Published:Updated:

பாரம்பர்ய நெல் ரகத்தில் நல்ல லாபம்! - இடியாப்ப மாவு, சத்து மாவு, உப்புமா அரிசி!

நெல் நடவுப் பணியில் இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
நெல் நடவுப் பணியில் இளங்கோ

மகசூல்

பாரம்பர்ய நெல் ரகத்தில் நல்ல லாபம்! - இடியாப்ப மாவு, சத்து மாவு, உப்புமா அரிசி!

மகசூல்

Published:Updated:
நெல் நடவுப் பணியில் இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
நெல் நடவுப் பணியில் இளங்கோ

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை அப்படியே விற்பனை செய்வதால்தான் வியாபாரிகளையும் இடைத்தரகர்களையும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதிலிருந்து விடுபட, அண்மைக்காலமாக இயற்கை விவசாயிகளில் பலர் உற்பத்தி செய்யும் நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறார்கள். இதன் அடுத்தகட்டமாக சிலர் அரிசியிலிருந்தும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயார் செய்து விற்பனை செய்துவருகிறார்கள்.

மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன்
மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலூகா, சாக்கோட்டை அருகிலுள்ள மலையப்பநல்லூரைச் சேர்ந்த விவசாயி இளங்கோ, பாரம்பர்ய அரிசியை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார். தோட்டத்திலிருந்தவரை ஒரு பகல் பொழுதில் சந்தித்தோம். மழையினால் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இளங்கோ நம்மை வரவேற்றார். “இந்த வருஷம் சம்பாப் பட்டத்துல, ரெண்டு ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சிருக்கேன். தலா அரை ஏக்கர்ல கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கறுப்பு கவுனி நடவு செஞ்சிருக்கேன். நடவு செஞ்சு பத்து நாள்கள்தான் ஆகுது. ஆனா, அதுக்குள்ளயே பயிர் எவ்வளவு செழிப்பா, திடமா வளர்ந்திருக்கு பாருங்க” என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “எங்க தாத்தா விவசாயி. அப்பா ஓவிய ஆசிரியர். நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சிட்டு போட்டோ ஸ்டுடியோவுல வேலை பார்த்துகிட்டே விவசாயத்தையும் கவனிச்சிக்கிட்டேன். எங்களுக்கு ஒரு ஏக்கர் நஞ்சையும், கால் ஏக்கர் புஞ்சையும் இருக்கு. ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். என் மனைவி கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல நர்சா வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ‘ரசாயனம் கலந்த உணவைச் சாப்பிடுறதுனாலதான் மக்களுக்குப் பலவிதமான கொடிய நோய்கள் வர்றதா டாக்டர்கள் சொல்றாங்க’னு அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுக்கிடையில நானும் என் நண்பர்கள் மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். முதல்கட்டமா, சோதனை முயற்சியா நவீன நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். அதுக்குப் பிறகு பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல ஈர்ப்பு அதிகமாச்சு. மூணு வருஷமா பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். என்கிட்ட சொந்தமா மாடுகள் கிடையாது.

பாரம்பர்ய அரிசி வகைகள்
பாரம்பர்ய அரிசி வகைகள்

பக்கத்து ஊர்ல செல்வராஜ் என்ற இயற்கை விவசாயி, உம்பளச்சேரி மாடு வளர்க்கிறார். அவர் சாணமும் கோமியமும் இலவசமாகக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்திதான் இயற்கை இடுபொருள்களைத் தயார் செஞ்சிக்கிறேன். போன வருஷம் சம்பாப் பட்டத்துல தலா அரை ஏக்கர்ல கிச்சிலிச் சம்பாவும் மாப்பிள்ளைச் சம்பாவும் சாகுபடி செஞ்சேன். கிச்சிலிச் சம்பா 11 மூட்டை, மாப்பிள்ளைச் சம்பா 6.5 மூட்டைனு மொத்தம் 17.5 மூட்டை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, மொத்தம் ரெண்டு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா, கறுப்பு கவுனி, கருங்குறுவைப் பயிர் பண்ணியிருக்கேன்” என்றவர் மதிப்புக்கூட்டுதல் மற்றும் விற்பனை அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

நெல் நடவுப் பணியில் இளங்கோ
நெல் நடவுப் பணியில் இளங்கோ

“நான் உற்பத்தி செய்யற நெல் எல்லாத்தையுமே அரிசியா மாத்திடுவேன். வீட்டுத் தேவைக்குப் போக மீதியுள்ளதுல அரிசி, இடியாப்ப மாவு, சத்து மாவு, உப்புமாவுக்கான உடைச்ச அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதனால கூடுதல் லாபம் கிடைக்குது.

மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சோம்னா 62,930 ரூபாய் வருமானம் கிடைக்கும். உற்பத்தி செய்யக்கூடிய அரிசி எல்லாத்தையுமே மதிப்புக்கூட்டி விற்பனை செய்யறதும் சிரமம்.

கிச்சிலிச் சம்பாவை அரிசியா விற்பனை செஞ்சா 70 ரூபாய் விலை கிடைக்கும். இடியாப்பா மாவா மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது 120 ரூபாய் விலை கிடைக்குது. மாவு அரவைக்கூலி 10 ரூபாய் செலவானாலும்கூட, 40 ரூபாய் கூடுதலா கிடைக்குது. மாப்பிள்ளைச் சம்பா அரிசியை அப்படியே விற்பனை செஞ்சா கிலோவுக்கு 90 ரூபாய்தான் விலை கிடைக்கும். சத்து மாவு, கஞ்சி மாவா விற்பனை செஞ்சா கிலோவுக்கு 180 ரூபாய் விலை கிடைக்குது. அதே நேரம் உற்பத்தி செய்யும் அரிசி எல்லாத்தையுமே மதிப்புக்கூட்டி விற்பனை செய்யறதும் சிரமம். அதனாலதான் பலவிதமா விற்பனை செய்யறேன்” என்றவர், தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிச்சிலிச் சம்பா இடியாப்ப மாவு

``போன வருஷம், அரை ஏக்கர்ல கிடைச்ச 11 மூட்டை கிச்சிலிச் சம்பா நெல்லுல ஆறு மூட்டை நெல்லை வீட்டுச் சாப்பாட்டு தேவைக்கு அரைச்சேன். 240 கிலோ அரிசி கிடைச்சது. கிலோவுக்கு 70 ரூபாய் வீதம் இதோட மதிப்பு 16,800 ரூபாய். அஞ்சு மூட்டை நெல்லைப் பச்சை அரிசியா அரைச்சதுல 185 கிலோ அரிசி கிடைச்சது.


பாரம்பர்ய நெல் ரகத்தில் நல்ல லாபம்! - இடியாப்ப மாவு, சத்து மாவு, உப்புமா அரிசி!

இதுல 50 கிலோ உடைஞ்ச அரிசி. அதைத் தண்ணியில கழுவி காயப்போட்டு, உப்புமாவுக்கு ஏத்த மாதிரி, உடைச்சி விற்பனை செஞ்சேன். கிலோவுக்கு 90 ரூபாய் வீதம் 4,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. 135 கிலோ முழு அரிசியில 100 கிலோவை மட்டும் இடியாப்ப மாவாக மாத்தி விற்பனை செஞ்சோம். கிலோவுக்கு 120 ரூபாய் வீதம் 12,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதியுள்ள 35 கிலோ பச்சரிசியை அப்படியே அரிசியாகவே விற்பனை செஞ்சிடுவோம். கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 2,100 ரூபாய் வருமானம் கிடைச்சது. இது தவிர அரைக்கிறப்போ கிடைச்ச 50 கிலோ குருணையை, கிலோ 45 ரூபாய்னு விற்பனை செஞ்சிடுவோம். எங்க வாடிக்கையாளர்களுக்கு இதை வடக மாவாக மாத்தும் முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கோம். அவங்க வடக மாவாகப் பயன்படுத்திக்குவாங்க. குருணை விற்பனை மூலம் 2,250 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் கிச்சிலிச் சம்பாவுல இருந்து மொத்தம் 37,650 ரூபாய் வருமானம் கிடைச்சது.

‘‘அப்படியே விற்பனை செஞ்சா கிலோவுக்கு 90 ரூபாய்தான் விலை கிடைக்கும். சத்து மாவு, கஞ்சி மாவா விற்பனை செஞ்சா கிலோவுக்கு 180 ரூபாய் விலை கிடைக்குது.’’

மாப்பிள்ளைச் சம்பா இடியாப்ப மாவு

ஆறரை மூட்டை மாப்பிள்ளைச் சம்பாவா அரைச்சதுல 217 கிலோ அரிசி கிடைச்சது. இதுல 117 கிலோவை அரிசியாகவே விற்பனை செஞ்சேன். கிலோவுக்கு 90 ரூபாய் வீதம் 10,530 ரூபாய் வருமானம் கிடைச்சது. 50 கிலோ அரிசியைத் தண்ணியில கழுவி காயப்போட்டு, கிலோவுக்கு 25 கிராம் சீரகம், தலா 10 கிராம் வெந்தயம், எள்ளு, அஞ்சு கிராம் மிளகு எடுத்து தனியா பொன் முறுவலாக வறுத்து, அரிசியில கலந்து, சத்து மாவாக விற்பனை செஞ்சேன். இது கஞ்சிக்கு அருமையா இருக்கும்.

கிலோவுக்கு 180 ரூபாய் வீதம் 9,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. 25 கிலோ அரிசியை இடியாப்ப மாவாக விற்பனை செஞ்சதுல கிலோவுக்கு 120 ரூபாய் வீதம் 3,000 ரூபாயும், 25 கிலோ அரிசியை உப்புமாவுக்கான உடைச்ச அரிசியாக விற்பனை செஞ்சதுல கிலோவுக்கு 110 ரூபாய் வீதம் 2,750 ரூபாய் வருமானமும் கிடைச்சது. மாப்பிள்ளைச் சம்பா மூலம் மொத்தம் 25,280 ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஆக மொத்தம் ஒரு ஏக்கர்ல கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செஞ்சு பல கட்டமா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சோம்னா 62,930 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுல சாகுபடிச் செலவு, மதிப்புக்கூட்டும் செலவு எல்லாம் போக, 30,000 ரூபாய் லாபமாகக் கையில மிஞ்சும். பாரம்பர்ய நெல் சாகுபடியில குறைவான மகசூல் கிடைச்சாலும்கூட விவசாயிகள் கவலைப்பட்டு கைவிட வேண்டியதில்லை. உழைப்பும் முயற்சியும் இருந்தால், மதிப்புக்கூட்டி நிறைவான லாபம் பார்க்கலாம்” என்றார் உறுதியான குரலில்.

தொடர்புக்கு, இளங்கோ, செல்போன்: 74188 63113.

அன்னமிளகி நெல்!

மாந்தோப்பில் ஊடுப்பயிராக அன்னமிளகி நெல் சாகுபடி செய்திருக்கிறார் இளங்கோ. அதைப் பற்றிப் பேசியவர், ‘‘போன வருஷம், அன்னமிளகி விதைநெல் நாலு கிலோ கிடைச்சது. கால் ஏக்கர் மாந்தோப்புல சோதனை முயற்சியா, இதை ஊடுப்பயிரா விதைச்சேன். இதுக்கு எந்த ஒரு இடு்பொருளுமே கொடுக்கலை.

ஆனாலும் பயிர் நல்லா செழிப்பா தளதளனு அஞ்சடி உயரம் வளர்ந்து 130 நாள்ல அறுவடைக்கு வந்துச்சு. மூன்றரை மூட்டை நெல் மகசூலாச்சு. அதுல இருந்து 105 கிலோ அரிசி கிடைச்சது. மிகவும் சன்னமா, உருண்டையா, சிவப்பு நிறத்துல இருந்துச்சு. இது உருண்டையா மிளகு மாதிரி இருக்குறதுனாலதான் அன்னமிளகினு அழைக்குறாங்கன்னு நினைக்கிறேன். இதைச் சிலர் ‘அன்னம் அழகி’னு சொல்றாங்க.

இந்த அரிசி அடைமாவு, தோசைக்கு அருமையா இருக்கு. நல்லா வாசனையா, சுவையா இருக்கு. இதைச் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும். ஓய்வுக்கு உகந்தது. இதைக் கஞ்சிவெச்சும் குடிக்கலாம். இதுக்கு விற்பனை வாய்ப்பு குறைவா இருக்குறதுனால இந்த வருஷம் இதைச் சாகுபடி செய்யலை. ஆனா இதைப் பரவலாக்க, மற்ற விவசாயிகளுக்கு விதைநெல் கொடுத்தேன். நண்பர்கள், உறவினர்களுக்கு அரிசி கொடுத்தேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism