Published:Updated:

பாரம்பர்ய நிலக்கடலை... செயற்கை மழையில் இயற்கை விவசாயம்!

அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி

மகசூல்

நீலகிரி தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிர் நிலக்கடலை. இறவை மற்றும் மானாவாரியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மானாவாரி விவசாயிகளின் விருப்பப் பயிர். அந்த வகையில், 4 ஏக்கர் நிலத்தில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடியைச் செய்துவருகிறார் பரமேஸ்வரி. நாமக்கல் மாவட்டம், கொல்லபட்டி கிராமத்தில் இருக்கிறது இவரது தோட்டம். இறவைப் பாசனத்தில் கரும்பும், அதன் அருகிலுள்ள மானாவாரி நிலத்தில் நிலக்கடலையும் சாகுபடி செய்து வருகிறார். இலைகள் பழுத்து அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த நிலக்கடலைச் செடிகளில் சிலவற்றைக் கொத்தோடு பிடுங்கி, காய்களின் தரத்தைச் சோதித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘நிலக்கடலைச் சாகுபடியை பல தலைமுறைகளா என் வீட்டுக்காரரோட குடும்பம் செஞ்சிகிட்டு இருக்குது. அவரு பேரு நடேசன். விசைத்தறி வேலை பார்ப்பாரு. அதுபோக, பொதுச்சேவைனு எப்பவும் பரபரப்பா இருப்பாரு. நேரம் கிடைக்குறப்ப விவசாய வேலைகள்லயும் தீவிரமாக இறங்கிடுவார். மத்தபடி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம்னு எல்லா வேலைகளையும் பெரும்பாலும் நான்தான் பார்த்துக்கிறேன்.

நிலக்கடலை அறுவடையில்
நிலக்கடலை அறுவடையில்

கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்து 20 வருஷமாச்சு. இத்தனை வருஷத்துல ஒரு போகம்கூடத் தவறவிடாம நிலக்கடலை விதைச்சிருக்கோம். எங்களோடது மானாவாரி நிலம். ஒரு போகம் நிலக்கடலை விதைப்போம். அதை அறுவடை செஞ்சுட்டு, நாட்டுச் சோளம் விதைப்போம். இந்த வருஷம் நாட்டுச் சோளம் விளைஞ்ச காட்டுல வைகாசிப் பட்டமா நிலக்கடலை போட்டிருக்கோம். மொதல்ல கொஞ்சம் ரசாயனம் பயன்படுத்துவோம். ஆனா, 12 வருஷத்துக்கு முன்னால நம்மாழ்வார் அய்யாவோட சில கூட்டங்கள்ல நானும், என் வீட்டுக்காரரும் கலந்துகிட்டோம். அதுக்குப் பிறகு, ரசாயனத்தைக் கையாலகூடத் தொடலை. முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்யறோம்’’ என்ற பரமேஸ்வரி ஒரு ஏக்கருக்கான நிலக்கடலைச் சாகுபடி முறைகளை விளக்கினார்.

நிலத்தயாரிப்பு

பங்குனி, சித்திரை மாதங்களில் அடிமண்ணைப் புரட்டிப்போடும்படி கோடை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு, மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் களைச்செடி விதைகளை அழித்துவிடும். அத்துடன் நிலத்தின் மேலுள்ள கட்டிகள் உடைந்து, மண் விபூதிபோல் காட்சியளிக்கும். ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி, பரப்பிவிட்டு மீண்டும் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். தொழுவுரத்துடன் தென்னை நார்க் கழிவுத்தூளையும் கலந்து, நிலத்தில் பரவலாகக் கொட்டி உழவு செய்ய வேண்டும். மழைநீரைத் தென்னைநார்த்தூள் பிடித்து வைத்துக்கொள்ளும். மானாவாரி நிலங்களுக்குத் தென்னைநார்த்தூள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஒரு ஏக்கருக்கு 60 கிலோ நிலக்கடலை விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற கணக்கில் சூடோமோனாஸை எடுத்து, விதைகளை அதில் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கவும், காய்கள் பிடிக்கவும், வேரழுகல்நோயைக் கட்டுப்படுத்தவும் இந்த விதை நேர்த்தி அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தானியங்கி இயந்திர விதைப்பு

விதைப்புக்கு வேலையாள்கள் கிடைக்காதவர்கள், இயந்திரம் மூலம் நடவு செய்யலாம். விதைக்க டிராக்டரைப் பயன்படுத்தலாம். டிராக்டரில் பொருத்தப்பட்ட ஒன்பது கொத்துக்கலப்பை உழவு செய்ய, பின்னாலுள்ள தானியங்கும் விதைப்பு பெட்டியிலிருந்து 15 செ.மீ இடைவெளியில் ஒரே சீராக விதைகள் விழுந்துகொண்டே வரும். ஒரே நேரத்தில் 9 சால் வரிசையில் விதைப்பு நடக்கும் (இவர்கள் இந்த முறையில்தான் நடவு செய்திருக்கிறார்கள்).

நிலக்கடலை
நிலக்கடலை

களை மேலாண்மை

விதைப்பு செய்ததிலிருந்து 30 மற்றும் 40-ம் நாளில் நிலக்கடலை வயலில் முளைத்திருக்கும் களைச்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் மழைத்தூவி (ரெயின் கன்) மூலம் பாசனம் செய்யலாம். இப்படி மழை கிடைக்காத நாள்களில் பாசனம் செய்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொடர்ந்து 60-ம் நாளில் ஒரு களை எடுத்து, 2 டன் சாண எரிவாயு கழிவுத்தூளைப் பரவலாக இறைத்துப் பாசனம் செய்ய வேண்டும். இதனால் வேர்களில் பிடிக்கும் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இன்னிய தேதியில ஒரு கிலோ பருப்பு 90 ரூபாய்க்கு விலை போகுது. ஒரு ஏக்கருக்கான நிலக்கடலை வருமானம் 46,000 ரூபாய்.

வேம்பு, புங்கன், காதி சோப் கரைசல்

பொதுவாக இலைத்தேமல்நோய் மற்றும் அசுவினி பேன் தாக்குதல் காணப்படும். அதற்கு வேம்பு, புங்கன் காதி சோப் கரைசலைத் தயாரித்துத் தெளிக்க வேண்டும். 4 லிட்டர் வேப்பெண்ணெய், 1 லிட்டர் புங்கன் எண்ணெய் இரண்டையும் ஒரு கேனில் ஊற்றி, ஒன்று சேர்த்துக் குலுக்கி நன்றாகக் கலந்த பிறகு 50 கிராம் காதி சோப் கரைசலை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து 100 மி.லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள்மீது தெளித்தால் தேமல், அசுவினி தாக்குதலைச் சமாளிக்கலாம். 120 நாள்களில் அறுவடை செய்யலாம்’’ சாகுபடி முறைகளைக் சொன்ன பரமேஸ்வரி மகசூல் குறித்துப் பேசத் தொடங்கினார்.

‘‘ஒரு ஏக்கருக்கு 60 கிலோ நிலக்கடலை விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற கணக்கில் சூடோமோனாஸை கலந்து விதைநேர்த்தி செய்யலாம்.’’

‘‘இந்த போகத்துல விளைஞ்ச நிலக்கடலையை அறுவடை செய்யத் தயாராகிட்டு இருக்கோம். போன போகத்து கணக்குப்படி, ஏக்கருக்கு 1,400 கிலோ மகசூல் எதிர்பார்க்குறோம். நாங்க, நிலக்கடலையைக் காயா விற்க மாட்டோம். அதை உடைச்சு, பருப்பைத்தான் விற்போம். அடுத்த போகத்துக்குத் தேவையான தரமான விதைகளை எடுத்து பக்குவப்படுத்தி இருப்புவெச்சிடுவோம். மீதமிருக்கிற பருப்பை எண்ணெய் ஆலைக்கு விற்பனை செஞ்சிடுவோம்.

1,400 கிலோ காய்கள்ல இருந்து 400 கிலோ நிலக்கடலைப் பருப்பு கிடைக்கும். இன்னிய தேதியில ஒரு கிலோ பருப்பு 90 ரூபாய்க்கு விலை போகுது. அந்தக் கணக்குப்படி 36,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். நிலக்கடலைக் கொடி நல்ல கால்நடைத் தீவனம். அந்த வகையில ஏக்கருக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள தீவனம் கிடைச்சிடும். அதையும் சேர்த்து ஒரு ஏக்கருக்கான நிலக்கடலை வருமானம் 46,000 ரூபாய். 120 நாள்கள்ல மானாவாரியில இந்த வருமானம் கிடைக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செலவுனு பார்த்தா, உழவுக்கு 3,000 ரூபாய், விதைக்கு 3,600 ரூபாய், விதைப்புக்கு 1,000 ரூபாய், களை எடுக்க 8,000 ரூபாய், இடுபொருள் 3,000 ரூபாய், அறுவடை 10,000 ரூபாய். ஆக ஒரு ஏக்கருக்கு 28,600 ரூபாய் செலவாகுது. இதைக் கழிச்சிட்டா ஒரு ஏக்கருக்கு 18,400 ரூபாய் லாபம் கிடைக்குது. பருவமழை ஏமாத்திடுச்சு. ரெயின் கன்(மழைத்தூவான்) மூலம் பாசனம் செஞ்சதால வறட்சியில இருந்து பயிர்களைக் காப்பாத்த முடிஞ்சது. அதனாலதான் இந்த லாபத்தைப் பார்க்க முடியுது’’ என்றவர் மழைத்தூவான் பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி
அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி

‘‘100 சதவிகித மானியத்துல, வேளாண்துறையிலதான் இந்த ரெயின் கன்னைக் கொடுத்தாங்க. அதைவெச்சு, மானாவாரிப் பயிரான நிலக்கடலைக்கும், இறவைப்பயிரான கரும்புக்கும் பாசனம் நடக்குது. இறவையும், மானாவாரியும் ஒரே இடத்துல செய்யறவங்க, இதைப் பயன்படுத்திக்கலாம்’’ என்ற பரமேஸ்வரி நிறைவாக,

‘‘அடுத்த போகத்துல நிலக்கடலைப் பருப்பை விற்பனை செய்யக் கூடாதுன்னு முடிவு செஞ்சிருக்கோம். இயற்கை சமையல் எண்ணெய்க்குத் தேவை அதிகரிச்சுட்டு வருது. அதை மனசுலவெச்சு, எங்க பண்ணையில மரச்செக்கு ஆலை அமைக்கப் போறோம். எங்க பண்ணையில விளையுற நிலக்கடலை, தேங்காய், எள் மூணையும் வெச்சு, இயற்கை சமையல் எண்ணெய் உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யலாம்னு இருக்கோம். அப்ப இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைக்கும்’’ என்றபடி விடைகொடுத்தார் பரமேஸ்வரி.

தொடர்புக்கு, என்.பரமேஸ்வரி, செல்போன்: 86674 53836

நீர் மேலாண்மை

ழைத்தூவான் மூலமாக மானாவாரிப் பயிருக்குப் பாசனம் செய்துவருகிறார் பரமேஸ்வரி, அதைப் பற்றிப் பேசும்போது, ‘‘மானாவாரிப் பயிருக்கு மழைத்தண்ணிதான் உயிர் மாதிரி. ஆனா, வைகாசி, ஆனியில கிடைக்க வேண்டிய பருவமழை, இப்பல்லாம் சரியான நேரத்துல கிடைக்குறதில்லை. அதனால பல நேரங்கள்ல பயிர் கருகிடுது. இதனால வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கு. மழை கிடைக்கலைன்னா, மானாவாரி விவசாயிகள் பலரும் கவலையோடதான் இருப்பாங்க. ஆனா, நாங்க கவலைப்படுறதில்லை.

பரமேஸ்வரி
பரமேஸ்வரி

இயற்கை மழை கிடைக்காத நேரத்துல, ரெயின்கன் மூலமா செயற்கை மழையை உருவாக்கி, பயிர்களுக்கு உயிர் கொடுக்கிறோம். பக்கத்துலேயே எங்க வயல்ல இறவைப் பாசனம் நடக்குது. அங்கே இருக்குற மோட்டார் மூலமா, ரெயின் கன் வழியா தண்ணியைத் தெளிச்சுவிடுறோம். ஒரு ரெயின் கன் கருவி 60 அடி சுற்றளவுக்குத் தண்ணியைத் தெளிக்கும். இடம் மாத்தி மாத்தி வைக்குற வசதியோடதான் அந்தக் கருவி இருக்குது. ஒரு இடத்துல தெளிச்சதும் அடுத்த இடத்துக்குக் கொண்டு போய்வெச்சு தெளிக்கலாம். 15 நாளைக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணியில 300 மி.லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, இலைவழி உரமாக ரெயின் கன் மூலம் கொடுக்குறோம். இதனால இலை சம்பந்தமான நோய்களைக் கொடுக்குற பூச்சிகளோட தாக்கம் ரொம்பக் குறைவா இருக்குது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.