Published:Updated:

பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் விதை மனுஷி!

பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்

விதைகள்

பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் விதை மனுஷி!

விதைகள்

Published:Updated:
பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்

மிழ் மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கங்கள் போன்ற வற்றை விட்டு விலகி நாம் இன்றைக்கு வெகுதூரம் வந்து விட்டோம். வேகத்தையும் விஞ்ஞானத்தையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த உலகில், விட்டொழிந்த மரபுகளைத் தேடிச் செல்வது அரிதாகவே இருக்கிறது. இப்படியான சூழலில், ‘அழிவின் விளிம்பிலுள்ள மரபு ரக விதைகளை மீட்டெடுத்து பரவலாக்குவதே என் பணி’ என இயங்கி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த விதை மனுஷி பிரியா ராஜ்நாராயணன்.

மரபு ரக விதைகளை மீட்டெடுத்துப் பரவலாக்குவது மட்டுமல்லாமல், மாடித் தோட்டம் அமைப்பது, மாடித்தோட்டம் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துவது, மரபு விதைகளை ஆவணப்படுத்தும் விதமாக யூடியூப் சேனல் நடத்துவது, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து மரபு விதை மற்றும் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது எனப் பன்முகப் பெண்மணியாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் பிரியா ராஜ்நாராயணனை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்.

காணும் இடமெல்லாம் காய்கறிச் செடிகள்

திருப்பூர்- காங்கேயம் சாலையில் நல்லூரில் இருக்கிறது பிரியாவின் வீடு. பிரியா அனுப்பிய செயற்கைக்கோள் வரைபடத்திலிருந்த (கூகுள் மேப் லொகேஷன்) இடத்தில் போய் வண்டியை நிறுத்தியபோது, பிரியாவோடு சேர்ந்து வீட்டின் முகப்பிலிருந்த செடி, கொடி, மலர்கள் எல்லாம் வாஞ்சையாய் நம்மை வரவேற்றன. கார் நிறுத்தப்பட்டிருக்கும் போர்டிகோவிலிருந்து, படிக்கட்டுகள், மேல்மாடம், பக்கவாட்டுச் சுவர்கள், மொட்டை மாடி, வீட்டின் பின்புறம் எனக் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு இடத்திலும் செடிகளும் கொடிகளும் நிறைந்து கிடந்தன. வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அதற்கு இதமாக இஞ்சி டீயை நமக்குக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார் பிரியா ராஜ்நாராயணன்.

பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்
பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்

“திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பக்கத்துல இருக்க பிலாத்து என்கிற கிராமம்தான் என்னோட பூர்வீகம். பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்துல பிறந்தாலும், ‘எங்களை மாதிரி நீ கஷ்டப்படக் கூடாது’ன்னு அம்மா - அப்பா என்னை ‘எம்.பி.ஏ ஃபைனான்ஸ்’ படிக்க வச்சாங்க. திருமணத்துக்குப் பிறகு, கணவரோட திருப்பூருக்கு வந்துட்டேன். என்னோட வீட்டுக்காரர் ‘கார்மென்ட்ஸ் கம்பெனி’யில வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. நானும் மாலை நேரக் கல்லூரிக்குப் போய் ‘அப்பேரல் புரொடக்‌ஷன் & மெர்சன்டைஸிங்’ படிப்பைப் படிச்சிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்’’ என்றவர், தான் மாடித்தோட்ட விவசாயியாக மாறிய சூழலைப் பற்றிப் பேசினார்.

ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம்

‘‘சுவையான கிராமத்துக் காய்கறிகளைச் சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, திருப்பூர்ல கிடைச்ச காய்கறிகள்ல அந்தச் சுவை தென்படல. கீரை வாங்கிச் சமைச்சா அதுல மருந்து வாசம் அடிச்சது. ரசாயன உரங்கள் தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்னு தெரிய வந்தது. அப்போ எனக்குக் குழந்தை பிறந்த நேரம். இந்தக் காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிட்டா நம்ம உடம்பு மட்டுமல்லாம, குழந்தைங்க உடம்பும் கெட்டுப்போயிடும்னு நினைச்சேன். அதுவரைக்கும் வெறுமனே அலங்காரச் செடிகளை மட்டுமே வளர்த்துக்கிட்டு இருந்த நான், என்னோட சமையலறையில் இருந்த புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, மிளகாய் போன்றவற்றைப் பயன்படுத்திச் செடிகளை நட ஆரம்பிச்சேன். 2008-ம் வருஷம் இந்த வீட்டைக் கட்டுனதும், என்னோட வேகம் அதிகமாச்சு’’ என்றபோது வெளியே மழை ஓய்ந்திருந்தது. மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

