Published:Updated:

குழிமுறை சாகுபடி! - தென்னையில் ஊடுபயிராக மாப்பிள்ளைச்சம்பா!

தென்னையில் ஊடுபயிராக நெல்
பிரீமியம் ஸ்டோரி
தென்னையில் ஊடுபயிராக நெல்

மகசூல்

குழிமுறை சாகுபடி! - தென்னையில் ஊடுபயிராக மாப்பிள்ளைச்சம்பா!

மகசூல்

Published:Updated:
தென்னையில் ஊடுபயிராக நெல்
பிரீமியம் ஸ்டோரி
தென்னையில் ஊடுபயிராக நெல்

பாரம்பர்ய ரக அரிசி பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பல விவசாயிகள், ஒட்டுரக நெல் சாகுபடியை கைவிட்டுப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தென்காசியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி, தென்னைக்கு ஊடுபயிராக ‘குழிமுத்து’ (குழி) முறையில் மாப்பிள்ளைச்சம்பா நெல் சாகுபடி செய்திருக்கிறார்.

தென்காசி மாவட்டம், கடைய நல்லூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள புதுக்குடி கிராமத்தின் தொடக்கத் திலேயே உள்ளது மாடசாமியின் தென்னந்தோப்பு. தென்னைகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்த மாடசாமியைச் சந்தித்தோம்.

மகிழ்ச்சியோடு வரவேற்றவர் இளநீரை வெட்டிக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “நான் பள்ளிக் கூடத்துக்கே போனதில்ல. நினைவு தெரிஞ்சதுல இருந்து அப்பா கூட விவசாய வேலைக்கு எடுபிடியா இருந்தேன். 20 வயசுல சொந்தமா டிராக்டர் வாங்கி ஓட்டினேன். என்னோட சொந்த முயற்சியில 40 வருஷமா விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். இந்தப் பகுதி முழுசுமே நெல்லுதான் விளைவிப்போம். அப்போதெல்லாம் அடியுரமா வெறும் குப்பையை (எரு) மட்டும்தான் போட்டு நெல் விவசாயம் செஞ்சோம். பசுமைப் புரட்சிக்குப் பிறகு, அரசாங்கமே புதிய ஒட்டு நெல் ரகங்களை அறிமுகப் படுத்தியதோடு ரசாயன உரங்களையும் அறிமுகப்படுத்துச்சு.

வயலில் தனது பேத்தியுடன் மாடசாமி-சந்திரா
வயலில் தனது பேத்தியுடன் மாடசாமி-சந்திரா

கூடுதல் மகசூல் கிடைக்குமேங்குற நினைப்புல ஊர்ல இருக்க எல்லாரும் ஒட்டுரகத்தை ரசாயனத்தைப் பயன்படுத்தி விளைவிக்க ஆரம்பிச்சாங்க. ஊரோட ஒத்து வாழணும்னு எங்கப்பாவும் ரசாயனத்துக்கு மாறினாங்க. வேற வழியில்லாம நானும் அதையே தொடர்ந்து செய்துட்டு வந்தேன். ஆரம்பத்துல நல்ல மகசூல் கிடைச்சது. நாலஞ்சு வருஷத்துலயே மகசூல் படிப்படியா குறைய ஆரம்பிச்சது. ஒவ்வொரு போகத்துக்குப் பிறகும் உழவடிக்கும்போது மண்ணு, சிமென்ட் தரை மாதிரி இறுகிப்போயி இருந்துச்சு. அதுமட்டுமல்லாம பூச்சி, நோய்த்தாக்கு தலையும் கட்டுப்படுத்த முடியல. வேறவேற கம்பெனி பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கித் தெளிச்சும் பலனில்லை.

