Published:Updated:

பாரம்பர்ய நெல் சாகுபடி... விற்பனைக்கு உதவும் வாட்ஸ் அப் குழு!

பாரம்பர்ய நெல்லுடன் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல்லுடன் முருகன்

அனுபவம்

பாரம்பர்ய நெல் சாகுபடி... விற்பனைக்கு உதவும் வாட்ஸ் அப் குழு!

அனுபவம்

Published:Updated:
பாரம்பர்ய நெல்லுடன் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய நெல்லுடன் முருகன்

டித்த பட்டதாரிகள் பலரும் இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகலைப் பொறியியல் பட்டதாரி முருகன். இவர், இயற்கை விவசாயத்தில் பாரம்பர்ய நெல்லை விளைவித்து நல்ல மகசூல் எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கனூர் கிராமம். அதன் அருகில் உள்ள பூதேரி கிராமத்தில் இருக்கும் தன் உறவினர் வீட்டில் அறுவடை செய்து, வெயிலில் காயவைத்த நெல்லைக் கூட்டிக்கொண்டிருந்த முருகனைச் சந்தித்தோம். சிரித்த முகத்தோடு வரவேற்றவர், மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்.

“எனக்குச் சொந்த ஊரு பூதேரிதான். பக்கத்துல இருக்கிற சிங்கனூர்ல... அப்பா, நிலம் வாங்கிப் பயிர் வச்சதால குடும்பத்தோடு அங்கேயே போயிட்டோம். நானும் சிங்கனூர் அரசாங்க பள்ளியிலதான் படிச்சேன். பத்தாவதுல மாவட்ட அளவுல முதல் மார்க் வாங்குனேன். சின்ன வயசுல இருந்தே அப்பா கூட விவசாய வேலைகளைப் பார்ப்பேன். அதனால விவசாயத்து மேல எனக்கு ஈர்ப்பு இருந்துச்சு. வெயில்ல சில சமயம் கஷ்டப்படுறப்ப, ‘நாம நல்லா படிச்சு மேல போகணும்’னு தோணும். அது மட்டுமல்லாம எனக்கு முன்னாடி வரைக்கும் எங்க வீட்டுல யாரும் 10-வது கூடத் தாண்டல. அதனாலயும் படிப்பு மேல ஆர்வம் இருந்துச்சு. அப்படியே எம்.இ (முதுகலைப் பொறியியல்) வரைக்கும் படிச்சு முடிச்சேன். சிங்கப்பூர், இலங்கை, துபாய்னு 10 வருஷம் இன்ஜினீயரா வேலை செஞ்சேன். கொரோனா பரவ ஆரம்பிச்சப்போ வீட்டோடவே வந்துட்டேன்.

பாரம்பர்ய நெல்லுடன் முருகன்
பாரம்பர்ய நெல்லுடன் முருகன்

என்னுடைய நண்பர்கள், உறவினர்கள்னு நிறைய பேர் சின்ன வயசிலேயே சர்க்கரை, புற்றுநோய், இதய நோய்ல பாதிக்கப்பட்டிருந்தாங்க. அப்போதான் எனக்குள்ள நிறைய கேள்விகள் வந்துச்சு. என்ன காரணம்? அப்படின்னு யோசிச்சப்ப, ரசாயன உரத்துல விளைஞ்சதைச் சாப்பிடுறதுதான் பிரச்னைனு புரிஞ்சது. இந்த நோய்க்கெல்லாம் தீர்வுகாண டாக்டர்கிட்ட போனா, ‘சத்தான சாப்பாடு சாப்பிடுங்க’ன்னு பரிந்துரைக்கிறாங்க. ஆனா, அந்த உணவுகூட இந்தக் காலத்துல ரசாயனத்தாலதான் விளையுது. அப்போதுதான், உணவை நாமே இயற்கை முறையில விளைய வச்சு சாப்பிடணும். அது மட்டும்தான் இதுக்கெல்லாம் தீர்வா இருக்கும்னு தோணுச்சு.

எங்கப்பா விவசாயம் பண்ணுற நிலம் இல்லாம... நான், தனியா 92 சென்ட் நிலம் வாங்கி வச்சிருந்தேன். அந்த இடத்துல இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு களத்துல இறங்கிட்டேன். முதன் முதல்ல பொன்னி நெல்ல சாகுபடி செஞ்சேன். சாகுபடிக்கு முன்னாடி, 60 சென்ட் இடத்த மாட்டுச்சாணம் கொட்டி கலச்சு விட்டேன். அதுக்கு அப்புறமா கொஞ்சநாள் கழிச்சு ஏர் ஓட்டித் தக்கப்பூண்டு விதைச்சேன். அது வளர்ந்ததுக்கு அப்புறமா மடக்கி உழவு ஓட்டிட்டு, சேடை ஓட்டி வேப்பம் புண்ணாக்கு வாங்கி வந்து போட்டேன். அதுக்கு அப்புறமாதான் நடவு செஞ்சேன்.

முதல் தடவையிலேயே 12 மூட்டை (75 கிலோ மூட்டை) வரைக்கும் கிடைச்சது. எனக்கு இயற்கை விவசாயத்துமேல நம்பிக்கை அதிகமாச்சு. இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சிக்க, நம்மாழ்வார் ஐயா புத்தகத்தைப் படிப்பேன். யூடியூப்ல வீடியோ பார்ப்பேன். கொஞ்ச நாள்லயே, பசுமை விகடன் மூலமா, பிரிட்டோ ராஜ் அறிமுகம் கிடைச்சது. இயற்கை விவசாயத்தைப் பத்தி அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

ரெண்டாவது தடவை ஆடிப்பட்டமா அதே 60 சென்ட்ல கறுப்புக் கவுனி நடவு பண்ணி, அறுவடை முடிச்சிட்டேன். மழை சேதத்திலும் 10 மூட்டைக்குக் குறையாம மகசூல் கிடைச்சிருக்கு. மழை குறைவா இருந்திருந்தா 15 மூட்டை வரைக்கும் கிடைச்சிருக்கும். இந்த முறையும் நடவுக்கு முன்னாடி... நிலத்துல மாட்டுச்சாண எருவைக் கொட்டி, தக்கப்பூண்டு விதைச்சு மடக்கி ஏர் ஓட்டிட்டேன். இதை வருஷத்துக்கு ஒரு முறை பண்ணாலே போதும்’’ என்றவர் சாகுபடி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நெல்லை காயவைக்கும் பணி
நெல்லை காயவைக்கும் பணி


“ஆடி 15-ம் தேதி நாத்து விட்டேன். வேப்பம் புண்ணாக்கு வாங்கிச் சேடையில போட்டுட்டு அடுத்த 15 நாளுல நடவு இயந்திரத்தை வச்சு நடவு பண்ணிட்டேன். ஏன்னா, எல்லாரும் இப்போ 100 நாள் வேலைக்குப் போயிடுறாங்க. அதனால சரியான நேரத்துக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குறாங்க. ஒவ்வொரு நடவுக்கும் 230 மி.மீ - 300 மி.மீ என்ற இடைவெளியில நடவு பண்ணினேன். நடவு பண்ணியதிலிருந்து சரியா 25-ம் நாள் களை பறிச்சிட்டேன்.

நெல் கதிர் வரும்போது ஒரு தடவையும், கதிர் முத்தும்போது ஒரு தடவையும் மீன் அமிலத்தைத் தரைவழியா கொடுத்தேன். இலைகள் மஞ்சள் நிறமாகத் தெரியும்போது மீன் அமிலத்தைக் கொடுத்தால் அது சரியாகிடும். ரெண்டு மாச பயிரா இருக்கும்போது லேசா பூச்சித் தாக்குதல் இருக்கிற மாதிரி தெரிஞ்சது. உடனே பஞ்சகவ்யாவை தெளிச்சேன். அவ்வளவுதான். வேறு எதுவுமே செய்யல’’ என்றவர் விற்பனை குறித்துப் பேசினார்.

விற்பனைக்கு உதவும்
‘வாட்ஸ் அப்’ குழு

“பயிர் 6 அடிக்கு மேலே வளர்ந்து நின்னுச்சு. இங்க இருக்கிற எல்லாரும் ஆச்சர்யமா வந்து பார்த்துட்டுப் போனாங்க. சமீபத்துல பருவமழை அதிகமா பெய்ததால லேசா பாதிப்பாகிடுச்சு. சுமார் அஞ்சரை மாசத்துல விளைஞ்சுடுச்சு. ஆள் பற்றாக்குறை இருக்கறதால இயந்திரத்தை வச்சே அறுத்துட்டேன். நான் விளைவிச்ச இந்த நெல்லை, என்னோட குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், தெரிஞ்சவங்களுக்கும் மட்டும்தான் பகிர்ந்துக்கிறேன். ஒரு மூட்டை நெல்ல அரிசியா மாத்துனா 40 கிலோ வரைக்கும் கிடைக்கும். அப்படின்னா சராசரியாக 400 கிலோ அரிசி கிடைக்கும். தவிட்டை மாட்டுக்குப் பயன்படுத்திப்போம்.

 நெல்
நெல்

என்னுடைய ‘வாட்ஸ்அப்’ குழுவுல இருக்கிற நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த அரிசியை விக்கிறேன். ஒரு கிலோ அரிசி அதிகபட்சம் 250 ரூபாய் வரையிலும் விற்குது. நான் 200 ரூபாய்னு கொடுக்கப் போறேன். அது மூலமா 80,000 ரூபாய் கிடைக்கும். இதுவரைக்கும் செலவு 21,500 ரூபாய் ஆகியிருக்கும். எல்லாச் செலவும் போக 58,500 ரூபாய் கையில நிக்கும். அடுத்த போகத் துக்குப் பூங்கார் நடவு பண்ணலாம்னு இருக்கேன்’’ என்றவர் நிறைவாக,

“இயற்கை முறையில விளைவிச்ச பொருள் எல்லாமே உடம்புக்கு நல்லது. நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாம ஆரோக்கியமா இருக்கணும்னா இயற்கை விவசாயம் பண்ணனும்” என்றார் மலர்ந்த முகத்துடன்.

தொடர்புக்கு, முருகன்,

செல்போன்: 82202 42545

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism