய் விற்பனை மூலம் ரூ.2,49,600-ம், 512 லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்பனை மூலம் ரூ.1,53,600-ம், 384 லிட்டர் கடலை எண்ணெய் விற்பனை மூலம் ரூ.1,07,520-ம் வருமானம் கிடைக்கிறது. இவற்றில், அடக்கச் செலவுகளைக் கழித்தால், மாதம் 87,520 லாபமாகக் கிடைக்கிறது. மாடுகள் பராமரிப்புச் செலவுக்காக ரூ.10,000-ஐ கழித்தால், மீதமுள்ள ரூ.77,520 லாபமாகக் கையில் நிற்கிறது.

பிண்ணாக்குகளில் பெரிய அளவு வருமானம் இல்லை. வீட்டிலும், செக்கடியிலும் நேரடியாக வந்து வாங்கிச் செல்வதால் விற்பனைக்குப் பிரச்னை இல்லை” என்றவர் இறுதியாக, ‘‘ஆர்கானிக் என்பது காய்கறிகளிலும், பாரம்பர்ய அரிசிகளிலும் மட்டுமல்ல... எண்ணெயிலும் இருக்கு. பாரம்பர்யத்தை விட்டுடக் கூடாதுங்குறதுனாலதான் கல்செக்குக்கு புத்துயிர் கொடுத்திருக்கேன். கிராமங்கள்ல செக்கடிகள்ல சும்மா கிடக்குற கல்செக்குகள் எல்லாம் பழையபடி சுழலணும்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சிவசெண்பகம்,

செல்போன்: 90039 68824