ஒரு கட்டத்துல மகசூலே கிடைக்காத நிலைக்குப் போயிடுச்சு. விவசாயத்தை விட்டுடக் கூடாதேன்னு தொடர்ந்து செய்துட்டு வந்தேன். ‘ரசாயன உரத்தை இஷ்டத்துக்கும் போட்டு மண்ணோட வளத்தைக் கெடுத்து வெச்சுட்டீங்க. நம்ம பாரம்பர்ய முறைப்படி அடியுரமா மட்கிய குப்பையைப் போட்டு, பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில நிறைய வழி இருக்கு. ரசாயன உரமெல்லாம் வேண்டாம்’னு ஓமன் நாட்டுல வேலை பார்க்குற என்னோட மகன் மங்களதுரை சொன்னான். ரசாயன உரம் போட்டே சரியான மகசூல் கிடைக்கல. இயற்கை வழியில சாகுபடி செஞ்சா என்னத்த மிஞ்சிடப் போகுதுன்னு நினைச்சேன்.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

ஒரு முறை புளிங்குடி அந்தோணிசாமியோட தோட்டத்துக்கு டிராக்டர் லோடு அடிக்கப் போனேன். அப்போ அவரோட தோட்டத்துக்கு ரெண்டு பேரு வந்திருந்தாங்க. அவங்களைத் தோட்டம் முழுக்கச் சுத்திக் காண்பிச்சு, இயற்கை விவசாயத்தைப் பற்றி விளக்கிச் சொன்னார். அதன் மூலமா நானும் பல விஷயத்தைக் கத்துக்கிட்டேன். அதுக்கு பிறகுதான் இயற்கை விவசாயம் மீது நம்பிக்கை ஏற்பட்டுச்சு” என, மாடசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் மனைவி சந்திரா குறுக்கிட்டார்,

“வருஷக் கணக்குல ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்தி விவசாயம் செஞ்சுட்டு திடீர்னு எதுவும் போடாம விவசாயம் பாருங்கன்னு என் மகன் சொன்னப்போ எங்களுக்குப் புரியல. ரெண்டு, மூணு தோட்டங்களுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போயி, ரசாயன உரமில்லாம செழிப்பா வளர்ந்திருந்த காய்கறிகள், நெல் ரகங்கள் வளர்ந்திருந்ததைக் காட்டுன பிறகுதான் நம்பிக்கை வந்துச்சு. அதுக்கு பிறகுதான் 5 சென்ட்ல வெண்டை, தக்காளி, கத்திரி, புடலை, பூசணி, கீரை வகைகளை இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பார்த்தோம். ஓரளவு மகசூல் கிடைச்சது. அதை வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினோம். தொடர்ந்து மாப்பிள்ளைச் சம்பாவைச் சாகுபடி செய்யலாம்னு தோணுச்சு.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

இந்த 8 ஏக்கர் நிலத்துலயும் 4 வருஷமா தென்னைச் சாகுபடிதான் நடக்குது. நெல் சாகுபடிக்குத் தனியா நிலம் வாங்கித்தான் செய்யணும்ங்கிற நிலை. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போதான், நான் சின்ன பிள்ளையா இருக்கும்போதே எங்க கிராமத்துல குழி முத்து முறையில நெல் சாகுபடி செஞ்சது ஞாபகம் வந்துச்சு. தென்னை வரிசைக்கு வரிசை 30 அடி, மரத்துக்கு மரம் 30 அடி இடைவெளி இருக்குறதுனால, போன வருஷம் சோதனை அடிப்படையில தென்னைக்கு ஊடுபயிரா மாப்பிள்ளைச் சம்பாவைச் சாகுபடி செஞ்சோம். நல்ல மகசூல் கிடைச்சது. இந்த வருஷம் ஒன்றரை ஏக்கர்ல சாகுபடி செஞ்சு அறுவடை நிலையில இருக்கு. முப்பது, முப்பந்தஞ்சு வருஷத்துக்குப் பிறகு இப்போதான் நிலத்துல மண்புழுவையே பார்க்குறோம்” என்றார் மகிழ்ச்சியாக.