பாரம்பர்ய விதைகள் சேகரிப்பு

‘‘மொட்டை மாடியில 1,200 சதுர அடியில பிரமாண்டமாக ஒரு மாடித்தோட்டம் போட்டேன். வேலைக்குப் போய்கிட்டே அதுல காற்கறிகள், பழங்கள், கிழங்குகள், மூலிகைச் செடிகள் நட ஆரம்பிச்சேன். இதுக்காக ‘குரோபேக்’ மாதிரி நான் ரொம்பச் செலவு எல்லாம் செய்யல. பழைய இரும்புக் கடையில கிடைச்ச பிளாஸ்டிக் டிரம், பெரிய வாட்டர் கேன்கள் போன்றவற்றைத்தான் பயன்படுத்துனேன். ஒருபோதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்களை நாம விதைக்கக் கூடானுன்னு தெளிவா இருந்தேன். தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள்ல இருந்தும் என்னோட நண்பர்கள், உறவினர்கள் மூலமாக மரபு ரக விதைகளைச் சேகரிச்சு, மாடித்தோட்டத்தில் பயிரிட்டு வளர்த்தேன்.

தேடித்தேடி சேகரித்த விதைகள்

ஒரு குப்பைமேட்டில் எப்படி எந்த உரமும் போடாம ஒரு தக்காளிச் செடி முளைச்சு வருதோ, அப்படித்தான் நாமும் இயற்கை உரங்களையும், மட்கும் குப்பைகளையும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தணும்னு இயற்கை விவசாயம் பக்கமும் என்னோட ஆர்வத்தைச் செலுத்தினேன். அப்படி மரபு ரக விதைகளைப் பயிரிட்டு, இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளைச் சாப்பிட்டபோது அதனுடைய சுவையையும் ஆரோக்கியத்தையும் உணர முடிஞ்சது. உடனே ஒவ்வொரு காய்கறி, பழங்கள் போன்றவற்றில் என்னென்ன மரபு ரகங்கள் இருக்கோ, அதையெல்லாம் தேடித்தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்படிச் சேகரிச்ச விதைகளை என்னோட மாடித்தோட்டத்துல பயிரிட்டுப் பார்த்தேன். எல்லாமே சிறப்பா வளர்ந்து விளைச்சல் கொடுத்துச்சு. உடனே, அந்தப் பாரம்பர்ய ரகங்களோட விதைகளை எடுத்துப் பத்திரமா பாதுகாக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் ஒவ்வொரு செடிகளையும் அதன் ரகங்களைச் சொல்லி நமக்கு அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து பேசியவர்,

‘‘என்னை மாதிரி யார் யாரெல்லாம் மாடித்தோட்டம் மற்றும் மரபு ரகக் காய்கறிகள் மேல ஆர்வமாக இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் என்கிட்ட இருக்க விதைகளை இலவசமாகப் பகிர ஆரம்பிச்சேன். அதேமாதிரி என்னோட மாடித்தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளை வீட்டுத் தேவைக்குப் போக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்றேன். அதுமூலமா கிடைக்கும் சொற்பமான தொகையையும், என்னுடைய மாடித்தோட்டத்துக்காகத்தான் பயன்படுத்துறேன்.

மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்

மாடித்தோட்டம் போக, எங்க வீட்டை ஒட்டி மூன்றரை சென்ட் நிலம் காடு மாதிரி சும்மா கிடந்தது. அந்த இடத்தோட உரிமையாளர்கிட்ட அனுமதி கேட்டு, அந்த இடத்துல வாழை, கொய்யா, கறிவேப்பிலை, அன்னாசி, கீரை வகைகள், காய்கறிகளை நட்டு, அந்த இடத்தையும் ஒரு தோட்டமா மாத்தியிருக்கேன்’’ என்றவர் தன்னிடமுள்ள பாரம்பர்ய ரக விதைகள் பட்டியலைச் சொல்லத் தொடங்கினார்.

24 ரகக் கத்திரிக்காய் விதைகள்

‘‘என்கிட்ட கத்திரியில் மட்டும் வேங்கேரி கத்திரி, வரிகொத்து கத்திரி, கண்ணாடி கத்திரி, நாமக்கல் பொண்ணு கத்திரி, சேலம் முள் கத்திரி, பூனைத்தலை கத்திரி, கொல்லப்பட்டி கத்திரி, செவந்தம்பட்டி கத்திரி, கேரள முள் கத்திரி, வெண்ணெய் முள் கத்திரின்னு 24 வகைகள் இருக்கு.

33 வெண்டை ரகங்கள், 30 ரகக் கீரைகள்

வெண்டையில் கொத்து வெண்டை, காபி வெண்டை, யானை கொம்பன் வெண்டை, மாட்டுக் கொம்பு வெண்டை என 33 வகைகள் இருக்கு. மடிப்புத் தக்காளி, காசி தக்காளி, கறுப்பு செர்ரி தக்காளி, பிளம் தக்காளினு தக்காளியில் 38 ரகங்கள் வச்சிருக்கேன். மேலும், 30 வகையான சுரைக்காய், 13 வகையான பீர்க்கன், 27 வகையான அவரை, 68 வகையான மிளகாய் ரகங்கள், 10-க்கும் மேற்பட்ட பூசணி வகைகள், 30-க்கும் மேற்பட்ட கீரை வகைகள், கொத்தவரங்காய், புடலை, முருங்கை, பாகல், முள்ளங்கி, காலிஃப்ளவர் மற்றும் சுண்டைக்காய் மாதிரியான காய்கறி வகைகள் என்கிட்ட இருக்கு.

காச்சல் கிழங்கு

வெற்றிலை வள்ளிக்கிழங்கு, சேப்பைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, காச்சல் கிழங்கு மாதிரியான கிழங்கு வகைகள் என்கிட்ட இருக்கு. மூலிகைகள்ல தூதுவளை, கற்றாழை, வல்லாரை, பிரண்டை, கற்பூரவள்ளி, திருநீற்றுப் பச்சிலை, ரணகள்ளி, லெமன் கிராஸ், ரம்பை இலை, இன்சுலின் மற்றும் வெற்றிலை இருக்கு. பழங்கள்ல பப்பாளி, பேஷன் ஃப்ரூட், திராட்சை, கொய்யா, வாழை, டிராகன் ஃப்ரூட் வளர்த்துட்டு வர்றேன். இப்படி என்கிட்ட இப்போதைக்கு 500-க்கும் மேற்பட்ட பாரம்பர்யமான மரபு ரக விதைகள் இருக்கு’’ மீண்டும் மழைத்தூறத் தொடங்கியதும், வீட்டுக்குள் வந்து பேச்சைத் தொடர்ந்தார்.

வீட்டுத்தோட்டத்தில்
வீட்டுத்தோட்டத்தில்


3,000 நபர்களுக்கு விதைகள்

‘‘சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் எனக்கு அறிமுகமான சுமார் 3,000 பேருக்கு என்கிட்ட இருந்த மரபு விதைகளை இலவசமாகப் பகிர்ந்துள்ளேன். வெளியூர்ல இருப்பவங்க கேட்குற விதைகளை இலவசமா தபால்ல அனுப்பி வைக்கிறேன்.

இதுவொரு நன்றிக்கடன்

கிட்டத்தட்ட 12 வருஷமா, மரபு ரக விதைகளை மீட்டெடுத்து பரவலாக்குவதையும், இயற்கை வழி மாடித்தோட்டம் அமைப்பதையும் ஓர் இயக்கமாகக் கையில் எடுத்துச் செஞ்சிட்டு வர்றேன். என்னுடைய செயல்பாடுகள் எதற்கும் நான் பணம் வாங்கியது கிடையாது. விதைகளை விற்பனை செய்யக் கூடாது என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிச்சிட்டு வர்றேன். நாங்க எப்போது மருந்து இல்லாமல் காய்கறிகளை விளைவித் துச் சாப்பிடத் தொடங்கினோமோ, அப்ப இருந்து குழந்தைகளுக்கும் எங்களுக்கும் உடல்நலன்ல எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்ல. அதேமாதிரி எல்லோரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடையணும்னு நினைக்கிறேன். என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்குறதுக்கான நன்றிக் கடனாக, இயற்கை என்னை அடுத்தவங்களுக்கும் சேவை செய்யச் சொல்றதா உணர்ந்து இதை நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்’’ என்றவர் மீண்டும் சூடாக ஒரு தேநீர் கொடுத்தார். அவரும் தேநீரை ருசித்துக்கொண்டே, பேச்சைத் தொடர்ந்தார்.

