நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

1 ஏக்கர் 27 சென்ட்... இருபோகம்... ரூ.87,000 லாபம்! பாரம்பர்ய நெல் சாகுபடியில் பலே வருமானம்!

பூங்கார் நெல்லுடன் ஜோசப் பாஸ்டின்
பிரீமியம் ஸ்டோரி
News
பூங்கார் நெல்லுடன் ஜோசப் பாஸ்டின்

மகசூல்

சாயன முறையில் சாகுபடி செய்யப் படும் நெல் ரகங்கள்போல் இயற்கை முறையில் மகசூல் கிடைக்குமா? பாரம்பர்ய நெல் ரகங்களை எளிதாக விற்பனை செய்ய முடியுமா? இதுபோன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், ராயம்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஜோசப் பாஸ்டினுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது போன்ற சந்தேகங்கள் இருந்திருக்கின்றன. ‘கல்வி கற்றுக் கொடுக்காததையும் களம் கற்றுக் கொடுக்கும்’ என்று நம்பியவர் களத்தில் இறங்கியிருக்கிறார். அதன் முடிவு அவரை மட்டுமல்ல, அந்தப் பகுதி விவசாயிகளையே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். அறுவடை செய்த நெல்லைச் சுத்தம் செய்துகொண்டிருந்த ஜோசப் பாஸ்டின், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘நான் பசுமை விகடனை விரும்பிப் படிப்பேன். ஆனா, இதுல சொல்ற அளவுக்கெல்லாம், இயற்கை விவசாயத்துல குறிப்பா, பாரம்பர்ய நெல் ரகங்கள்ல லாபம் கிடைக்குமா? இதுல எழுதறதெல்லாம் எந்தளவுக்கு உண்மையா இருக்கும்னு எனக்குள்ளாற சந்தேகம் இருந்துகிட்டே இருந்துச்சு. ஆனா, நூற்றுக்கு நூறு உண்மைங்கிறதை என்னோட அனுபவத்துல உணர்ந்து நெகிழ்ந்து போயிட்டேன்.

38 மூட்டை மகசூல்

இந்த வருஷம் குறுவையில 1 ஏக்கர் 27 சென்ட் நிலத்துல 38 மூட்டைகள் (1 மூட்டை 60 கிலோ) மகசூல் கிடைச்சிருக்கு. அதைப் பார்த்து மத்த இயற்கை விவசாயிகளே ஆச்சர்யப்படுறாங்க. இடுபொருள் மேலாண்மையில நான் கூடுதலா கவனம் செலுத்துறதுனாலதான் இது சாத்திய மாகியிருக்கு. மண் வளத்தைப் பெருக்குற துக்காக மட்டுமல்ல... சாகுபடி செலவைக் குறைக்குறதுக்காகவும் இடுபொருள் மேலாண்மையில் விவசாயிகள் சிறப்புக் கவனம் செலுத்தணுங்கறதுதான் என்னோட தனிப்பட்ட அனுபவம். தாளடியிலயும் பாரம்பர்ய நெல் ரகம்தான் சாகுபடி செய்றோம். அதுலயும் நிறைவான மகசூல் கிடைக்குது. நான் பயன்படுத்தக்கூடிய இயற்கை இடுபொருள்களால், எங்களோட தென்னை, வாழை பயிர்களும்கூட நிறைவான வருமானத்தைக் கொடுத்துக்கிட்டு இருக்கு’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பூங்கார் நெல்லுடன் ஜோசப் பாஸ்டின்
பூங்கார் நெல்லுடன் ஜோசப் பாஸ்டின்

‘‘சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். பள்ளிக்கூடம் போறப்ப தினமும் காலையில வயலுக்கு வந்து, மோட்டை (எலிகளால் ஏற்படும் பொந்துகள்) மிதிச்சிட்டுதான் பள்ளிக்கூடத்துக்கே போவேன். 12-ம் வகுப்புவரைக்கும் படிச்சிட்டு, பிறகு விவசாயத்துல இறங்கிட்டேன். ஆனா, கொஞ்ச நாள்லயே விவசாயத்து மேல வெறுப்பாகிடுச்சு. காரணம், அதிக செலவு, உழைப்புக்கு ஏத்த வருமானம் கிடைக்கல. இதனால விவசாயமே வேண்டாம்னு முடிவெடுத்தேன். எங்களோட 7 ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு, வெளிநாட்டுக்கு, வேலைக்குப் போயிட்டேன்.