இறுதியாக வருமானம் பற்றிப் பேசிய மாடசாமி, “போன வருஷம் ஒரு ஏக்கர்ல குழி முத்து முறையில மாப்பிள்ளைச்சம்பா சாகுபடி செஞ்சதுல 1,550 கிலோ நெல் கிடைச்சது. இதை அரிசியாக்குனதுல 1,096 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோ அரிசியை 90 ரூபாய்க்கு விற்பனை செஞ்சோம். அது மூலமா 98,640 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல எல்லாச் செலவும் சேர்த்து ரூ.31,550 ஆச்சு. செலவுப் போக மீதமுள்ள 67,090 ரூபாய் லாபமாக் கிடைச்சது. உள்ளூரிலும், என் மகனின் நண்பர்கள் வட்டாரத்துலயே அரிசியை விற்பனை செஞ்சுட்டோம்.

குழிமுறை சாகுபடி! - தென்னையில் ஊடுபயிராக மாப்பிள்ளைச்சம்பா!

இந்தத் தடவை திடீர்னு பெய்ஞ்ச மழையால களை எடுக்க 3,000 ரூபாய், உழவு, தொழுவுரம், இடுபொருள்னு 8,000 ரூபாய் கூடுதல் செலவாயிடுச்சு. நெல்லை இன்னும் மதிப்புக்கூட்டல. அறுவடைக்கு முன்னாடியே நண்பர்கள் வட்டாரத்துல முன்பதிவு பண்ணியிருக்காங்க. அதனால விற்பனைக்கு வில்லங்கமில்ல. அடுத்தடுத்த பட்டத்துல சீரகச்சம்பா, பூங்கார், அறுபதாம் குறுவை ரக நெல்லைச் சாகுபடி செய்யலாம்னு இருக்கோம்” என்றார் சந்தோஷம் பொங்க.

தொடர்புக்கு,

மாடசாமி, செல்போன்: 93447 44756

மதிவதனிகா
மதிவதனிகா

இடுபொருள்கள் தயாரிப்பைக் குறிப்பெடுத்து வெச்சுக்குவேன்!

இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து, 5-ம் வகுப்பு படித்து வரும் மங்களதுரையின் மகளான மதிவதனிகா, “எங்க அப்பா ஓமன்ல இருந்து தினமும் போன் பண்ணுவாங்க. தாத்தா, பாட்டிக்கு இயற்கை இடுபொருள்களைப் பற்றிப் பெருசாத் தெரியாது. அதனால, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், வசம்புக்கரைசல், மீன் அமிலம், தயிர்க்கரைசல், வடித்த சோறு-நாட்டுச்சர்க்கரைக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சி-பூண்டுக்கரைசல் ஆகியவற்றை எப்படித் தயாரிக்கணும், அதுக்குத் தேவையான பொருள்கள் என்ன, எந்தெந்தப் பருவத்துல தெளிக்கணும்னு போன்லயே எங்கிட்டச் சொல்வாரு. இதுக்காகத் தனியா ஒரு குயர் நோட்டு போட்டு, அதுல எழுதி வெச்சிருக்கேன். அதுமட்டுமல்லாம, இந்தக் கரைசல்களைத் தயாரிக்கும்போது நோட்டைப் பார்த்து நான் வாசிச்சு சொல்ல சொல்ல தாத்தா, பாட்டி தயார் செய்வாங்க. சில சமயங்கள்ல நானும் சேர்ந்து தயார் செய்வேன். தாத்தாக்கூடத் தோட்டத்துக்கு வரும்போதெல்லாம் பம்ப்செட் ரூம் பக்கத்துல இருக்குற இடுபொருள் டிரம்களைத் திறந்து பார்த்துக் கலக்கி விடுவேன். இடுபொருள்கள் காலியாகுற நிலையில இருந்துச்சுன்னா அதைக் குறிச்சு வெச்சு, தாத்தாகிட்டச் சொல்லித் தயார் செய்யச் சொல்வேன். மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கிறப்போ தேவையான மூலிகைகளை எங்கத் தோட்டத்துல நானே பறிச்சுட்டு வருவேன். விவசாயம் சம்பந்தமா இப்போ எனக்கு எல்லாமே அத்துப்படி. எனக்கும் விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை வந்துடுச்சு” என்றார்.

