நாட்டு நடப்பு
Published:Updated:

ஏக்கருக்கு ரூ.35,000 லாபம்... மார்கழி மழையிலும் விளைந்த சீரகச் சம்பா!

காட்டுயானம் வயலில்
பிரீமியம் ஸ்டோரி
News
காட்டுயானம் வயலில்

மகசூல்

மார்கழி மாதம் பெய்த எதிர்பாராத தொடர் கனமழை டெல்டா விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த நவீன ரக நெற்பயிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி, நெல்மணிகள் அழுகியும், முளைத்தும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள விழுதியூர் கிராமத்தில் விவசாயி சிங்காரவேல் நான்கு ஏக்கரில் சாகுபடி செய்த பாரம்பர்ய நெல் ரகங்கள், மார்கழி மாத மழையை எதிர்கொண்டு வெற்றிகரமாக விளைந்திருக்கிறது. அதிலும் சீரகச் சம்பா ரகத்தில் ஒரு ஏக்கரில் 18 மூட்டை மகசூல் எடுத்திருக்கிறார். இதுமட்டுமல்ல, அவருடைய மற்றொரு வயலில், இந்த அடைமழையையும் தாண்டி மகசூலை அள்ளிக்கொடுப்பதற்காக ஏழடி உயரத்துக்கு காட்டுயானம் நெற்பயிர் தளதளவென வளர்ந்து நிற்கிறது. இதெல்லாம் அக்கம்பக்கத்து விவசாயிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்த, விஷயத்தைக் கேள்விப்பட்டு, அவரைத் தேடிச் சென்றோம்.

வயலில் தேங்கி நின்ற தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிங்காரவேல், நம்மை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார். ‘‘தொடர்ச்சியா பத்து பதினைஞ்சு நாளா மழை பெய்ஞ்சதுல வயல் முழுக்கத் தண்ணீர் தேங்கிடுச்சு. இது காட்டுயானம்... பயிர் கீழே சாஞ்சாலும்கூட, கதிர்கள் தரையில படுக்கல. வானத்தைப் பார்த்த மாதிரி தலையைத் தூக்கிக்கிட்டு நிக்கிது. இதுதான் காட்டுயானத்தோட சிறப்புனு சொல்லலாம். இந்தப் பகுதிகள்ல எலித் தொல்லை அதிகம். வழக்கம்போல் இந்த வருஷமும் ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன். மார்கழி மழையால் இதுல கொஞ்சம்கூடப் பாதிப்பு ஏற்படல’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘இங்கயிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல இருக்க மகிமாலைதான் என்னோட சொந்த ஊர். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, சிங்கப்பூர்ல ஒரு கப்பல் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். மலேசியா, கத்தார்லயும் சில வருஷம் வேலை பார்த்தேன். சொந்த ஊர்ல வாழணும்ங்கிற ஏக்கம் அதிகமானதுனால, 5 வருஷத்துக்கு முன்னாடி, திரும்பி வந்துட்டேன். இனி விவசாயம்தான் எதிர்காலமா இருக்கப்போகுதுங்கிற எண்ணம் வந்ததுனால, நான் சம்பாதிச்சு சேர்த்து வெச்சப் பணத்துல 15 ஏக்கர் நிலம் வாங்கினேன். முதல் கட்டமா 4 ஏக்கர்ல இயற்கை முறையில பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். மீதி 11 ஏக்கர்ல முடிஞ்சவரைக்கும் ரசாயன உரங்களைக் குறைச்சும், பூச்சிக்கொல்லியை முற்றிலும் தவிர்த்தும் நவீன ரக நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். படிபடியா இயற்கை விவசாயப் பரப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுருக்கேன். இயற்கை விவசாயத்துக்காக இரண்டு மணப்பாறை நாட்டு மாடுகள் வளர்க்குறேன். சம்பா சாகுபடியை தொடங்குறதுக்கு முன்னாடி, அரியலூர் பகுதிகள்ல இருந்து வரும் மலைமாடுகளை வெச்சு நிலத்துல கிடைப்போட வைப்பேன்.

காட்டுயானம் நெல் வயல்
காட்டுயானம் நெல் வயல்

மழை பெய்ஞ்சதும் ஏக்கருக்கு 30 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைச்சு, பூ பூக்குற தருணத்துல மடக்கி உழுவோம். நடவு அன்னைக்கு, ஏற்கெனவே அசோஸ்பைரில் லத்துல கலந்து மேம்படுத்தித் தயாராக வெச்சிருக்கக்கூடிய ஆட்டு எரு 500 கிலோ போட்டு, நடவு செய்வோம். காட்டுயானத்தைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு இடு்பொருளுமே கொடுக்குறதில்லை. இதோட வளர்ச்சி ரொம்ப வேகமா இருக்கு. சரசரனு வளர்ந்து, கதிர் வர்ற சமயத்துல பயிரோட உயரம் 7 அடிக்கு வந்துடுது. இதுக்கே இப்படினா, இடு்பொருள்கள் கொடுத்தால் சமாளிக்க முடியாது. தண்டு உருளும் பருவத்துலயே, மழை, புயல் வந்துட்டா, பயிர் சாஞ்சு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுங்கிற பயத்துனால, இதுக்கு எந்த இடுபொருளும் கொடுக்குற தில்லை. காட்டுயானத்துக்குக் களை எடுக்குறதும்கூட இல்லை. பயிர் நல்லா வேகமா உயரமா வளர்றதுனாலயும், அதிக எண்ணிக்கையில் தூர் வெடிக்குறதுனாலயும், களைகளை இது கட்டுப்படுத்திடுது.

சீரகச் சம்பாவைப் பொறுத்தவரைக்கும், இது சன்ன ரகம்ங்கிறதுனால, கொஞ்சம் கவனிப்பு அதிகம். நிலத்தை நல்லா உழவு செஞ்சு, ஏற்கெனவே உள்ள களைகளை நல்லா ஓட்டி, அழுக வெச்சிடணும். 18-ம் நாள் முதல் களையும் 35-40 நாள்கள்ல இரண்டாம் களையும் கண்டிப்பாக எடுத்தாகணும். கடந்த ஆண்டுகள்ல இதை ஒழுங்கா செஞ்சதுனால, ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைச்சுது. ஆனா, இந்த ஆண்டு, உழவு ஓட்டும்போது, மழைநீர் அதிகமா தேங்கி இருந்ததுனால, களைகள் முழுமையாகக் கண்டுபுடிச்சு ஓட்ட முடியலை. நடவு செஞ்ச 18-ம் நாள் முதல் களை எடுத்துட்டோம், ஆனா, இரண்டாம் களை எடுக்க வேண்டிய சமயத்துல தொடர்ச்சியா மழை பெய்ஞ்சிக்கிட்டே இருந்ததுனால, களை எடுக்க, ஆள்கள் கிடைக்கல.

சீரகச் சம்பா நெல்லுடன் சிங்காரவேல்
சீரகச் சம்பா நெல்லுடன் சிங்காரவேல்

சீரகச் சம்பாவோட வளர்ச்சி வேகம் குறைவு. களைகள் அதிகமாகி, பயிரை அமுக்கிடுச்சு. சீரகச் சம்பாவை வெற்றிகரமாக விளைவிக்க, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் மேலாண்மை செய்றது ரொம்ப அவசியம். இது தவிர்க்க முடியாதது. ஆனா, இதுமாதிரி செய்றப்ப, அதிகமாகக் களைகள் மண்டும். சரியான தருணத்துல களைகளை அப்புறப்படுத்துறது ரொம்ப அவசியம். இரண்டாம் களை எடுக்க முடியாததுனால, இந்த ஆண்டு மகசூல் குறைஞ்சு ஏக்கருக்கு 18 (60 கிலோ) மூட்டை மட்டும் கிடைச்சிருக்கு. ஆனா, எனக்கு இதுலயே நிறைவான லாபம் கிடைச்சிடும்.

ஆளுயரத்துக்கு வளர்ந்திருக்கும் காட்டுயானம் நெற்பயிர்
ஆளுயரத்துக்கு வளர்ந்திருக்கும் காட்டுயானம் நெற்பயிர்

புழுங்கல் அரிசியாக விற்பனை

சீரகச் சம்பாவைப் பெரும்பாலும், பிரியாணிக்காகப் பச்சரிசியாகத்தான் விற்பனை செய்வாங்க. ஆனால், நான் புழுங்கல் அரிசியாகத் தயார் செஞ்சி விற்பனைச் செய்றேன். புழுங்கல் அரிசி குலைஞ்சிப் போகாது. வாசனையும் சுவையும் அதிகமாக இருக்கும். அறுவடை செஞ்ச நெல்லை நல்லா காய வெச்சு, சணல் சாக்குல கட்டி, ரெண்டு மாசத்துக்கு அப்படியே வெச்சிடுவோம். சீரகச் சம்பாவை புழுங்கல் அரிசியாகத் தயார் செய்றது சிரமமான காரியம். நெல்லை ஊற வெச்சு, சரியான பதத்துல வேக வெச்சு, வெயில்ல காய வெச்சு, சரியான பதத்துல அரைச்சாகணும். வழக்க மான ஆலைகள்ல, ஏற்கெனவே இதுல நல்ல அனுபவம் இருக்கப் பழைய ஆள்கள் இருந்தால்தான் இது சாத்தியம். எங்க பகுதி மில்லுல இதுக்கான அனுபவம் பெற்றவங்க இருக்காங்க.

ஏக்கருக்கு ரூ.35,000 லாபம்...
மார்கழி மழையிலும் விளைந்த சீரகச் சம்பா!

60 கிலோ நெல்லை கொடுத்தோம்னா, 30 கிலோ புழுங்கல் அரிசி, 12 கிலோ தவிடு, ஒரு கிலோ குருணை கொடுப்பாங்க. ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் 100 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு மூட்டைக்கு 3,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணையோட விலை மதிப்பு 170 ரூபாய். ஆக ஒரு மூட்டை நெல்லுல இருந்து, 3,170 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல கிடைச்ச 18 மூட்டை நெல்லு மூலமாக 57,060 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, அரவைக் கூலி போக ஏக்கருக்கு 35,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர்ல சாகுபடி செஞ்ச சீரகச் சம்பா மூலம் 87,500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

நெல் மணிகள்
நெல் மணிகள்

காட்டுயானத்தைப் பொறுத்தவரைக்கும் ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைக்கும். ஒன்றரை ஏக்கர்ல காட்டுயானம் சாகுபடி செய்றது வழக்கம். கடந்த ஆண்டு மொத்தம் 36 மூட்டை மகசூல் கிடைசக்சது. அதுல 18 மூட்டை நெல்லை, புழுங்கல் அரிசியாக மாத்தி விற்பனை செஞ்சேன். இட்லி தோசைக்குக் காட்டுயானம் அருமையாக இருக்கும். ஒரு மூட்டை நெல்லுல இருந்து 30 கிலோ அரிசி, 12 கிலோ தவிடு, ஒரு கிலோ குருணை கிடைச்சது. ஒரு கிலோ அரிசி, 70 ரூபாய் வீதம் 2,100 ரூபாய் வருமானம் கிடைச்சது. தவிடு, குருணையோட விலை மதிப்பையும் சேர்த்தால், ஒரு மூட்டை நெல்லுல இருந்து 2,255 ரூபாய் வருமானம் கிடைச்சது. 18 மூட்டை நெல்லுல இருந்து மொத்தம் 40,590 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதி 18 மூட்டை நெல்லை, விதைநெல்லா தயார் செஞ்சு விற்பனை செஞ்சோம். அதை நல்லா காய வெச்சு, சுத்தமாகப் புடைச்சதுல, தரமான விதைநெல்லாக 15 மூட்டை தேறிச்சு. ஒரு கிலோ விதைநெல் 70 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, ஒரு மூட்டைக்கு 4,200 ரூபாய் வீதம் 15 மூட்டைக்கு 63,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆனால் விதைநெல்லை, உடனடியாக விற்பனை செய்ய முடியாது. சணல் சாக்குல கட்டி வெச்சு, சேமிச்சு வெச்சிருந்து, அடுத்த சம்பா பட்டத்துக்கு முன்னாடிதான் விற்பனை செய்ய முடியும். ஆகக் கடந்த ஆண்டுச் சாகுபடி செஞ்ச ஒன்றரை ஏக்கர் காட்டுயானம் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல செலவு போக, 65,000 ரூபாய் லாபம் கிடைச்சது. இந்த வருஷம் காட்டுயானத்துல 20-24 மூட்டை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

காட்டுயானம் 
நெல் வயலில் 
சிங்காரவேல்
காட்டுயானம் நெல் வயலில் சிங்காரவேல்

அதிக இடைவெளி

என்னோட அனுபவத்துல பாரம்பர்ய நெல் ரகங்களைப் பொறுத்தவரைக்கும் அதிக இடைவெளி கொடுக்குறது ரொம்ப முக்கியம். இதனால் தூர்கள் அதிகமாக வெடிக்கும். பொதுவா பயிர்கள் நெருக்கமாக இருந்தால் மழை, புயல் காலங்கள்ல ஒரு பயிர் கீழே சாஞ்சாலே, அடுத்தடுத்த பயிர்கள் மேல சாஞ்சி கணம் ஏறி, நிலம் முழுக்கவே பயிர்கள் பாதிக்கப்படும். காட்டுயானத்துக்கு வரிசைக்கு வரிசை 2 அடி, குத்துக்குக் குத்து ஒன்றரையடி அடி இடைவெளி விட்டு ஒற்றை நாற்று முறையில நடவு செஞ்சோம். சீரகச் சம்பாவுக்கு வரிசைக்கு வரிசை ஒன்றரையடி குத்துக்குக் குத்து ஒரு அடி இடைவெளி விட்டு, 2-3 நாற்றுகள் நடவு செஞ்சோம்.

புதிய முயற்சி

பாரம்பர்ய ரக அரிசியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எளிமையாகக் கொண்டு செல்ல, அரைக்கிலோ, ஒரு கிலோ பைகள்ல போட்டு மளிகைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் முயற்சியில இந்த வருஷம் இறங்கப் போறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் சிங்காரவேல்.

தொடர்புக்கு, சிங்காரவேல், செல்போன்: 99408 28876

ஏக்கருக்கு ரூ.35,000 லாபம்...
மார்கழி மழையிலும் விளைந்த சீரகச் சம்பா!

மேம்படுத்தப்பட்ட ஆட்டு எரு தயாரிப்பு

500 கிலோ ஆட்டு எருவை நன்கு இடித்துத் தூளாக்க வேண்டும். டிராக்டரை ஏற்றி எளிதாக இதைச் செய்யலாம். இதோடு ஒரு லிட்டர் அசோஸ்பைரில்லம் திரவத்தைக் கலந்து, சணல் சாக்கு போட்டு மூடி 6 மணிநேரம் நிழலில் வைத்திருந்தால், மேம்படுத்தப்பட்ட ஆட்டு எரு தயார். இதைப் பயன்படுத்தினால் நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைந்து, மண்ணை வளப்படுத்தும்.

இயற்கை நெல் சாகுபடி

ரு ஏக்கரில் சீரகச் சம்பா சாகுபடி செய்வதற்கான தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன.

5 சென்ட் நிலத்தில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். தண்ணீர் கட்டி, உழவு ஓட்டி மண்ணை நன்கு சேறாக்கி, 3 நாள்களுக்குப் பழஞ்சேறாக ஆக்க வேண்டும். களைகளை அப்புறப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட ஆட்டு எரு 50 கிலோ போட வேண்டும். பனை மட்டையால் மண்ணைச் சமப்படுத்த வேண்டும். 3-4 மணிநேரத்தில் வண்டல் அடங்கி, தண்ணீர் தெளிவான பிறகு, பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்யப்பட்ட 10 கிலோ விதைநெல்லை நாற்றாங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். 10-ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீரில் கலந்து விட வேண்டும். 15-ம் நாள் 50 மி.லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 25-28 நாள்களில் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவு தயாராக இருக்கும்.

சீரகச் சம்பா நெல்
சீரகச் சம்பா நெல்

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஏக்கருக்கு 800-1000 மலை மாடுகளைக் கொண்டு கிடை அமைக்க வேண்டும். அடுத்து மழை ஈரத்தில் 30 கிலோ தக்கைப்பூண்டு விதைத்து, பூ பூக்கும் தருணத்தில் நிலத்தில் தண்ணீர் கட்டி மடக்கி உழவு செய்ய வேண்டும். நடவின்போது, 500 கிலோ மேம்படுத்தப்பட்ட ஆட்டு எருவைப் போட்டு, பனை மட்டையால் மண்ணைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை ஒன்றரையடி குத்துக்குக் குத்து ஒரு அடியும் இடைவெளிவிட்டு, 2-3 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். 15-20 நாள்களில் வேர் வழி ஊட்டமாக, பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும். 18-ம் நாள் களையெடுக்க வேண்டும். 25-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தின்போது 120 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். சீரகச் சம்பாவின் மொத்த வயது விதைப்பிலிருந்து 135 நாள்கள். இந்த ஆண்டு 2.5 ஏக்கரில் சீரகச் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளேன். காட்டுயானம் மொத்த வயது 180 நாள்கள். இந்த ஆண்டு 1.5 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள காட்டுயானம் இன்னும் 15 நாளில் அறுவடைக்கு வரும்.

பூச்சித்தாக்குதலே இல்லை

பொதுவாகவே பாரம்பர்ய நெல் ரகங்கள்ல பூச்சித்தாக்குதல் இருக்காது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாற்று நடவு செஞ்ச அடுத்த சில நாள்களிலேயே ஏக்கருக்கு 20 இடங்களில் பனை மட்டைகளைப் பயன்படுத்தி, பறவைத் தாங்கி அமைக்க வேண்டும்.