மாற்று வழி சொன்ன மருத்துவர்

அங்க இருந்தப்பதான் எனக்கு பசுமை விகடன் அறிமுகமாச்சு. ஆர்வமா படிச்சிக்கிட்டு இருந்தேன். இயற்கை விவசாயத்து மேல மதிப்பு அதிகமாச்சு. ஆனால், மிகைப்படுத்தி எழுதுறாங்களோனு தோணும். இதுக்கிடையில, வேலைப் பளுவால், எனக்கு மன உளைச்சல் அதிகமாகி, லேசான மாரடைப்பு வந்துச்சு. அதனால 2011-ம் வருஷம் சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதயநோய்னு நிறைய பிரச்னைகள் இருந்ததுச்சு. அதனால, மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளாறயே முடங்கிக் கிடந்தேன். இந்தச் சமயத்துலதான், மருத்துவர் சொன்ன ஒரு யோசனை, என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திச்சு. ‘எப்பவும் மரஞ்செடிக் கொடிகளைப் பத்தியே ஆர்வமாகப் பேசிக்கிட்டு இருக்கீங்க... விவசாயம் செஞ்சா, உங்க உடல்நிலையும் மனநிலையும் சரியாகிடும்’னு சொன்னார்.

அவர் சொன்னது போலவே நடந்துச்சு. இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்குறதுனால மட்டுமல்லாம வாரத்துக்கு 3 நாள் பூங்கார் அரிசி கஞ்சி, தூயமல்லி அரிசி சாப்பாடுனாலயும், என்னோட உடல்நிலை இப்ப ஆரோக்கியமாக இருக்கு. இப்ப மருந்து மாத்திரைகளே சாப்பிடுறதில்ல’’ என்றவர், தனது சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘சோதனை முயற்சியாகத்தான் 2015-ம் வருஷம் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். என்கிட்ட மாடுகள் கிடையாது. நண்பர்கள்கிட்ட இருந்து, மாட்டுச் சாணமும், மாட்டுச் சிறுநீரும் இலவசமாகவே கிடைக்குது. முதல் வருஷம் மாட்டு எருவை, நேரடியா அதிக அளவுல பயன்படுத்தினேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தமும் அதிகமா கொடுத்தேன். ஆனாலும்கூட குறுவையில் சாகுபடி செஞ்ச பூங்கார்ல ஏக்கருக்கு 22 மூட்டை, தாளடியில் சாகுபடி செஞ்ச தூயமல்லி 18 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. அதுக்கு அடுத்த வருஷத்துல இருந்துதான் இடுபொருள் மேலாண்மையில் கூடுதலாகக் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

இடுபொருள்
இடுபொருள்

இடுபொருள் மேலாண்மை

கோடையில அடியுரமா 4 டன் எரு போட்டு, புழுதி உழவு ஓட்டி, தக்கைப்பூண்டு சணப்புத் தெளிச்சேன். 45-ம் நாள் பூப்பூக்கும் தருணத்துல மடக்கி உழுதுட்டு, ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ‘வேஸ்ட் டி கம்போஸர்’ கரைசலை பாசன தண்ணில கலந்து விடுவேன். நாற்று நடவு செஞ்ச பிறகு, எருவோடு ‘வேஸ்ட் டி கம்போஸர்’ கலந்து, மேம்படுத்தப்பட்ட தொழுவுரம் தயார் பண்ணிடுவேன். அதோடு பஞ்சகவ்யா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து தலா 10 நாள் இடைவெளியில 3 தடவைக் கொடுப்பேன்.

அடுத்த 10 நாள்கள் கழிச்சு, இதே கலவையுடன் கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு கரைசலை கலந்து தெளிப்பேன். இதனால பயிர் நல்லா செழிப்பா, பூச்சி, நோய் எதிர்ப்பு திறனோட வளர்ந்து, நல்லா வாளிப்பான நெற்கதிர்களும் கிடைக்குது. கொஞ்சம்கூடப் பதர்கள் இல்லாம நெல்மணிகள் திரட்சியா கிடைக்குது.

குறுவை அறுவடை முடிஞ்சதும், தண்ணி கட்டி, ஏக்கருக்கு 200 லிட்டர் ‘வேஸ்ட் டி கம்போஸர்’ கரைசல் கலந்து விடுவேன். வயல்ல இருக்கத் தாள்கள் சீக்கிரமா மட்கி, மண்ணுக்கு உரமாகிடும். களைகளும் கட்டுப்படும். தாளடியைப் பொறுத்த வரைக்கும், அடியுரம் போடவோ, பசுந்தாள் விதைக்கவோ கால அவகாசம் இருக்காது. உழவு ஓட்டி நிலத்தைச் சமப்படுத்தி, தூயமல்லி ரக நெல் நடவு செய்வோம். ஏற்கெனவே குறுவைக்குக் கொடுத்த மாதிரியே இடுபொருள்கள் கொடுப்போம்’’ என்றவர், வருமானக் கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

1 ஏக்கர் 27 சென்ட்... 
இருபோகம்... 
ரூ.87,000 லாபம்!
பாரம்பர்ய நெல் சாகுபடியில் 
பலே வருமானம்!


வருமானம்

“1 ஏக்கர் 27 சென்ட்ல கிடைச்ச 38 மூட்டைப் பூங்கார் நெல்லுல, 4 மூட்டை நெல்லை வீட்டுத்தேவைக்கு வச்சுகிட்டோம். அதுல விதைநெல்லுக்கு எடுத்துக்கிட்டது போக மீதியை அரிசியாக்கி, வாரத்துல மூணு நாள்கள் கஞ்சி வச்சிக் குடிப்போம். மீதியுள்ள 34 மூட்டை நெல்லை, ஒரு மூட்டை 1,500 ரூபாய்னு, விற்பனை செஞ்சது மூலமாக, 51,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. வீட்டுத் தேவைக்கு எடுத்துகிட்டதையும் சேர்த்து மொத்தம் கிடைச்ச 38 மூட்டைப் பூங்கார் நெல்லோட மதிப்பு 57,000 ரூபாய். 40 கட்டு வைக்கோல் கிடைச்சது. ஒரு கட்டு 80 ரூபாய். அதோட விற்பனை மூலமா 3,200 ரூபாய் வருமானம். ஆக மொத்தம் 1 ஏக்கர் 27 சென்ட் பூங்கார் நெல் சாகுபடி மூலமா 60,200 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு போக 38,000 ரூபாய் லாபம்.

தாளடியில அதே நிலத்துல 30 மூட்டை தூயமல்லி மகசூல் கிடைக்கும். நாங்க கூட்டுக்குடும்பம். அதனால தூயமல்லி முழுக்க எங்க வீட்டுத் தேவைக்கு அரிசியாக்கி வச்சுக்குவோம். 960 கிலோ அரிசி கிடைக்கும். அதை விற்பனை செஞ்சா, அரிசி கிலோ 70 ரூபாய் வீதம் 67,200 ரூபாய். குருணை, வைக்கோல் விலைமதிப்பு 12,000 ரூபாய். ஆக மொத்தம் 79,200 ரூபாய் மதிப்பு. சாகுபடி செலவு, அரவைக்கூலி, போக்குவரத்து, இதர செலவுகள் எல்லாம் போக, ஏக்கருக்கு 49,000 ரூபாய் கிடைக்கும்.

ஒரு வருஷத்துக்கு இருபோகம் நெல் சாகுபடி மூலம் 87,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இதைத் தவிர மூன்றரை ஏக்கர்ல 300 தென்னை மரங்கள் இருக்கு. வருஷத்துக்கு ஒரு மரத்திலிருந்து 160 காய்கள் கிடைக்குது. ஒரு காய் குறைந்தபட்சம் 10 ரூபாய் விலையில 4,80,000 ரூபாய் கிடைக்கும். பறிப்புக்கூலி, போக்குவரத்து செலவுபோக 3,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த வருமானம் தனி’’ என்றவர் நிறைவாக,

தென்னைச் சாகுபடி
தென்னைச் சாகுபடி

‘‘என்னோட பாரம்பர்ய நெல்லுக்கு, வியாபாரிகள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. பாரம்பர்ய அரிசி, நெல்லை வாங்கி விற்பனை செய்றதுக்குனே நிறைய வியாபாரிகள் உருவாகிட்டாங்க. இயற்கை விவசாயிகளுமே இந்த வணிகத்துல ஈடுபட ஆரம்பிச்சிட்டாங்க. இதனால ஏகப்பட்ட போட்டி. நிறைய பேர் கேட்குறாங்க. அறுவடைக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லி வச்சிடுறாங்க. உடனடியாகப் பணமும் கையில் கொடுத்திடு றாங்க. இதைத் தவிர, எங்க பகுதி மக்களும் வீட்டுத்தேவைக்காக, பாரம்பர்ய நெல்லும் அரிசியும் கேட்குறாங்க. என்னால் அந்தளவுக்கு உற்பத்தி செஞ்சிக் கொடுக்க முடியல. அடுத்தடுத்த வருஷங்கள்ல சாகுபடி பரப்பைப் படிப்படியா அதிகப்படுத்தலாம்னு இருக்கேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,

ஜோசப் பாஸ்டின்,

95851 53302.

ஒரு ஏக்கரில் இயற்கை முறையில்
பூங்கார் நெல் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்...

