Published:Updated:

`பொன்னைப் போல மின்னுது என்னோட மண்ணு!' -பாரம்பர்ய நெல் ரக விளைச்சலால் உற்சாகமான தஞ்சை விவசாயி

நெல் வயலில் சீனிவாசன்
நெல் வயலில் சீனிவாசன்

மாப்பிள்ளை சம்பா நல்ல உயரம் வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது.

பாபநாசம் அருகே விவசாயி ஒருவர், இயற்கை முறையில் பாரம்பர்ய ரகமான மாப்பிள்ளை சம்பாவை நடவு செய்துள்ளார். அவை தற்போது, 7 அடி உயரம் வரை வளர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. `இப்பத்தான் மண்ணும் மனசும் நிறைஞ்சு இருக்கு' என தலைக்கு மேல் வளர்ந்துள்ள பயிரை வாரியணைத்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் அந்த விவசாயி.

 மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா

பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர், சீனிவாசன். இவர், தனது நிலத்தில் ரசாயன உரம் எதையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் பாரம்பர்ய ரகமான மாப்பிள்ளை சம்பாவைப் பயிர் செய்துள்ளார். வயலில் நாற்று நடவு செய்துவிட்டு வந்ததோடு சரி... அதன்பிறகு களை எடுக்கவில்லை, ரசாயன உரம் பயன்படுத்தவில்லை. ஆனால், 7 அடி உயரத்துக்குத் தலைக்குமேல் வளர்ந்துநிற்கின்றன நெற்கதிர்கள்.

``ஒவ்வொரு கதிரிலும் 400-க்கும் மேற்பட்ட நெல்மணிகள். விளைந்திருக்கும் வயலுக்குப் போய் பயிரைப் பார்த்து வாரியணைத்துக்கொண்டால், வீட்டுக்குத் திரும்பவே மனசு வரல. அவ்வளவு ஆனந்தமாக இருக்கு'' என உற்சாகப்படுகிறார் சீனிவாசன்.

சீனிவாசனிடம் பேசினோம். ``எனக்கு மொத்தம் 20 ஏக்கர் நிலம் இருக்கு. நான் எல்லா விவசாயி மாதிரியும் ரசாயன உரம் பயன்படுத்தி, குறுகிய கால நெற்பயிர்களை நாற்று நட்டு அறுவடை செய்துவந்தேன். இதில், மகசூல் குறைவாகத்தான் கிடைக்கும். ஆனால், செலவு எகிறும். உழுதவன் கணக்கு பார்க்கக்கூடாது என்பதால், தொடர்ந்து அதையே செய்து வந்தேன்.

வயலில் சீனிவாசன்
வயலில் சீனிவாசன்

இதற்கிடையில், இயற்கை முறை கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இதில், செலவும் குறைவதுடன் நல்ல லாபமும் கிடைத்துவருகிறது. அதேபோல், நெல் சாகுபடியையும் இயற்கையில் செய்தால் என்னவென்று தோன்றியது.

கடந்த சில ஆண்டுகளாகவே, நெல் சாகுபடியை ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிரிடுவதுகுறித்து நன்கு தெரிந்துகொண்டதால் களத்தில் இறங்கிவிட்டேன்.

முதல் தடவை மொத்த நிலத்திலும் பயிரிட வேண்டாம் என ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் பயிரிட முடிவுசெய்தேன். அதன்படி நண்பர் ஒருவரிடம் பாரம்பர்ய ரகமான மாப்பிள்ளை சம்பா விதைநெல் இரண்டு கிலோ வாங்கி, அதை பாய் நாற்றங்கால் முறையில் விதைத்தேன். பின்னர் அதை வயலில் நடவு செய்தேன். வயலுக்குத் தண்ணீர்விட்டு உழவு ஓட்டியதுடன் சரி. வேறு எதுவும் செய்யவில்லை. அத்துடன், ரசாயன உரமும் பயன்படுத்தவில்லை.

வயலில் சீனிவாசன்
வயலில் சீனிவாசன்

அதன் பின்னர், அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்குச் செல்வேன். ஆரம்பத்திலேயே நல்ல உயரத்தில் பயிர்கள் வளரத் தொடங்கின. அதன்பிறகு, அவ்வப்போது தொடர்ச்சியாக மழை பெய்தது. அதனால் பயிருக்குத் தண்ணீர் இறைக்கும் வேலையும் மிச்சமானது. காற்று மற்றும் தண்ணீரில் உள்ள நைட்ரஜனைக்கொண்டே பயிர்கள் வளர்ந்துவந்தன. நடவு நட்டு 123 நாள்கள் ஆகின்றன. பயிர் 7 அடி உயரம் வரை வளர்ந்து நிற்கிறது. நான் வயலுக்குள் இறங்கினால் என்னைப் பயிர்கள் மறைத்துவிடுகின்றன.