சந்திரா
சந்திரா

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் குழி முத்து முறையில் மாப்பிள்ளைச்சம்பா நெல் சாகுபடி செய்வது குறித்துச் சந்திரா கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

மாப்பிள்ளைச் சம்பா நெல் சாகுபடி செய்யச் சம்பா பட்டம் (ஆடி–மார்கழி) ஏற்றது. இதன் வயது 160 நாள்கள். நேரடி நெல் விதைப்பிலும், குழி முத்து முறையிலும் 150 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலத்தில் தண்ணீரே இல்லாமல் போனாலும்கூட இந்த நெற்கதிர் வாடாது. அதேபோல மழைநீர் தேங்கி மூழ்கிக் கிடந்தாலும் அழுகாமல் இருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. தேர்வு செய்த நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைத் தூவி உழ வேண்டும்.

குழி முத்து முறை நடவு செய்ய வரிசைக்கு வரிசை, குழிக்குக் குழி ஒரு அடி இடைவெளியில் களைக்கொத்தால் வெட்டி சுமார் 4 அங்குலத்துக்குக் குழி எடுக்க வேண்டும். ஒரு குழிக்கு 3 அல்லது 4 நெல் விதைகளைப் போட்டுக் குழியை மூட வேண்டும். பிறகு வழக்கம்போல் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சலாம். இம்முறையில் ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ வரை நெல் விதை தேவை. நாற்றாக நடவு செய்தால் 20 முதல் 25 கிலோ வரை தேவைப்படும். 8 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 30 மற்றும் 60-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 60-ம் நாளுக்குப் பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மீன் அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி), அமுதக்கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர்), பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) ஆகியவற்றைக் கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

மாப்பிள்ளைச் சம்பா நெற்கதிர்கள்
மாப்பிள்ளைச் சம்பா நெற்கதிர்கள்

பாரம்பர்ய நெல் ரகத்தைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் பெரும்பாலும் இருக்காது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 60-ம் நாளுக்குப் பிறகு 10 நாள்கள் இடைவெளியில் இஞ்சி-பூண்டு கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி), மூலிகைப் பூச்சிவிரட்டி (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி), தேமோர் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கதிர் உருவான பிறகு தயிர்க்கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) மற்றும் வசம்புக் கரைசலை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். வசம்புக்கரைசல் தெளிப்பதால், இதன் வாசனைக்கு மயில்களின் தாக்குதல் இருக்காது. பால் பிடிக்கும் பருவத்தில் வடித்த சோறு-நாட்டுச்சர்க்கரை கரைசலை ஒருமுறை தெளித்தாலே போதும். 130-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். 155 முதல் 165-ம் நாளில் அறுவடை செய்யலாம்.

தயிர்க் கரைசல்

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் பசுந்தயிரை ஊற்றி, அதனுள் 100 கிராம் எடையுள்ள செம்புக்கம்பியைப் போட்டுப் பாத்திரத்தின் வாய்ப்பகுதியை துணியால் கட்டி, 15 நாள்கள் வரை வைத்திருந்தால் தயிர், செந்நிறமாக மாறியிருக்கும். பிறகு, அதனுடன் 300 கிராம் நாட்டுச்சர்க்கரைத் தூளைக் கலந்து 3 நாள்கள் வரை வைத்திருந்தால் தயிர்க்கரைசல் தயார். 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தயிர்க்கரைசல் கலந்து வளர்ச்சியூக்கியாகக் கைத்தெளிப்பானால் தெளிக்கலாம்.

வடித்த சோறு-
நாட்டுச்சர்க்கரை கரைசல்

3 கிலோ அரிசியைச் சோறாக்கி (கஞ்சியை வடித்துவிடவும்) ஆறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறவைத்த சோற்றை ஒரு மண்பானையில் போட்டு, வாய்ப்பகுதியைத் துணியால் கட்டி விட வேண்டும். நிழலான பகுதியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி தோண்டி பானைக்கு மேல் வைக்கோல் பரப்பி மண்ணால் மூடி 21 நாள்கள் அப்படியே வைக்க வேண்டும். 22-ம் நாள் பானையைத் திறந்துப் பார்த்தால் அதில் பூஞ்சணம் படர்ந்திருக்கும். அதைக் கையால் பிசைந்து அதில் 600 கிராம் நாட்டுச்சர்க்கரையைத் தூளாக்கிப் போட்டு மேலும் 3 நாள்கள் வரை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். 4-ம் நாள் வெளியில் எடுத்துப் பார்த்தால் புளிப்பு மணத்துடன் ஆகியிருக்கும். இதிலிருந்து 300 மி.லியை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் வளர்ச்சிக்குத் தெளிக்கலாம்.ஒரு ஏக்கரில் மாப்பிள்ளைச்சம்பா நெல் சாகுபடி செய்ய மாடசாமி கூறும் செலவு- வரவு கணக்கு (மதிப்பு ரூபாயில்)

என் வாழ்க்கையை மாற்றியதே பசுமை விகடன்தான்!

ஓமனில் வேலை செய்து வரும் மங்களதுரையைத் தொடர்புகொண்டு பேசினோம். “நாங்க விவசாயக் குடும்பம்தான். பி.எஸ்ஸி வேதியியல், எம்.பி.ஏ மார்க்கெட்டிங் முடிச்சுட்டு 15 வருஷமா ஓமனில் செயலாக்கப் பாதுகாப்பு ஆலோசகரா (Processing Safety Advisor) இருக்கேன். ஸ்கூல், காலேஜ் படிச்சபோதே அப்பாவுடன் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். வேதியியல் படிச்சதுனால ரசாயன உரங்களோட பாதிப்புகளைப் பற்றி நல்லாவே தெரியும். ஆரம்பத்துலயே எனக்கு ரசாயன உரத்துமேல ஒரு வெறுப்பு உண்டு. ‘ரசாயன உரத்தைப் பயன்படுத்தாதீங்கப்பா’ன்னு பலமுறை சொல்லியும் கேட்கல. 1989-ல இருந்தே நான் விகடனின் தீவிர வாசகர். பசுமை விகடன் தனி இதழா வெளியான நாள் முதல் இப்போ வரைக்கும் நான் தொடர்ந்து வாசிச்சிட்டு இருக்கேன்.

மங்களதுரை
மங்களதுரை

‘பசுமை’யில் வெளியாகுற கட்டுரைகளைப் படிச்சு இயற்கை முறையில விவசாயம் செய்யுங்கப்பான்னு சொல்லி இயற்கை இடுபொருளையெல்லாம் செஞ்சு கொடுத்தேன். ஆனா அதைப் பயன்படுத்தாம, பழைய மாதிரி ரசாயனத்துப் பக்கம்தான் போனாங்க. ஆனா, எனக்கு இயற்கை விவசாயம் செய்யணும்னு தீராத ஆசை இருந்துகிட்டே இருந்துச்சு. நானே முழுநேரமா இறங்கிடலாம்னா வேலைச்சூழல் ஒத்து வரல. 4 வருஷத்துக்கு முன்னால 6 மாச லீவுல ஊருக்கு வந்தேன். செங்கோட்டையில இயற்கை விவசாயம் செய்யுற ஈஸ்வரமூர்த்தி ஐயா தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அவர், இயற்கை விவசாயத்துனால கிடைக்குற நன்மைகளைச் சொன்னார். கடையநல்லூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் செல்வபிரபு சார், இயற்கை விவசாயத்துனால செலவுகளை எப்படியெல்லாம் குறைக்கலாம்னு சொன்னார்.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

இன்னும் நாலஞ்சு இயற்கை விவசாயப் பண்ணைகளுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவரவர் அனுபவத்தைச் சொன்னாங்க. ஆனாலும், அப்பா அம்மா அரை மனசாத்தான் இருந்தாங்க. ‘நம்ம குடும்பத்துல சுகர், பிரஷர், ரத்த அழுத்தம்னு மாத்திரை சாப்பிடுறவங்க எத்தனை பேரு இருக்காங்க. இது நஞ்சு உணவைச் சாப்பிடுறதுனாலதானே? நாளைக்கு என்னோட பிள்ளைகளும் நோயால கஷ்டப்படணுமா? எனக்காக இல்லாட்டாலும் உங்க பேரன், பேத்திகளுக்காக ரசாயனத்தைக் கைவிடுங்க. நான் காட்டுற இயற்கை பாதைக்கு வாங்க. இது ஒண்ணும் புதுப்பாதை இல்ல. ஏற்கெனவே உங்க அப்பா, தாத்தா காலத்துல கடைப்பிடிச்சதுதான்’னு சொன்ன பிறகு சம்மதிச்சாங்க.

மறுநாளே சந்தோஷத்துல நாலஞ்சு முறை உழவடிச்சு, பலதானிய விதைப்பு விதைச்சேன். முதல் முறை பூத்தப்போ உழுதுட்டு மன நிறைவோடு ஓமனுக்குப் போனேன். ஆனாலும், போன்ல வழிமுறைகளைச் சொல்லிச் செய்ய வெச்சேன். 3 முறை பலதானிய விதைப்பு விதைச்சும், ஒரு மாதம் தொடர்ந்து ஆட்டுக்கிடை போட்டும், மட்கிய எருமைச் சாணத்தை உரமாப் போட்டும் மண்ணை வளப்படுத்தினோம். அதுக்குப் பிறகு, முதல்ல நம்பிக்கை வரட்டும்னு 5 சென்ட்ல காய்கறி, கீரை வகைகளைச் சாகுபடி செய்யச் சொன்னேன். அதுக்குப் பிறகுதான் பாரம்பர்ய நெல்லைச் சாகுபடி செஞ்சோம். அதுல, குழிமுத்து முறையைப் பத்திச் சொன்னது எங்க அம்மாதான். முதல் முறையிலயே கணிசமான மகசூல் எடுத்திருக்கோம். ரொம்ப மன நிறைவா இருக்கு. யாருக்கும் எந்தத் தொழிலும் நிரந்தரமில்லன்னு சொல்வாங்க. இன்னும் நாலஞ்சு வருஷத்துல நானும் ஊர் பக்கமே வந்துடுவேன். அப்படி வரும்போது எனக்கு ‘விவசாயம்’ங்கிற தொழில் இருக்கு. எனக்குச் சரியான பாதையைக் காட்டி இன்னும் என்னை வழி நடத்திக்கிட்டிருக்கிறது, பசுமை விகடனும் நம்மாழ்வார் ஐயாவும்தான்” என்றார் பெருமையுடன்.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

குழி முத்து முறை

நெல் சாகுபடி செய்யப்படும் நிலத்தில் வரிசைக்கு வரிசை, குழிக்கு குழி ஓர் அடி இடைவெளிவிட்டு களைக்கொத்தியால் சுமார் 4 அங்குலத்துக்கு குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழிகளுக்குள் 3 அல்லது 4 நெல் விதைகளைப் போடலாம். குழிக்குள் வளரும் நெல் விதைகளின் வேர்கள் உறுதியாக இருப்பதால்,  வேர் அழுகல் நோய் வராது. கதிர்களில் அதிக சேதாரமும் இருக்காது. இம்முறை சாகுபடியால், நாற்றுகளைப் பிடுங்கி நட வேண்டிய அவசியமில்லை. 10 நாள்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு வந்துவிடும்.