நாற்று உற்பத்தி

இயந்திர நடவுக்காக, 3 சென்ட் பரப்பில் பாய் நாற்றாங்கால் அமைத்து, அடியுரமாக 30 கிலோ மண்புழு உரம் இட வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட 30 கிலோ விதை நெல்லைப் பரவலாகத் தெளிக்க வேண்டும். ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாற்றுகளில் இழப்பு ஏற்பட்டால், அதைச் சமாளிக்க இந்தளவுக்கு அதிக அளவில் விதைநெல் விடுவது கைகொடுக்கும். விதைநெல் தெளித்த பிறகு, வைக்கோல் போட்டு மூடி, 3 நாள்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு, வைக்கோலை எடுத்துவிட்டு, தேவைக்கேற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். 16 முதல் 18 நாளில் நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் மாட்டு எரு போட்டு, புழுதி உழவு ஓட்டி, சணப்பு, தக்கைப்பூண்டு கலந்து 5 கிலோ தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது, 200 லிட்டர் வேஸ்ட் டி கம்போஸர் கரைசலைக் கலந்து தண்ணீர் கட்ட வேண்டும். ஒரு வாரம் கழித்து, நன்கு உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். இயந்திரம் மூலம் முக்கால் அடி இடைவெளியில் குத்துக்குக் குத்து 3 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும். 10, 20 மற்றும் 30-ம் நாளில் 150 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 1 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து, தண்ணீர் தெளித்து, சணல் சாக்குப் போட்டு மூடி வைக்க வேண்டும். புட்டுப்பதத்தில் இருக்குமாறு தேவைக்கேற்ப தண்ணீர் தெளிக்க வேண்டும். 5 நாள்களுக்குப் பிறகு, இதை வயலில் தூவ வேண்டும்.

40-ம் நாள் ஊட்டமேற்றிய தொழுவுரத்துடன் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா கலந்துகொள்ள வேண்டும். 35 லிட்டர் தண்ணீரில் தலா 5 கிலோ கடலைப் பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கை 5 நாள்கள் ஊற வைத்து, அதையும் மேலே சொன்ன கலவையுடன் கலந்து தெளிக்க வேண்டும். ஆரம்பத்தில் தழைச்சத்து அதிகம் தேவை என்பதால் அசோஸ்பைரில்லத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். பயிர்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு மணிச்சத்து தேவை என்பதால், 4-ம் முறை பாஸ்போ பாக்டீரியாவின் அளவை அதிகப்படுத்த வேண்டும். வேப்பம்பிண்ணாக்கு கொடுப்பதால், பூச்சி, நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.

கடலைப்பிண்ணாக்கு கலப்பதால், வாளிப்பான நெற்கதிர்கள் உருவாகி, திரட்சியான நெல்மணிகள் கிடைக்கும். பூப்பூக்கும் தருணத்தில் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். மறுநாள் வண்ணத்துப்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதனால் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, மகசூல் அதிகரிக்கும்.

“பூச்சிவிரட்டிகூட தேவைப்படல!”

‘‘இந்தப் பகுதியில ரசாயன முறையில சாகுபடி செய்யக்கூடிய நெற்பயிர்கள்ல, குருத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழு, குலைநோய், புகையான் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இத சமாளிக்க நிறைய பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பாங்க. ஆனா, என்னோட பாரம்பர்ய நெற்பயிர்கள்ல எந்தத் தொந்தரவுமே ஏற்பட்டதில்ல. இதனால் இயற்கை பூச்சிவிரட்டிகூட தேவைப்படல. ரசாயன உரங்களைத் தவிர்க்கிறதுனாலயும், பாரம்பர்ய நெல் ரகங்கள்ல சுணை அதிகமாக இருக்குறதுனாலயும் பூச்சி தொந்தரவுகள் ஏற்படுறதில்ல’’ என்கிறார் ஜோசப் பாஸ்டின்.

ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிப்பு

200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ நாட்டுச் சர்க்கரை கலந்து, அதனுடன் 20 மி.லி ‘வேஸ்ட் டி கம்போஸர்’ தாய் திரவத்தை ஊற்றி கலக்கிவிட்டு, சணல் சாக்குப்போட்டு மூடி வைக்க வேண்டும். தினமும் இருவேளை கலக்கி விட வேண்டும். 8 நாள்களில் கரைசல் நன்கு நொதித்து, மணம் வீசும். இதிலிருந்து 180 லிட்டர் கரைசலை மட்டும் எடுத்து, நன்கு கிளறிவிடப்பட்ட 5 டன் சாணத்தின் மீது ஊற்றி, மீண்டும் கிளறிவிட வேண்டும். ஏற்கெனவே மிச்சம் வைக்கப்பட்ட 20 லிட்டர் கரைசலோடு, 2 கிலோ நாட்டுச் சர்க்கரை, 180 லிட்டர் தண்ணீர் கலந்து 8 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சாணத்தின் மீது தெளிக்க வேண்டும். இதுபோல் மூன்று முறை செய்தால், நுண்ணுயிரிகள் நன்கு பெருகி, ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாராகிவிடும். இதை ஒரு வருடம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.