பாரம்பர்ய ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்

‘‘தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டாரத் துக்கும் காய்கறி ரகங்கள் இருந்துச்சு. இன்னிக்கு ஒரு சில ரகங்கள் மட்டுமே தமிழகம் முழுக்கக் கிடைக்கிது. இன்னும் அழியாம அங்கொன்றும் இங்கொன்றுமா இருக்குற மரபு ரகங்களையும் எங்களை மாதிரியான, விதை ஆர்வலர்கள்தான் காப்பாற்றி வெச்சிருக்காங்க. இப்பவும் இந்த மரபு ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்காம விட்டுட்டா, எதிர்காலத்தில நோயுள்ள ஆரோக்கியமற்ற ஒரு சமுதாயம் உருவாகிடும். அதுக்கான ஒரு முன்னெடுப்பாகப் பெண்கள், வீட்டில் சின்ன இடம் இருந்தாலும் அங்க தொட்டியில செடிகள் வெச்சு, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யணும். விவசாயிகளும் நம்முடைய பாரம்பர்ய ரகங்களை விளைவிச்சு சந்தைக் குக் கொண்டு வரணும். அப்போதுதான் நம்முடைய மரபு ரகங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க முடியும்’’ என்றவர் நிறைவாக,

பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்
பாரம்பர்ய விதைகளுடன் பிரியா நாராயணன்


‘‘கொரோனாவால எனக்கு வேலை போயிடுச்சு. இனி முழுக்கத் தோட்டத்துலயே இறங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். 2 ஏக்கர்ல ஒரு விதைப் பண்ணையை அமைக்கணும். அதுதான் என்னோட ஆசை. எந்த மரபு ரக விதைகளைத் தேடி வந்தாலும் அது என்கிட்ட கிடைக்கணும். அதுக்கான முயற்சியில் இறங்கப்போறேன்” என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

பிரியா ராஜநாராயணன்,

செல்போன்: 99430 76601

வலைதளங்கள் மூலம்
பரவும் பாரம்பர்யம்!

சமூக வலைதளங்கள் மூலமாகவும் விதைகளைப் பரப்பும் பிரியா அதைப் பற்றிப் பேசும்போது, ‘‘மரபு ரக விதைகள், மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் பத்தின பதிவுகளை முகநூல் பக்கம் ஆரம்பிச்சு அதுல போட்டுட்டு இருக்கேன். அதேபோல வாட்ஸ்அப்பில் ‘இயற்கை வழி வீட்டுத்தோட்டம்’ என்கிற பெயரில் 12 குரூப் வச்சிருக்கேன். அதுல 2,000 பேருக்கு மேல இருக்காங்க. இந்தக் கொரோனா சமயத்துல நேர்ல போய்ப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாதனால ஆன்லைன் மூலமா மாடித்தோட்டம், மரபு ரக விதைகள் பற்றிப் பேசிட்டு வர்றேன். நம்முடைய மரபு ரக விதைகளை ஆவணப்படுத்த ‘யூடியூபில் சேனல் ஒண்ணு ஆரம்பிச்சு, மரபு ரக விதை ரகங்கள் பற்றிய விளக்கம், பயிரிடும் முறைகுறித்து வீடியோக்களை வெளியிடுறேன்’’ என்றார்.

வருமுன் காப்போம்

மரபு ரக விதைகளை விதைக்கும்போது, பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற வகையில் ஒருசிலவற்றைக் கடைப்பிடிப்பது நல்லது. உதாரணமாகப் புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் மற்றும் காதி சோப் ஆகிய மூன்றையும் கலந்து கரைசலாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் பயிரிலிருந்து இலை முளைத்து வரும்போது தெளித்தால் பூச்சித் தாக்குதல் எதுவும் வராது. அதேபோல பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றைத் தேவையான அளவு எடுத்து அரைத்து மாட்டுச் சிறுநீருடன் 2 நாள் ஊறவைத்து, ஒரு லிட்டருக்கு 25 மி.லி என்ற அளவில் செடியில் இலை மற்றும் தண்டுப் பகுதியில் தெளிக்கலாம். இது பூச்சி விரட்டியாகச் செயல்படுவதோடு, பயிர் வளர்ச்சிக்கும் உதவும். அதேபோல் பாகற்காய் கரைசல், மீன் அமிலம், ஜீவாமிர்தம் போன்றவற்றையும் செடிகளுக்குக் கொடுக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism