Published:Updated:

"சிலர் வீடு தேடிவந்து வாங்கிட்டுப் போறாங்க!" - பாரம்பர்ய நெல் சாகுபடியில் பூரிக்கும் ரகுபதி!

பாரம்பர்ய நெல்
பாரம்பர்ய நெல்

நெல்லை அப்படியே விக்கிறதைவிட மதிப்புக்கூட்டி விற்றால்தான் அதிக லாபம் கிடைக்கும்கிறதை அனுபவத்துல உணர்ந்திருக்கேன்

இயற்கை விவசாயத்தில் துணிந்து இறங்கி, நெல் சாகுபடி செய்துவருகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சிறுநகர் கிராமத்திலுள்ள ரகுபதியை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். பருவமழையின் உபயத்தால் நிலத்தில் தண்ணீரைத் தேக்கி, உழவுப் பணியிலிருந்த ரகுபதி உற்சாகமாகப் பேசினார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Xwxvxl

"எனக்குச் சிறுநகர்தான் சொந்த ஊரு. விவசாயம்தான் தொழில். சொந்தமாக நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 1.25 ஏக்கர்ல மீன் குட்டைகள், கிணறு, தென்னை, தேக்கு, குமிழ் மரங்கள் இருக்கு. மீதியிருக்கும் நிலத்தில நெல் விவசாயம் செய்யறேன். இதோடு ஒரு ஏக்கர் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயம் செய்யறேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்னால நெல் ஜெயராமன் நடத்தின நெல் திருவிழாவுல கலந்துகிட்டேன். அப்போதான் பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல ஆர்வம் வந்தது. இயற்கை விவசாயத்தோடு பாரம்பர்ய நெல் சாகுபடியையும் நாலு வருஷத்துக்கு முன்னால தொடங்கினேன்" என்று இயற்கை விவசாயத்துக்குத் தான் வந்த கதையைச் சொன்னவர் தொடர்ந்தார்.

விவசாயம்
விவசாயம்

"நெல் திருவிழாவுல ரெண்டு கிலோ ஆத்தூர் கிச்சிலிச் சம்பா விதையை வாங்கிட்டு வந்து மூணு வருஷத்துக்கு முன்னாடி பயிரிட்டேன். முதல் வருஷத்துல ஏக்கருக்கு பத்து மூட்டை நெல்தான் கிடைச்சது. இதை நெல்லாக வித்திருந்தா ஏக்கருக்கு 10,000 ரூபாய்தான் கிடைச்சிருக்கும். அதனால மதிப்புக்கூட்டி வித்தேன். அது மூலமா 24,000 ரூபாய் கிடைச்சது. ரெண்டாவது வருஷம் 12 மூட்டை நெல் கிடைச்சது. அதுக்கும் பெரிய செலவு இல்லை. மூணாவது வருஷம் ஜீவாமிர்தக் கரைசலைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதனால 15 மூட்டை நெல் கிடைச்சது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

இப்படி ஒவ்வொரு வருஷமும் மகசூல் அதிகரிச்சதோடு, மண்ணோட வளமும் கூடிக்கிட்டே போகுது. இந்த வருஷமும் தழைச்சத்துக்காகப் பசுந்தாள் உரமாக ஏக்கருக்கு அஞ்சு கிலோ அவுரி விதைகளை விதைச்சிருக்கோம். அவுரி செழிப்பா, அடர்த்தியா விளைஞ்சிருக்கு. அதனால இந்த முறை இருபது மூட்டை நெல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

பாரம்பர்ய ரக நெல்லுக்குப் பூச்சி மருந்து, ரசாயன உரம், பராமரிப்புச் செலவு எதுவும் தேவைப்படுறதில்லை. மத்த ரகங்களைவிட ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவுக்கு நல்ல டிமாண்டு இருக்கு. சில பேரு வீட்டைத் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. எனக்கு இந்த வருஷம் மாவட்ட அளவில் சிறந்த நெல் விவசாயிக்கான விருதும் சான்றிதழும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வழங்கியிருக்கு" என்று பூரிப்படைந்தவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

"சிலர் வீடு தேடிவந்து வாங்கிட்டுப் போறாங்க!" - பாரம்பர்ய நெல் சாகுபடியில் பூரிக்கும் ரகுபதி!

"நெல்லை அப்படியே விக்கிறதைவிட மதிப்புக்கூட்டி விற்றால்தான் அதிக லாபம் கிடைக்கும்கிறதை அனுபவத்துல உணர்ந்திருக்கேன். கடந்த போகத்துல ஏக்கருக்கு 15 மூட்டை நெல் கிடைச்சது. அதை அரிசியாக்கினபோது 600 கிலோ அரிசி கிடைச்சது. அதை 25 கிலோ அரிசி சிப்பமாக்கியதுல 24 சிப்பம் (25 கிலோ) கிடைச்சது. இதைச் சந்தையில 1,800 ரூபாய்க்கு விக்கிறாங்க. நான் 1,600 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். அது மூலமா 38,400 ரூபாய் கிடைச்சது. இதுல 18,050 ரூபாய் செலவு போக 20,350 ரூபாய் லாபம் கிடைச்சது. இந்த லாபம் குறைவுன்னாலும், அடுத்தடுத்த போகங்கள்ல மகசூல் கூடும். பாரம்பர்ய ரகங்கள்ல ஏக்கருக்கு 50,000 ரூபாய் லாபம் சம்பாதிக்கணும்கிற நோக்கத்தோடு உழைச்சிட்டு இருக்கேன்" நம்பிக்கையோடு சொல்கிறார் ரகுபதி.

- நெல் சாகுபடி குறித்து ரகுபதி சொன்ன தகவல்கள் பாடமாக பசுமை விகடன் இதழில் தொகுக்கப்பட்டுள்ளன. அதை முழுமையாக வாசித்து அறிய > விருது வாங்கிக் கொடுத்த பாரம்பர்ய நெல் சாகுபடி! https://www.vikatan.com/news/agriculture/traditional-paddy-cultivation-through-organic-farming

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

பின் செல்ல