அத்துடன், ஒவ்வொரு கதிருக்கும் 400-க்கும் மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன. மாப்பிள்ளை சம்பா நல்ல உயரம் வளரும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது பெரும் ஆச்சயர்யத்தைத் தருகிறது. எனக்கு 60 வயது ஆகிறது. இதுபோல் உயரமாக பயிர்கள் வளர்ந்து நான் பார்த்ததில்லை. அருகில் உள்ள விவசாயிகள் சிலர், கதிர் உயரமாக வளர்ந்தால் வயலில் சாய்ந்துவிடும். அப்புறம் பத்து பயிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்ட வேண்டும் என்றார்கள். ஆனால், தண்டுப்பகுதி திடமாக இருப்பதால் கதிர்கள் சாயவும் இல்லை.

மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா

வீட்டில் இருந்து வயலுக்கு வந்தால், குழந்தைகளோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. வீட்டுக்குச் செல்லவே மனசு வருவதில்லை. அருகில் உள்ள அனைவரும் வந்து பார்த்துவிட்டு ஆச்சர்யத்துடன் செல்கின்றனர். ரசாயனம் பயன்படுத்தி நடவு செய்தால் விளைச்சல் நன்றாக இருப்பதில்லை. அத்துடன் செலவும் பலமடங்கு ஆகிறது. குறிப்பாக, விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. அத்துடன் ரசாயன உரங்கள் வாங்கி அவற்றைத் தெளிக்கவும், இடையில் களை எடுக்கவும் என நடவு தொடங்கி அறுவடை வரை பெரிய தொகை செலவாகிறது. பாரம்பர்ய ரகத்தை இயற்கை முறையில் பயிரிட்டதால், செலவு பாதியாகக் குறைந்துவிட்டது.

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

செலவைத் தவிர்க்கவே பாரம்பர்ய ரகத்தைப் பயிரிட்டேன். இப்போது, மனசும் மண்ணும் நிறைஞ்சு இருக்கு. குறிப்பாக, எல்லோரும் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்வதற்கே ஆர்வம் காட்டுகிறோம். அந்த அரிசியை உண்பதால், நெற்பயிரைப் போலவே எல்லோருடைய ஆயுளும் குறைகிறது. நம் முன்னோர்கள், நாள்கள் அதிகம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை எனப் பாரம்பர்ய ரகங்களை விளைவித்தனர் அதை உண்டு 100 வயசுக்கு மேல் வாழ்ந்துள்ளனர்.

மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை சம்பா

இதில் கிடைக்கும் வைக்கோல், கால்நடைகளுக்கு நல்ல தீவனமாவதுடன், அவை நல்ல திடமாக இருந்து வளர்ந்து பெருகுகிறது. இத்தனை வருஷம் ரசாயனம் பயன்படுத்தினேன், இந்தமுறை பயன்படுத்தாததால் என் வயலோட மண்ணே பொன்னைப் போல மின்னுது. மண் புழு மற்றும் பூச்சிகள் அதிக அளவில் இருக்கின்றன. வயலைப் பார்க்கவே பசுமையாக இருக்கு. நான் ஒரு முடிவு செய்துவிட்டேன். இனி என்னோட மொத்த நிலத்திலும் பாரம்பர்ய ரகம்தான் பயிர் செய்யப் போகிறேன்.

இந்த நேரத்தில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோடிக்கணக்கில் செலவுசெய்து மானிய விலையில் ரசாயனம் உரம் தருகிறீர்கள். இதைப் பயன்படுத்துவதால் மண்ணும் மக்களும் பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். ரசாயன உரத்திற்குப் பதிலாக, பாரம்பர்ய நெல் விதைகளை ஒவ்வொரு விவசாயிக்கும் கொடுத்தால், அவற்றைப் பயிர் செய்வார்கள்.

வயலில் சீனிவாசன்
வயலில் சீனிவாசன்

இதனால் மண் காக்கப்படுவதோடு, நம்முடைய விவசாயிகளும் பல்வேறு சிக்கல்களில் இருந்து காக்கப்படுவார்கள். அறுவடைக்குப் பிறகு அதை உண்ணும் மக்களும் இந்தப் பயிரைப் போலவே நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள்" என்றார் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு